×

1300 மெட்ரிக் டன் உரம் கொள்முதல் * ரயில் மூலம் கொண்டு வரப்பட்டது * வேளாண் இணை இயக்குநர் தகவல் திருவண்ணாமலை மாவட்டத்துக்கு

திருவண்ணாமலை, மார்ச் 26: திருவண்ணாமலை மாவட்ட விவசாய தேவைக்காக 1300 மெட்ரிக் டன் உரம் ரயில் மூலம் கொண்டுவரப்பட்டு, உர விற்பனை நிலையங்களுக்கு அனுப்பப்பட்டது. இது குறித்து, திருவண்ணாமலை மாவட்ட வேளாண் இணை இயக்குநர் சி.ஹரகுமார் தெரிவித்திருப்பதாவது: திருவண்ணாமலை மாவட்டத்தில், தற்போது பின் சம்பா பருவ சாகுபடி தீவிரமாக நடந்து வருகிறது. பாசன கிணறுகள், ஏரிகள், அணைகளில் உள்ள குறைந்தபட்ச நீர் இருப்பை பயன்படுத்தி, நெல் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். அதையொட்டி, விவசாய தேவைக்கான 603 மெட்ரிக் டன் யூரியா, 250 மெட்ரிக் டன் டிஏபி 47 மெட்ரிக் டன் அமோனியம் பாஸ்பேட் உரம் உள்பட மொத்தம் 1300 மெட்ரிக் டன் உரம் நேற்று தூத்துக்குடியில் இருந்து ரயில் மூலம் திருவண்ணாமலைக்கு கொண்டுவரப்பட்டது. பின்னர், லாரிகள் மூலம் கூட்டுறவு மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களுக்கு லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன. திருவண்ணாமலை மாவட்டத்தின் நடப்பு பயிர் பருவத்துக்கு தேவையான உரங்கள் கையிருப்பில் வைக்கப்பட்டுள்ளது. அதன்படி, யூரியா 12,504 மெட்ரிக் டன், டிஏபி 2041 மெட்ரிக் டன், பொட்டாஷ் 1059 மெட்ரிக் டன், சூப்பர் பாஸ்பேட் 547 மெட்ரிக் டன் மற்றும் காம்ப்ளக்ஸ் 6117 மெட்ரிக் டன் தற்போது தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் உர விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

எனவே, விவசாயிகள் உரவிற்பனை நிலையங்களுக்கு ஆதார் எண்ணுடன் சென்று மண்வள அட்டை பரிந்துரையின்படி, பயிருக்கு தேவையான உரங்களை மட்டும் விற்பனை முனைய கருவி மூலம் ரசீது பெற்று பயன்பெறலாம். மேலும், தனியார் மற்றும் கூட்டுறவு உரவிற்பனை நிலையங்களில், அரசு நிர்ணயித்த விலைக்கு அதிமாக விற்பனை செய்யக்கூடாது. அதோடு, விற்பனை முனையக் கருவி பயன்படுத்தி மட்டுமே உரம் விற்பனை செய்ய வேண்டும். விவசாயிகள் விரும்பாத இதர இடுபொருட்கள் மற்றும் உரங்களை வாங்க கட்டாயப்படுத்தக் கூடாது. மேலும், யூரியா போன்ற உரங்களை விவசாயம் அல்லாத பிற தொழில்களுக்கு பயன்படுத்துதல் உரக்கட்டுப்பாட்டு ஆணை 1985 மற்றும் அத்தியாவசிய பொருட்கள் சட்டம் 1955ன் கீழ் சட்டப்படி குற்றமாகும். எனவே, இது போன்ற விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post 1300 மெட்ரிக் டன் உரம் கொள்முதல் * ரயில் மூலம் கொண்டு வரப்பட்டது * வேளாண் இணை இயக்குநர் தகவல் திருவண்ணாமலை மாவட்டத்துக்கு appeared first on Dinakaran.

Tags : Tiruvannamalai District ,Thiruvannamalai ,Thiruvannamalai district ,Joint Director ,C. Harakumar ,
× RELATED இளம் வாக்காளர்களை செல்போனில் தொடர்பு...