×

தடைகளை கடந்து பல்வேறு துறைகளில் அசத்தல்: மகளிர் இன்றி அமையாது உலகு

அவளின்றி அணுவும் அசையாது, இது பெண்களை குறிக்கும் சொல். அப்படிப்பட்ட பெண், தாயாக, தாரமாக, மகளாக என பல்வேறு பரிணாமங்களை கொண்டுள்ளார். வீட்டில் ஒரு பெண் இல்லை என்றால் அந்த வீடு எப்படி இருக்கும் என்பதை நினைத்துக் கூட பார்க்க முடியாது. அந்த அளவிற்கு பெண்களின் துணை இல்லாமல் ஆண்களால் வாழ முடியாது என்ற சூழ்நிலை உள்ளது. அப்படியே சிலர் வாழ்ந்தாலும் அந்த வாழ்க்கை ஒரு முழுமை அடையாத வாழ்க்கையாக தான் இருக்கும்.

சிலர் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்க்கையில் சாதித்தேன் என கூறுவார்கள், ஆனால் அவர்களுக்கு பின்னால் தாயோ அல்லது வேறு ஏதாவது ஒரு ரூபத்தில் கண்டிப்பாக பெண் ஒருவர் இருப்பார் என்பதே உண்மை. எனவே, சமூகத்தில் முக்கிய பங்காற்றும் பெண்களை போற்றும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8ம் தேதி (இன்று) சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு நாட்டிலும் பெண்களுக்கான வரையறைகள் மாற்றி எழுதப்பட்டுள்ளன. அந்த நாட்டின் கலாச்சாரம், கல்வி அறிவு, முந்தைய காலகட்ட வரலாறுகள் இவற்றை ஒப்பிட்டு பார்க்கும்போது பெண்களின் முன்னேற்றம் வளர்ச்சி இவை அனைத்தும் மாறுபட்டு இருக்கும்.

உதாரணத்திற்கு இந்தியாவிலேயே தென் இந்தியாவில் பெண்கள் படிப்பறிவில் சிறந்து வேலை வாய்ப்புகளில் சிறந்து நிற்கின்றனர். ஆனால், வடமாநிலங்களில் இன்றளவும் பெண்களின் கல்வி கேள்விக்குறியாகவே உள்ளது. இன்னும் சில இஸ்லாமிய நாடுகளில் பெண்களுக்கான கல்வி மறுக்கப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட வகுப்பிற்கு மேல் அவர்கள் படிக்கக் கூடாது என கூறுகிறார்கள். பல்வேறு துறைகளில் முக்கிய பதவிகளில் பெண்கள் சாதனை செய்து வருவதுடன், குடியரசு தலைவராக, பிரதமராக, முதல்வராக, அமைச்சராக அவர்கள் அமர்ந்த போதும், ஏதோ ஒரு விதத்தில் இந்தியாவில் இன்றுகூட சில இடங்களில் பெண்களின் கல்விக்கும், முன்னேற்றத்திற்கும் சில தடைகள் இருந்து கொண்டு தான் உள்ளன.

அவற்றையொல்லாம் தாண்டி பெண்கள் தொடர்ந்து சாதனைகளை புரிந்து, சரித்திரம் படைத்து வருகின்றனர். மார்ச் 8ம் தேதி சர்வதேச பெண்கள் தினம் எப்படி வந்தது என்பதை சற்று பின்னோக்கி பார்த்தால், கடந்த 18ம் நூற்றாண்டில் பெண்கள் என்றால் வீட்டு வேலைகளுக்கு மட்டுமே என அவர்களை முடக்கி வைத்திருந்தனர். இந்த நிலை சற்று மாறி 1850களில் சில அலுவலங்களில் பெண்கள் கால் பதிக்க தொடங்கினர். அப்போது அவர்களுக்கு ஊதியத்தில் மிகப்பெரிய முரண்பாடு காணப்பட்டது.

ஆண்களுக்கு நிகராக வேலை செய்தாலும், ஆண்களுக்கு அதிக ஊதியமும், பெண்களுக்கு குறைவான ஊதியமும் வழங்கப்பட்டது. அப்போது சமூக வலைதளங்கள் உள்ளிட்ட எந்த ஒரு செய்தி பரிமாற்றங்களும் இல்லாத காலகட்டம். அப்போது, பெண்கள் அனைவரும் கைகோர்த்து தங்களது ஊதியத்திற்காக போராடத் தொடங்கினர். அப்போது ஜெர்மனியை சேர்ந்த புரட்சி பெண் கிளாரா ஜெட்கின் என்பவர், பெண்களின் உரிமைக்காக பெண்களை ஒருங்கிணைத்து தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார்.

அப்போது அவர் பெண்களின் உரிமைக்காக பேச உலகம் முழுவதும் ஒரு குறிப்பிட்ட நாளை பெண்கள் தினமாக கடைபிடிக்க வேண்டும் என்று கருதினார். அது குறித்து தீர்மானத்தை நிறைவேற்ற முயற்சி செய்தார். ஆனால் பல்வேறு காரணங்களால் அந்த தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை. அடுத்தடுத்த ஆண்டுகளில் ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு தினத்தில் தங்களுக்கு ஏற்றார்போல் மகளிர் தினத்தை கொண்டாடி வந்தனர். அதற்குப் பின்னர் 1917ல் ரஷ்யாவில் பெண் தொழிலாளர்கள் முன்னெடுத்த புரட்சியின் காரணமாக பல்வேறு சீர்திருத்தங்கள் ஏற்பட்டன.

இந்த புரட்சியின் தாக்கத்தால் அப்போதைய ரஷ்ய மன்னர் ஜாரின் ஆட்சி கவிழ்ந்தது என வரலாறு கூறுகிறது. 1920ம் ஆண்டு சோவியத் ரஷ்யாவில் செயின்ட் பீட்டர்ஸ் நகரில் நடந்த பெண்களின் போராட்டத்தில் ரஷ்யாவை சேர்ந்த அலெக்ஸாண்டரா கேலன்ரா கலந்து கொண்டார். இந்த ரஷ்ய தொழிலாளர்களின் புரட்சியை நினைவு கூறும் வகையில், ஆண்டுதோறும் மார்ச் 8ம் தேதி மகளிர் தினம் கொண்டாட வேண்டும் என்று பிரகடனம் செய்யப்பட்டது. அந்த ஆண்டு முதல் உலகம் முழுவதும் மார்ச் 8ம் தேதி உலக மகளிர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு நாடுகளிலும் ஒவ்வொரு விதமாக சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடி வருகின்றனர். அந்த ஒரு நாள் மட்டும் அல்லாமல் மகளிர் தினத்திற்கு முந்தைய பிந்தைய என 10 நாட்கள் வரை அதற்கான விழாக்களை தயார் செய்து கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் தமிழகத்திலும் பல்வேறு கல்லூரிகள், பள்ளிகள், அலுவலகங்கள் என மகளிர் தினத்தை விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.  மகளிர் தினம் குறித்து தீயணைப்பு துறையில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி, இணை இயக்குனராக இருந்து, தற்போது செங்கல்பட்டு மாவட்டத்தில் சப் கலெக்டர் பயிற்சி பெறும் பிரியா ரவிச்சந்திரன் கூறியதாவது:

நான் 2001ம் ஆண்டு தீயணைப்பு துறையில் மாவட்ட அலுவலராக துறையில் சேர்ந்து, அதன் பிறகு படிப்படியாக முன்னேறி இணை இயக்குனராக பணியாற்றி வந்தேன். தற்போது செங்கல்பட்டில் சப் கலெக்டர் பயிற்சிக்காக வந்துள்ளேன். தற்போது பெண்கள் அனைத்து துறைகளிலும் வந்து விட்டார்கள். கடினமான துறைகளில் கூட பெண்கள் வேலை செய்ய தொடங்கி விட்டனர். பெண்களால் முடியாதது என்று எதுவுமே கிடையாது.  தற்போது பெண்களுக்கு நிறைய கல்வி வாய்ப்புகள் மற்றும் பல்வேறு துறைகளில் நிறைய வாய்ப்புகள் வருகின்றன.

அதனை பெண்கள் உரிய முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ஆனால் சில பெண்களுக்கு நம்மால் முடியுமா, முடியாதா என்று ஒரு சந்தேகம் எப்போதும் இருந்து கொண்டே உள்ளது. ஏனென்றால் ஒரு காலகட்டத்தில் பெண்கள் என்றால் வீட்டில் தான் இருக்க வேண்டும், இந்த குறிப்பிட்ட வேலைகளை தான் செய்ய வேண்டும் என்ற ஒரு மனப்பக்குவத்தில் நம்மை வைத்திருந்தார்கள். இதனால் அவர்கள் சாதிப்பதில் கால தாமதம் ஏற்படுகிறது. தற்போது வேலைவாய்ப்பில் பெண்களுக்கு நிறைய இடங்களை ஒதுக்க நிறுவனங்கள் முன்வந்துள்ளன.

பெண்களுக்கு எந்த வேலையில் அதிக ஆர்வம் கொண்டுள்ளார்களோ, அந்த வேலையை தேர்ந்தெடுத்து அவர்கள் அதில் தனித்தன்மையுடன் செயல்பட்டால் ஒவ்வொரு துறையிலும் அவர்கள் சாதிக்கலாம். தற்போதுள்ள சூழ்நிலையில் நிறைய பெண்களுக்கு குடும்பத்தில் உள்ளவர்கள் நல்ல வழிகாட்டியாக உள்ளார்கள். மேலும் வேலைவாய்ப்பில் நாம் ஒரு இடத்திற்கு முன்னேறி செல்லும் போது மற்றொரு பெண்ணையும் கைத்தூக்கிவிட வேண்டும். அப்போதுதான் பெண்களின் சமுதாயம் மேன்மை அடையும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கேரளாவை பூர்விகமாக கொண்டு கடந்த 25 வருடங்களாக சென்னை பெரம்பூரில் ஆட்டோ ஒட்டி வரும் ராஜி (51) என்ற பெண் ஆட்டோ ஓட்டுனர் கூறியதாவது: ‘25 வருடத்திற்கு முன்பு இருந்த நிலையில் தற்போது பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. அப்போது, நான் ஆட்டோ ஓட்டும்போது ஆச்சரியமாக பார்த்த பெண்கள், தற்போது அவ்வாறு பார்ப்பது கிடையாது. இன்று பெண்கள் இல்லாத துறையே இல்லை என கூறலாம். ஆனால் பெண்களில் இன்னும் பலர் தங்களது பலம் தெரியாமலேயே உள்ளனர்.

பெண்கள் படித்து முடித்தவுடன் கண்டிப்பாக வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். வேலை கிடைக்கவில்லை என்றால் விரக்தி அடையாமல் சுய வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இன்னும் பல துறைகளில் பெண்கள் பங்களிப்பை செலுத்த வேண்டியுள்ளது. அதை நோக்கி நாம் செல்ல வேண்டும். படிக்காத பெண்களும் சுயமாக தொழில் செய்து சாதித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். எனவே பெண்கள் நாங்கள் படிக்கவில்லை என நினைத்து அதை ஒரு தடையாக கருதக்கூடாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சிக்கலான அறுவை சிகிச்சைகள் மற்றும் பல்வேறு அறுவை சிகிச்சைகளை திறம்பட மேற்கொண்ட ஆர்எஸ்ஆர்எம் அரசு மருத்துவமனையின் பேராசிரியர் ராஜலட்சுமி கூறியதாவது: ‘நான் கடந்த 25 ஆண்டுகளாக மகப்பேறு மருத்துவராக பணியாற்றி வருகிறேன். பெண்கள் அவர்களுடைய உடலை முதலில் நல்ல முறையில் பார்த்துக் கொள்ள வேண்டும். பெண்களை பொறுத்தவரை உடல் அளவில் பல்வேறு பிரச்னைகள் வந்தாலும் மருத்துவ உதவிகள் மூலம் மருத்துவர்கள் உதவி செய்து அவர்களை மீண்டும் நல்ல நிலைக்கு கொண்டு வந்து விடுகின்றனர்.

ஆனால் பெண்களின் மனநிலை என்பதை அவர்கள் தான் பார்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக மகப்பேறு சிகிச்சைக்கு வரும் பெண்களுக்கு அரசு பல்வேறு சலுகைகளை அறிவித்து உதவிகளை செய்து வருகிறது. இன்றைய பெண்கள் படிப்பு, செல்போன் மட்டும் நின்றுவிடாமல் வெளியில் என்ன நடக்கிறது என்பதையும் உற்று நோக்க வேண்டும். அரசியல் மற்ற செய்திகள் உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். பெரும்பாலான பெண்கள் குடும்பத்தில் உள்ள குழந்தைகள் மற்றும் கணவரின் உடல் நலத்தில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வார்கள். ஆனால் அவர்களது உடல் நலத்தை அதிகம் பார்த்துக் கொள்ள மாட்டார்கள். இந்த நிலை மாற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

* மன உறுதி
மனதளவில் பெண்களை அவர்கள் தான் பக்குவப்படுத்திக்கொள்ள வேண்டும். பெண்களை சிறுவயதில் இருந்து வளர்க்கும் போதே, அவர்களுக்கு மன உறுதி மற்றும் சூழ்நிலைகளை எவ்வாறு சமாளிக்க வேண்டும் என்பதை கற்றுத் தந்து வளர்க்க வேண்டும். அதேபோன்று வெளியிடங்களுக்கு சென்று பழகும் போது எவ்வாறு பழக வேண்டும், பள்ளிகளில் உடல் மற்றும் மனநலம் சம்பந்தப்பட்ட பயிற்சிகளை அளிக்க வேண்டும்.

* 3 விஷயங்களில் கவனம்
பெண்கள் அவர்களது உடல் நிலையை நன்றாக வைத்துக் கொண்டால் தான் தங்களது குடும்பத்தையும் நல்ல முறையில் வழிநடத்த முடியும். பெண்கள் உடல் நலம், மனநலம், நிதி நிலை ஆகியவற்றை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். இந்த 3 விஷயங்களையும் பெண்கள் கவனம் செலுத்தி வந்தால் அவர்களது குடும்பம் மற்றும் சமூகம் நல்ல முறையில் இருக்கும். அதே போன்று பெண்கள் யாரையும் சார்ந்து இருக்கக் கூடாது சுயமாக சிந்தித்து செயல்பட வேண்டும்.

* சவால்கள்
பெண்கள் வேலை செய்யும் இடத்தில் பல்வேறு சவால்கள் வந்து கொண்டு தான் இருக்கும். ஆனால் அதை சமாளித்து சென்று சாதிக்க வேண்டும். பெண்களின் கல்விக்காக அரசாங்கமும் பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. குறிப்பாக தற்போது தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள புதுமைப்பெண் திட்டம் போன்ற திட்டங்கள் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இவற்றையெல்லாம் பெண்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

The post தடைகளை கடந்து பல்வேறு துறைகளில் அசத்தல்: மகளிர் இன்றி அமையாது உலகு appeared first on Dinakaran.

Tags :
× RELATED நரம்பு மண்டலங்களை பாதிக்கும் ஸ்மோக்...