×

திருவண்ணாமலை மாவட்டத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு 31,019 மாணவர்கள் எழுதினர்: தேர்வு மையத்தில் கலெக்டர் ஆய்வு

திருவண்ணாமலை, மார்ச் 27: திருவண்ணாமலை மாவட்டத்தில், பத்தாம் வகுப்பு தொடங்கியது. அதையொட்டி, தேர்வு மையத்தை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நேரில் ஆய்வு செய்தார். தமிழ்நாடு முழுவதும் 10ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று தமிழ் மொழிப்பாட தேர்வு நடந்தது. வரும் 8ம் தேதி வரை தேர்வு நடைபெற உள்ளது. காலை 10 மணி முதல் 10.10 மணிவரை வினாத்தாளை படித்துப் பார்க்கவும், 10.10 மணி முதல் 10.15 மணிவரை தேர்வு எழுதும் மாணவரின் விபரங்களை சரிபார்க்கவும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து, 10.15 மணி முதல் பகல் 1.15 மணி வரை தேர்வு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில், மொத்தமுள்ள 501 உயர்நிலை, மேல்நிலை மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் படிக்கும் 16,142 மாணவர்கள், 15,199 மாணவிகள் உட்பட ெமாத்தம் 31,341 பேர் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத நுழைவுச் சீட்டு வழங்கப்பட்டது. அதில், 31,019 பேர் நேற்று தேர்வு எழுதினர். அதையொட்டி, 146 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. 322 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை.

மேலும், மாவட்டம் முழுவதும் மொத்தம் 10 இடங்களில் வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு, 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கட்டுக்காப்பு மையங்களில் இருந்து வினாத்தாள்களை கொண்டு செல்லவும், விடைத்தாள்களை கொண்டுவந்து சேர்க்கவும் 36 வழித்தட அலுவலர்கள் நியமிக்கப்பட்டு பாதுகாப்பாக தேர்வு மையங்களுக்கு கொண்டுசெல்லப்பட்டது. தேர்வு மையங்களை கண்காணிக்க, 151 முதன்மைக் கண்காணிப்பாளர்களும், 152 துறை அலுவலர்களும், 2397 அறை கண்காணிப்பாளர்களும் தேர்வுப் பணியில் ஈடுபட்டனர். மேலும், மாற்றுத்திறனாளி மாணவர்கள் சொல்வதை கேட்டு எழுதுவதற்காக 537 பேர் நியமிக்கப்பட்டிருந்தனர், மேலும், பொதுத் தேர்வில் முறைகேடுகள் நடைபெறாமல் தடுக்க, 173 பேர் கொண்ட பறக்கும் படைகள் மற்றும் நிலையான படை உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில், திருவண்ணாமலை மவுண்ட் செயிண்ட் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்தை கலெக்டர் பாஸ்கரபாண்டியன் நேரில் ஆய்வு செய்தார். தேர்வு முறையாக நடைபெறுகிறதா, தேர்வு மையத்தில் தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளதா என கேட்டறிந்தார்.ஆய்வின்போது, முதன்மைக் கல்வி அலுவலர் கணேஷ்மூர்த்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

The post திருவண்ணாமலை மாவட்டத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு 31,019 மாணவர்கள் எழுதினர்: தேர்வு மையத்தில் கலெக்டர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Tiruvannamalai district ,Tiruvannamalai ,Collector ,Bhaskara Pandian ,Tamil Nadu ,Tamil… ,Dinakaran ,
× RELATED கோடைக்கால விளையாட்டு பயிற்சி முகாம் திருவண்ணாமலையில் மாவட்ட அளவிலான