×

திருவண்ணாமலை மற்றும் ஆரணி தொகுதிகளில்19 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்: மனுதாக்கல் இன்றுடன் நிறைவு

திருவண்ணாமலை, மார்ச் 27: மக்களவைத் தேர்தல் வேட்புமனு தாக்கலின் மூன்றாம் நாளான நேற்று திருவண்ணாமலை தொகுதியில் 13 வேட்பாளர்கள், ஆரணி தொகுதியில் 6 வேட்பாளர்கள் உள்பட 19 பேர் மனுதாக்கல் செய்தனர். மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடக்கிறது. அதன்படி, தமிழ்நாட்டில் அடுத்த மாதம் 19ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. அதையொட்டி, வேட்புமனு தாக்கல் கடந்த 20ம் தேதி தொடங்கியது. நாளையுடன் மனுதாக்கல் நிறைவடைகிறது. இந்நிலையில், திருவண்ணாமலை மற்றும் ஆரணி தொகுதிக்கான வேட்புமனுதாக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடக்கிறது. தேர்தல் நடத்தும் அலுவர்களான திருவண்ணாமலை தொகுதிக்கு கலெக்டர் பாஸ்கரபாண்டியன், ஆரணி தொகுதிக்கு டிஆர்ஓ பிரியதர்ஷினி ஆகியோர் வேட்புமனுக்களை பெறுகின்றனர். மேலும், முதன்மை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களிடமும் மனுதாக்கல் செய்யலாம் என்பதால், திருவண்ணாமலை ஆர்டிஓ அலுவலகம், ஆரணி ஆர்டிஓ அலுவங்களிலும் மனுக்கள் பெறப்படுகிறது.

இந்நிலையில், திருவண்ணாமலை தொகுதியில் நேற்று திமுக மாற்று வேட்பாளர் க.புகழேந்தி, பகுஜன் சமாஜ் கட்சி மோகன்ராஜா, மக்கள் நல கட்சி சத்தியமூர்த்தி, அகில இந்திய உழவர்கள் உழைப்பாளர்கள் கட்சி காளஸ்திரி, சுயேட்சைகள் செந்தமிழ்ச்செல்வன், எஸ்.சங்கர், பவுத்த துறவியான தீபம்மாள்சுந்தரி, ஜெகன்நாதன், நல்லசிவம், தங்கராஜ், சிவகுருராஜ், சதீஷ்குமார், ஏழுமலை ஆகிய 13 பேர் மனுதாக்கல் செய்தனர். அதேபோல், ஆரணி தொகுதியில் போட்டியிட நேற்று நாம் தமிழர் கட்சி கே.பாக்கியலட்சுமி, நாம் தமிழர் மாற்று வேட்பாளர் பாரதிசிவசங்கரி, அண்ணா எம்ஜிஆர் திராவிட மக்கள் கழகம் சார்பில் மணவாளன், சுயேட்சகைள் தாமோதரன் ஆகியோர் உட்பட மொத்தம் 6 பேர் மனுதாக்கல் செய்தனர்.

இந்நிைலயில், திருவண்ணாமலை மற்றும் ஆரணி தொகுதியில் நேற்று ஒரே நாளில் 19 பேர் மனுதாக்கல் செய்தனர். வேட்மனு தாக்கல் செய்ய இன்று மாலை 3 மணி வரை மட்டுமே அவகாசம் உள்ளது. தொடர்ந்து, நாளை (28ம் தேதி) வேட்புமனுக்கள் பரிசீலனை நடைபெறும். அதைத்தொடர்ந்து, 30ம் தேதி வரை வேட்புமனுக்களை வாபஸ் பெற அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து, வரும் 30ம் தேதி மாலை 5 மணிக்கு வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கப்பட்டு, இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். ஒவ்வொரு தொகுதியிலும் அதிகபட்சம் 15 வேட்பாளர்கள் போட்டியிட்டால், ஒரு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரமும், 15க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிட்டால் இரண்டு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் பயன்படுத்தும் நிலை ஏற்படும்.

The post திருவண்ணாமலை மற்றும் ஆரணி தொகுதிகளில்19 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்: மனுதாக்கல் இன்றுடன் நிறைவு appeared first on Dinakaran.

Tags : Thiruvannamalai ,Arani ,Lok Sabha ,Tiruvannamalai ,
× RELATED மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்...