×

பல லட்சம் பணம், பரிசு பொருட்கள் பறிமுதல் தொடர்ந்து தகவல் அளிக்க மறுக்கும் தேர்தல் அலுவலர்கள் செய்யாறு தொகுதியில் பறக்கும் படை மூலம்

செய்யாறு, மார்ச் 26: செய்யாறு தொகுதியில் பறக்கும் படையினர் பறிமுதல் செய்யும் பல லட்சம் பணத்தின் மதிப்பை தெரிவிக்க தொடர்ந்து மறுத்து வருகின்றனர். நாடாளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் கடந்த 16ம் தேதி அறிவித்திருந்தது. அன்றிலிருந்து தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்தன. மறுநாள் 17ம் தேதி முதல் பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழுவினர் 24 மணி நேரமும் ரோந்து பணியில் ஈடுபட்டு பணம் மற்றும் பரிசு பொருள்கள் கடத்தி செல்வதை தடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லும் பணம், பரிசு பொருட்களை பறிமுதல் செய்தனர்.

அதன் அடிப்படையில் செய்யாறு தொகுதியில் தேர்தல் தேதி அறிவித்த முதல் மூன்று நாட்கள் பறிமுதல் செய்யப்படும் பொருட்கள் பெறுவதற்கான கண்காணிப்பு அதிகாரி நியமிக்கப்படாமல் இருந்த நிலையில் கடந்த 20ம் தேதி கண்காணிப்பு அதிகாரி நியமிக்கப்பட்டார். அதன் பிறகு ஆங்காங்கே பிடிபடும் பணம் மற்றும் பரிசு பொருட்கள் நியமிக்கப்பட்ட அதிகாரியிடம் பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழுவினர் ஒப்படைத்து வந்தனர். இந்நிலையில், கடந்த மூன்று தினங்களாக பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழுவினர் உரிய ஆவணம் இன்றி பறிமுதல் செய்த பல லட்சம் பணம் செய்யாறு தொகுதிக்கு நியமிக்கப்பட்ட தேர்தல் அலுவலகமான, செய்யாறு தாலுகா அலுவலகத்தில் கண்காணிப்பாளரிடம் ஒப்படைத்து வருகின்றனர். பெறப்பட்ட தொகை சப்-கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கருவூலகத்தில் பத்திரப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், பறிமுதல் செய்யப்படும் பணம் மற்றும் பரிசு பொருட்கள் குறித்து தகவல் அறிய முயலும் போது பத்திரிகை மற்றும் ஊடகத்துறையினருக்கு தேர்தல் அதிகாரிகள் பதில் அளிக்க மறுத்து வருகின்றனர்.

இதேபோல் நேற்று பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழுவினர் வந்தவாசி சாலை மற்றும் காஞ்சிபுரம் சாலையில் தொடர் சோதனை மேற்கொண்டனர். அப்போது பைக்கில் சென்ற பைனான்ஸ் ஊழியரிடம் ₹2 லட்சத்து 65 ஆயிரமும், காரில் சென்ற வியாபாரியிடம் ₹2 லட்சத்து 83 ஆயிரத்து 560 பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. பறிமுதல் செய்யப்படும் என்பதை மக்கள் தெரிந்து கொள்ளவும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பத்திரிகை மற்றும் ஊடகத்துறை முன் வரும்போது அதிகாரிகள் நேற்றும் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை தெரிவிக்க மறுத்து விட்டனர். தமிழகத்தில் மற்ற எல்லா தொகுதிகளிலும் பறிமுதல் செய்யப்படும் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் குறித்து புகைப்படங்கள் மற்றும் வீடியோ ஆதாரங்கள் வெளியிடப்படும் நிலையில் செய்யாறு தொகுதி மட்டும் தெரிவிக்காமல் இருந்து வருகின்றனர். எனவே தேர்தல் ஆணையம் உரிய ஆலோசனைகளை செய்யாறு தொகுதி தேர்தல் அலுவலர்களுக்கு வழங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post பல லட்சம் பணம், பரிசு பொருட்கள் பறிமுதல் தொடர்ந்து தகவல் அளிக்க மறுக்கும் தேர்தல் அலுவலர்கள் செய்யாறு தொகுதியில் பறக்கும் படை மூலம் appeared first on Dinakaran.

Tags : Seyyar ,Election Commission ,Dinakaran ,
× RELATED மதம், சாதி அடிப்படையில் பிரிவினையை...