×

வேட்புமனு தாக்கல் நாளை தொடங்குகிறது * திருவண்ணாமலை, ஆரணி தொகுதிகளுக்கு கலெக்டர் அலுவலகத்தில் மனுதாக்கல் * பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு: கூடுதல் கட்டுப்பாடுகள் மக்களவைத் தேர்தல் பணிகள் தீவிரம்

திருவண்ணாமலை, மார்ச் 19: மக்களவைத் தேர்தல் வேட்புமனு தாக்கல் நாளை தொடங்குகிறது. அதன்படி, திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில், திருவண்ணாமலை மற்றும ஆரணி தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் நடைபெற உள்ளது. மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடக்கிறது. அதன்படி, தமிழகத்தில் அடுத்த மாதம் 19ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. அதையொட்டி, வேட்புமனு தாக்கல் நாளை தொடங்கி வரும் 27ம் தேதி வரை நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து, வரும் 28ம் தேதி வேட்புமனு பரிசீலனையும், 30ம் தேதி மாலை 3 மணி வரை மனுக்கள் வாபஸ் பெற அவகாசமும் அளிக்கப்பட்டுள்ளது. 30ம் தேதி மாலை 5 மணிக்கு, வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கப்பட்டு வேட்பாளர் இறுதிப் பட்டியல் வெளியிடப்படும்.

மேலும், வரும் 23ம் தேதி சனிக்கிழமை வங்கிகள் விடுமுறை என்பதாலும், 24ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதாலும் இரண்டு நாட்கள் மனுதாக்கல் இல்லை. 20ம் தேதி முதல் 27ம் தேதிகளுக்கு இடையே மொத்தம் 6 வேலை நாட்களில் மட்டுமே காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்ய முடியும். திருவண்ணாமலை ெதாகுதிக்கான தேர்தல் நடத்தும் அலுவலராக கலெக்டர் பாஸ்கரபாண்டியனும், ஆரணி தொகுதிக்கான தேர்தல் நடத்தும் அலுவலராக டிஆர்ஓ பிரியதர்ஷினியும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், திருவண்ணாமலை மற்றும் ஆரணி மக்களவைத் தொகுதிகளுக்கு உட்பட்ட 12 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தலா ஒரு உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வேட்புமனு தாக்கலின்போது அளிக்க தவறிய ஆவணங்களை, பரிசீலனையின்போது அளிக்கலாம். வேட்பாளர் தெரிவிக்கும் சொத்து விபரங்கள் உள்ளிட்ட தகவல்கள் அனைத்தும், பொதுமக்களின் பார்வைக்காக தகவல் பலகையிலும், தேர்தல் ஆணைய இணைய தளத்திலும் வெளியிடப்படும். ஆட்சேபனை இருந்தால், பரிசீலனையின்போது தெரிவிக்கலாம். இந்நிலையில், திருவண்ணாமலை மக்களவைத் தொகுதிக்கான வேட்புமனுக்களை திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரான கலெக்டர் பாஸ்கரபாண்டியனிடம் அளிக்கலாம். அதேபோல், ஆரணி தொகுதிக்கான வேட்புமனுக்களை, கலெக்டர் அலுவலகத்தின் முதல் தளத்தில் உள்ள டிஆர்ஓ அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரியான டிஆர்ஓ பிரியதர்ஷினியிடம் அளிக்கலாம். அதேபோல், முதன்மை உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடமும் வேட்புமனுக்களை அளிக்க தேர்தல் ஆணையம் வாய்ப்பு அளித்திருக்கிறது.

அதன்படி, திருவண்ணாமலை தொகுதிக்கு திருவண்ணாமலை ஆர்டிஓ அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மந்தாகினியிடமும், ஆரணி தொகுதிக்கு ஆரணி ஆர்டிஓ அலுவலகத்தில் ஆர்டிஓ பாலசுப்பிரமணியனிடமும் அளிக்கலாம். அதையொட்டி, திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் இரண்டு தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் நடைபெறுவதால், பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வேட்பாளர் மற்றும் அவருடன் 4 நபர்கள் மட்டுமே மனுதாக்கல் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். மேலும், கலெக்டர் அலுவலகத்தின் நுழைவு வாயிலில் இருந்து, 100 அடி தூரத்தில் வாகனங்கள் நிறுத்த வேண்டும். வேட்பாளருடன் 3 வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும். ஊர்வலமாக செல்லவும், பட்டாசு வெடிக்கவும் அனுமதியில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post வேட்புமனு தாக்கல் நாளை தொடங்குகிறது * திருவண்ணாமலை, ஆரணி தொகுதிகளுக்கு கலெக்டர் அலுவலகத்தில் மனுதாக்கல் * பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு: கூடுதல் கட்டுப்பாடுகள் மக்களவைத் தேர்தல் பணிகள் தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Tiruvannamalai, Arani ,Lok ,Sabha ,Thiruvannamalai ,Lok Sabha ,Arani ,Thiruvannamalai Collector ,Tamil Nadu ,Collector ,Dinakaran ,
× RELATED மக்களவைத் தேர்தல்: உண்மையான...