×

உலகமகளிர் தினம் அகிலத்தில் அசத்தும் புதுமைப்பெண்கள்: அடுக்களையில் கிடந்தது அன்று… அறிவின் சிகரம் தொடுவது இன்று…

உலகில் எத்தனையோ தினங்கள் வந்து செல்கின்றன. ஆனால், மகளிர் தினத்துக்கு பின்னால் பெண் குலத்தின் பெரிய போராட்டங்கள் ஒளிந்திருக்கின்றன. காலத்தால் அழியாக, பெண் இனத்தை தட்டி வைக்க ஒரு போராட்டம் நிகழ்ந்தது. எங்கே இந்தியாவிலா என்கிறீர்களா? அமெரிக்கா என்றால் நம்ப முடிகிறதா? நம்பித்தான் ஆக வேண்டும். கிபி 18ம் நூற்றாண்டில் அமெரிக்க அலுவலகங்கள், தொழிற்சாலைகளில் திரும்பிய இடமெல்லாம் ஒரே ஆண் தொழிலாளர்களே இடம் பெற்றிருந்தனர். பெண்களுக்கு அங்கு இடமும் இல்லை. ஒதுக்கீடும் கிடையாது.

‘நாங்க வேலைக்கு போறோம்… பேசாம வீட்ல ருசியாக சமைச்சு வைக்க வேண்டும்… பாத்திரம் கழுவ வேண்டும், துணி துவைக்க வேண்டும்.. படிப்பு, வேலைக்கு போறேன் என்றெல்லாம் பேசக்கூடாது.. என ஆணாதிக்க மனோபாவம் கொடி கட்டி பறந்தது. இதனை கண்டித்து பெண்கள் ஆங்காங்கே கண்டன குரல்கள் எழுப்பினர். இதன் விளைவாக 1857ல் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் பெண்களுக்கும் பணியாற்ற வாய்ப்பு தரப்பட்டது.

என்ன கோபமோ தெரியவில்லை. வேலை வழங்கியதோடு அவர்களுக்கான வேலையையும் அதிகம் கொடுத்தார்கள். ஊதியமோ ஆண்களை விட மிகவும் குறைவு. ‘இவங்க என்னப்பா இப்படி வேலை வாங்குறாங்க… ஆனால், சம்பளத்தை கம்மியா தர்றாங்க…’ என கொதித்த பெண்கள், 1857ம் தேதி போராட்டத்தில் குதித்தனர். அதிகார வர்க்கம் அமைதி காக்குமா என்ன? போராட்டத்தை சமாதான பேச்சு, வேலை காலியாயிடும் என மிரட்டி பணிய வைத்தது. போராட்டம் ஆட்டம் கண்டது.

வேலைக்குரிய ஊதியம் கிடைக்காமல், வேலை பார்த்து என்ன பயன் என எண்ணிய பெண்கள், 1907ல் ஆண்களுக்கு நிகரான ஊதியம், சமத்துவம் கேட்டு போராடத் தொடங்கினர். இதனைத்தொடர்ந்து ஒவ்வொரு நாட்டிலும் மகளிர் அமைப்பு உருவானது. இந்த அமைப்புகள் ஒன்றிணைந்து தங்கள் வலிமையை நிரூபிக்க 1910ல் டென்மார்க்கில் பெண்கள் உரிமை மாநாட்டை நடத்தின. 1920ல் நடந்த மகளிர் மாநாட்டில், முதன்முதலில் பெண்கள் உரிமைக்கான போராட்டம் துவங்கிய மார்ச் 8ம் தேதியை, ஆண்டுதோறும் மகளிர் தினமாக கொண்டாட வேண்டுமென்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்தே 1921ம் ஆண்டு முதல் மார்ச் 8ம் தேதி மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. பின்னர் ஐநா சபை 1975ம் ஆண்டை சர்வதேச மகளிர் ஆண்டாகவும்ம் தேதி சர்வதேச மகளிர் தினமாகவும் அறிவித்தது. அன்றிலிருந்து உலகம் தழுவிய மகளிர் தினம் மார்ச் 8ம் தேதியென பிரகடனப்படுத்தப்பட்டது. இந்த நாளில் பல நாடுகள் விடுமுறைகளையும் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அன்று முதல் இன்று வரை பெண்கள் தங்களது உரிமைக்காக போராட்டத்தினை சந்தித்து முன்னுக்கு வந்து கொண்டிருக்கிறார்கள்.

ஆண்களுக்கு நிகரான செயல்களை செய்து அசத்தி வருகின்றனர். தொழுநோயாளிகளுக்காக சேவையாற்றிய அன்னை தெரசா, புற்றுநோய்க்கான கதிரியக்க சிகிச்சை முறையை கண்டறிந்த மேரி கியூரி, முதல் கம்ப்யூட்டர் புரோகிராமரான அடா லவ்லேஸ், நிறவெறிக்கு எதிராக போராடிய ரோசா பார்க்ஸ், ராணுவ செவிலியராக பணியாற்றிய ப்ளோரன்ஸ் நைட்டிங்கேல், உலகின் இரும்பு பெண்மணி எனப்பட்ட பிரிட்டனின் முதல் பெண் பிரதமர் மார்கிரெட் தாட்சர்,

உலகம் போற்றும் விண்வெளி வீராங்கனையாக திகழ்ந்த கல்பனா சாவ்லா, நம் நாட்டின் முதல் பெண் பிரதமரான இந்திரா காந்தி, விளையாட்டில் சாதித்த பி.டி.உஷா, அஞ்சு ஜார்ஜ், மேரி கோம், சானியா மிர்சா, சாய்னா, சிந்து என சாதனை பெண்கள் வரிசை கட்டி வரத் தொடங்கினர். இன்றளவும் பெண்கள் சாதனை தொடர்ந்து கொண்டிருக்கிறது. எஞ்சியிருக்கும் வேதனைகளும் கரைந்தால், முன்னேற்றத்தை யாராலும் தடுக்க முடியாது.

* மகளிர் வளர்ச்சியில் தமிழக அரசு
தமிழக அரசும் மகளிர்க்கு இலவச பஸ் பயணம், புதுமைப்பெண் திட்டம், மாதந்தோறும் மகளிர் உரிமைத்தொகை என பெண்களுக்காக பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதன்மூலம் பெண்கள் மேலும் சாதிக்க வாய்ப்புள்ளது. ஜான்சி ராணி லட்சுமிபாய், வீரமங்கை வேலுநாச்சியார், குயிலி என சிங்கப்பெண்களுக்கும் இங்கு குறைவில்லை. ஒருபுறம் பெண்கள் பல தடைகளை கடந்து சாதனை படைத்தாலும், அவர்களுக்கு எதிரான பாலியல் சீண்டல்கள், குடும்ப வன்முறைகள் அதிகரிப்பது வேதனையளிக்கிறது.

பொள்ளாச்சி சம்பவம், கோவை சிறுமி கொலை, சமீபத்தில் புதுச்சேரி சிறுமி என பல இடங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறை நிகழ்வுகள் தொடர்ந்தவண்ணம் உள்ளன. ஒரு பெண் தனியாக வெளியே சென்று வீட்டுக்கு வர முடியாத நிலை உலகெங்கிலும் உள்ளது. இந்த நிலை மாற வேண்டும். பெண்களை கண்களாக கருதி காக்க வேண்டும். அவர்களை பாதுகாப்பதை நம் உரிமையாக, கடமையாக கொள்ள வேண்டும்.

The post உலகமகளிர் தினம் அகிலத்தில் அசத்தும் புதுமைப்பெண்கள்: அடுக்களையில் கிடந்தது அன்று… அறிவின் சிகரம் தொடுவது இன்று… appeared first on Dinakaran.

Tags : World Women's Day International ,Women's Day ,India ,United States ,
× RELATED மனவெளிப் பயணம்