×

அக்னி கலசத்தை மீண்டும் நிறுவிய பாமகவினர் போலீஸ் குவிப்பால் பரபரப்பு திருவண்ணாமலையில் இருந்து ஊர்வலமாக சென்று

கலசப்பாக்கம், மார்ச் 15: திருவண்ணாமலையில் இருந்து நாயுடுமங்கலம் கூட்ரோடு வரை பாமகவினர் ஊர்வலமாக சென்று அக்னி கலசத்தை மீண்டும் நிறுவிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அடுத்த நாயுடுமங்கலம் கூட்ரோடு பகுதியில் 1989ம் ஆண்டு வன்னியர் சங்கம் சார்பில் நிறுவப்பட்ட அக்னி கலசத்தை பாமக நிறுவனர் ராமதாஸ் திறந்து வைத்தார். தொடர்ந்து, கடந்த 2021ம் ஆண்டு சாலை அகலப்படுத்தும் பணிக்காக இந்த அக்னி கலசம் அகற்றப்பட்டது. இதை கண்டித்து பாமக சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடந்தது.

இந்நிலையில், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாமக செயலாளர் பக்தவச்சலம் தலைமையில் 20க்கும் மேற்பட்டோர் கடந்த 9ம் தேதி நள்ளிரவில் நாயுடுமங்கலம் கூட்ரோடு பகுதியில் எவ்வித அனுமதியும் பெறாமல் அக்னி கலசத்தை நிறுவியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, கலசப்பாக்கம் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் அனுமதியின்றி வைக்கப்பட்ட அக்னி கலசத்தை அப்புறப்படுத்தி தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். மேலும், போலீசார் வழக்கு பதிவு செய்து திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாமக செயலாளர் பக்தவச்சலம்(50) உட்பட 15 பேரை கைது செய்தனர். பின்னர், அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

இந்நிலையில், வன்னியர் சங்க மாநில தலைவர் அருள்மொழி தலைமையில் மாவட்ட செயலாளர் பக்தவச்சலம் முன்னிலையில் பாமகவினர் திருவண்ணாமலையில் இருந்து நாயுடுமங்கலத்திற்கு நேற்று ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து, நாயுடுமங்கலம் கூட்ரோடு பகுதியில் மீண்டும் அக்னி கலசத்தை நிறுவினர். இந்நிகழ்ச்சியில் முன்னாள் ஒன்றிய அமைச்சர் என்.டி.சண்முகம், மாநில துணைப் பொதுச்செயலாளர் காளிதாஸ், மாநில கொள்கை பரப்பு செயலாளர் செல்வகுமார், எம்எல்ஏ சிவக்குமார், மாவட்ட செயலாளர்கள் வேலாயுதம், பாண்டியன், முன்னாள் எம்எல்ஏ கணேஷ்குமார், மாவட்ட தலைவர் பரமசிவம் மற்றும் மாவட்ட, ஒன்றிய பாமக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ஊர்வலத்தையொட்டி முன்னதாக போக்குவரத்து வழித்தடங்கள் மாற்றி விடப்பட்டன. மேலும் 2 எஸ்பிக்கள், 2 ஏடிஎஸ்பிக்கள், 2 டிஎஸ்பிக்கள் உட்பட 200க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

The post அக்னி கலசத்தை மீண்டும் நிறுவிய பாமகவினர் போலீஸ் குவிப்பால் பரபரப்பு திருவண்ணாமலையில் இருந்து ஊர்வலமாக சென்று appeared first on Dinakaran.

Tags : Bamakavins ,Agni Kalasam ,Tiruvannamalai ,Kalasapakkam ,Thiruvannamalai ,Naidumangalam Kootrodu ,Thiruvannamalai District ,Kalasappakkam ,Vanniyar Sangam ,
× RELATED சித்ரா பவுர்ணமியையொட்டி பக்தர்களின்...