×

உரிய ஆவணமின்றி எடுத்து சென்ற ₹1.87 லட்சம் பறிமுதல் நிலை கண்காணிப்பு குழு நடவடிக்கை

வேலூர், மார்ச் 26: வேலூரில் உரிய ஆவணமின்றி எடுத்து சென்ற 2 பேரிடம் ₹1.87 லட்சத்தை நிலையான கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்தனர். வேலூர் மக்களவை தேர்தலையொட்டி ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 3 பறக்கும்படை, 3 நிலையான கண்காணிப்பு குழுவினர் நியமனம் செய்து 24 மணி நேரமும் வாகன சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி வேலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சத்துவாச்சாரி வள்ளலார் பகுதியில் நேற்று நிலைய கண்காணிப்பு குழுவை சேர்ந்த அலுவலர் எழிலரசி தலைமையில் அதிகாரிகள் சோதனை நடத்தி கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த அதே பகுதியைச் சேர்ந்த சேகர் என்பவரிடம் உரிய ஆவணங்கள் இல்லாமல் ₹1 லட்சத்து 20 ஆயிரம் பணம் இருந்தது கண்டுப்பிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த பணத்தை குழுவினர் பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து பணத்தை வேலூர் தாலுகா அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கவிதாவிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், அவர் வங்கியில் பணத்தை டெபாசிட் செய்ய கொண்டு சென்றது தெரியவந்தது. இருப்பினும் ஆவணத்தை கொண்டு வரும்படி கூறி அனுப்பி வைத்தனர். இதேபோல் வேலூர் வேலப்பாடி பகுதியில் நிலையான கண்காணிப்பு குழுவை சேர்ந்த அலுவலர் பாக்கியலட்சுமி தலைமையில் அலுவலர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக பைக்கில் வந்தவரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், பைக் ஷோரூமில் வேலை பார்க்கும் வினோத் என்பதும், அவரிடம் ₹67 ஆயிரத்து 720 ரூபாய் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. பணத்தை பறிமுதல் செய்து உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கவிதாவிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர், பைக் ஷோரூமில் வேலை செய்வதாகவும், பணத்தை கலெக்சன் செய்து கொண்டு சென்றதாகவும் கூறினார். இருப்பினும் முறையான ஆவணம் கொண்டு வரும்படி கூறி அனுப்பி வைத்தனர்.

The post உரிய ஆவணமின்றி எடுத்து சென்ற ₹1.87 லட்சம் பறிமுதல் நிலை கண்காணிப்பு குழு நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Vellore ,Lok Sabha ,
× RELATED மன்சூர் அலிகான் திடீர் ‘அட்மிட்’