×

துணை கலெக்டர், டிஎஸ்பி பதவி குரூப் 1 இறுதி தேர்வு முடிவு வெளியீடு: அதிக இடங்களை கைப்பற்றி மாணவிகள் சாதனை

சென்னை: துணை கலெக்டர், துணை காவல் கண்காணிப்பாளர் பதவியில் காலியாக உள்ள 95 பதவிகளுக்கு நடத்தப்பட்ட குரூப் 1 இறுதி தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டது. தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) துணை கலெக்டர் 18 இடங்கள், துணை காவல் கண்காணிப்பாளர் (டிஎஸ்பி)-26, கூட்டுறவு சங்க துணை பதிவாளர்-13, வணிகவரித்துறை உதவி ஆணையர்-25, ஊரக மேம்பாட்டு உதவி இயக்குனர்-7, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் 3 உள்ளிட்ட குரூப் 1 பதவியில் அடங்கிய 95 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த 2022 ஜூலை 21ம் தேதி வெளியிட்டது. முதல்நிலை தேர்வுக்கு 3 லட்சத்து 22 ஆயிரத்து 414 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களுக்கான முதல்நிலை தேர்வு அதே ஆண்டு நவம்பர் 19ம் தேதி நடந்தது.

இத்தேர்வை 1 லட்சத்து 90 ஆயிரத்து 518 பேர் எழுதினர். முதல் நிலை தேர்வுக்கான ரிசல்ட் கடந்த ஆண்டு ஏப்ரல் 28ம் தேதி வெளியிடப்பட்டது. இதில் 2,162 பேர் முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கான மெயின் தேர்வு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 10 முதல் 13ம் தேதி வரை நடந்தது. இத்தேர்வை 2,113 பேர் எழுதினர். இந்நிலையில் மெயின் தேர்வு ரிசல்ட் கடந்த 7ம் தேதி வெளியிடப்பட்டது. இதில் 198 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கான நேர்முகத் தேர்வு சென்னை பாரிமுனையில் உள்ள டி.என்.பி.எஸ்.சி. தலைமை அலுவலகத்தில் கடந்த 26ம் தேதி முதல் 28ம் தேதி (நேற்று) வரை நடந்தது. நேர்காணல் முடிந்ததை அடுத்து இறுதி தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி நேற்று இரவு வெளியிட்டது. இதில் அதிக அளவிலான இடங்களை பெண்களே கைப்பற்றி, ஆண்களை பின்னடைய செய்துள்ளனர்.

இதுகுறித்து சங்கர் ஐஏஎஸ் அகாடமி நிர்வாக இயக்குனர் வைஷ்ணவி சங்கர் கூறியதாவது: குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியாகி இருக்கிறது. இதில் 95க்கும் மேற்பட்டோர் தேர்ச்சி பெற்றுள்ளனர். குரூப் 1 தேர்வு முடிவுகளில் சங்கர் ஐ.ஏ.எஸ். அகாடமியின் அனைத்து மையங்களிலும் பயிற்சி பெற்ற மாணவர்களில் 45 பேர் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். இது தமிழக அளவிலான மொத்த தேர்ச்சி விகிதத்தில் 47 சதவீதம். இந்த தேர்வில் மாருதிப்பிரியா என்ற மாணவி மாநில அளவில் முதலாவது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார். அதேபோல காந்திரியா, தினு அரவிந்த் ஆகியோர் 2வது மற்றும் 4வது இடங்களை பெற்று அசத்தியுள்ளனர். முதல் 10 இடங்களில் 6 இடங்களை எங்கள் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார். மொத்தத்தில் குரூப் 1 தேர்வில் மாணவிகள் அதிக அளவில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

The post துணை கலெக்டர், டிஎஸ்பி பதவி குரூப் 1 இறுதி தேர்வு முடிவு வெளியீடு: அதிக இடங்களை கைப்பற்றி மாணவிகள் சாதனை appeared first on Dinakaran.

Tags : DSP ,CHENNAI ,Tamil Nadu Public Service Commission ,TNPSC ,DSP Post Group ,
× RELATED பேராசிரியர் பாலசுப்ரமணியன் மறைவு; முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்