×

சாலையோர கடையில் விற்கப்பட்ட பிரிஞ்சியில் இறந்து கிடந்த பூரான் குழந்தைக்கு வாங்கிய தாய் அதிர்ச்சி: உணவு கட்டுப்பாட்டு அதிகாரிகள் விசாரணை

திருவொற்றியூர், மார்ச் 28: திருவொற்றியூர், காலடிப்பேட்டை பகுதியில் பள்ளிக்கு அருகில் சாலையோர கடையில் விற்கப்பட்ட பிரிஞ்சி சாதத்தில் பூரான் இறந்து கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து உணவு கட்டுப்பாட்டு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இன்றைய சமுதாய சூழலில் உணவு மற்றும் அன்றாட பயன்பாட்டு பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக நடுத்தர மற்றும் ஏழை குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கணவன்-மனைவி என இருவரும் வேலைக்குச் சென்றால்தான் தங்கள் குழந்தைகளின் படிப்பு, மருத்துவம் போன்ற தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள முடியும் என்ற நிலை உள்ளது. இவ்வாறு கணவனும், மனைவியும் வேலைக்குச் செல்கின்ற சூழலில் பெரும்பாலான தாய்மார்கள் காலை வேளைகளில் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளுக்கு வீட்டில் சமைக்க முடியாமல் ஓட்டல்களில் உணவுகளை வாங்கி, டிபன் பாக்ஸில் அடைத்து மதிய உணவாக கொடுத்து அனுப்புகின்றனர்.

இவ்வாறு மதிய உணவை ஓட்டல்களில் வாங்கும் தாய்மார்களின் சூழ்நிலையை பயன்படுத்தி ஒரு சிலர் பிரிஞ்சி உணவை சமைத்து வந்து பள்ளிக்கு அருகாமையில் சாலையோரம் வைத்து விற்பனை செய்கின்றனர்.
இதில் விலையும் மலிவாக இருப்பதால் பல தாய்மார்கள் இதை தங்கள் குழந்தைகளுக்கு மதிய உணவாக வாங்கிக் கொடுத்து அனுப்புவது வாடிக்கையாக நடந்து வருகிறது. இந்த சூழலில் திருவொற்றியூர், காலடிப்பேட்டை மார்க்கெட் தெருவில் உள்ள உள்ள ஒரு டிபன் கடையில் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண் தனது குழந்தைக்கு மதிய உணவுக்காக பிரிஞ்சி சாதம் வாங்கி வீட்டுக்கு எடுத்துச் சென்றுள்ளார். பின்னர் அதை டிபன் பாக்ஸில் அடைக்க முயற்சித்தபோது பிரிஞ்சி சாதத்தில் இறந்த பூரான் ஒன்று கிடந்துள்ளது.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பெண், கடைக்காரரிடம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டு பிரிஞ்சி சாதத்தை அவரிடமே கொடுத்துவிட்டுச் சென்றுவிட்டார். இந்த விஷயம் அக்கம்பக்கத்தில் பரவியதையடுத்து அந்த கடையில் பிரிஞ்சி சாதம் வாங்கிய பலரும் அதை திருப்பிக் கொண்டு வந்து கொடுத்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த உணவு கட்டுப்பாடு மற்றும் தர நிர்ணய அலுவலர் செல்வராஜ் தலைமையில் அதிகாரிகள் நேற்று முன்தினம் மாலை சம்பந்தப்பட்ட கடைக்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது கடைக்காரர் உரிமம் பெறாமல் கடை நடத்தியது தெரிய வந்தது. இதையடுத்து, முறையாக கடையை நடத்த வேண்டும் என்று சம்பந்தப்பட்ட கடை உரிமையாளரை எச்சரித்துவிட்டு அதற்கான ஒரு நோட்டீசையும் வழங்கிச் சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post சாலையோர கடையில் விற்கப்பட்ட பிரிஞ்சியில் இறந்து கிடந்த பூரான் குழந்தைக்கு வாங்கிய தாய் அதிர்ச்சி: உணவு கட்டுப்பாட்டு அதிகாரிகள் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Brinjhi ,Thiruvottiyur ,Brinchi ,Kaladippettai ,Control ,
× RELATED சென்னை திருவொற்றியூரில் விசாரணைக்கு...