×

2014ல் அறிவிச்சாங்க… 2019ல் செங்கல் வெச்சாங்க… 2024ல் போர்டு நட்டாங்கா… இது எலக் ஷனுக்கான எய்ம்ஸ்… மக்களுக்கான எய்ம்ஸ் அல்ல… 10 ஆண்டுகள் ஒன்றிய அரசு போட்ட வேஷம்; தேர்தல் நெருங்கும் நிலையில் ரகசிய பூமி பூஜை; 2 மணி நேரத்தில் மூட்டை முடிச்சுடன் ‘எஸ்கேப்’

ஒன்றிய பாஜ அரசு தேர்தல் காலத்து துருப்புச்சீட்டாகவே, ஒரு கவர்ச்சி அறிவிப்பாகவே, ஒவ்வொரு தேர்தலின்போது மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை திட்டத்தை கையிலெடுக்கிறது. மதுரை எய்ம்ஸ் திட்ட பணிகளை அடுக்கடுக்காக ஒவ்வொரு முறையும் பல்வேறு ரூபங்களில் அறிவித்து காலத்தை கடத்தி வருவதில் ஒன்றிய அரசு கில்லாடியாக இருந்து வருகிறது. கடந்த 2014 நாடாளுமன்ற தேர்தலில் ஒன்றியத்தில், பாஜ மீண்டும் ஆட்சியை பிடித்தது. தமிழ்நாட்டுக்கான எய்ம்ஸ் திட்டத்தை கடந்த 2015, பிப்ரவரி 28ல் பட்ஜெட் தாக்கலின்போது அறிவித்தது. எய்ம்ஸ் தங்கள் தொகுதியில் அமைய வேண்டுமென்ற அப்போதைய அதிமுக அமைச்சர்கள் சிலரது சுயநலத்தால், எய்ம்ஸ் இடம் தேர்விலேயே 3 ஆண்டுகள் வீணானது. அதன் பிறகு 6 மாதங்கள் கழித்தே ஒன்றிய அமைச்சரவை மதுரை எய்ம்ஸ்க்கு ஒப்புதல் தந்தது.

2019 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக மதுரை வந்த பிரதமர் மோடி, தோப்பூரில் 222 ஏக்கரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க 2019 ஜன. 27ல் அடிக்கல் நாட்டி, 3 ஆண்டுகளுக்குள் பயன்பாட்டிற்கு வருமெனவும் அறிவித்தார். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டியே 5 ஆண்டுகள் கடந்திருக்கிறது. அதன்பிறகு சுற்றுச்சுவர் கட்டியதோடு சரி. வேறெந்த பணியும் நடக்கவில்லை. நீண்ட இழுபறிக்கு பின் ஒருவழியாக ஜப்பான் நாட்டின் ஜிகா நிறுவனத்திடம் கடன் ஒப்பந்தம் கடந்த மார்ச், 2021ல் செய்யப்பட்டது. ஒப்பந்தம் கையெழுத்தாகியும் கட்டுமான பணிகள் தொடங்கப்படவில்லை.

இதையடுத்து மதுரை எய்ம்ஸ் நிர்வாகக் குழுவின் முதல் கூட்டம் ஜூன் 2021ல் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தோப்பூரில் எய்ம்ஸ் ரூ.1,264 கோடியில் கட்டுடுவதற்கான திட்ட மதிப்பீடு, தற்போது ரூ.1,978 கோடியாக உயர்த்தப்பட்டது. மதுரை எய்ம்ஸ்க்கு பிறகு அறிவித்த குஜராத் எய்ம்ஸ் மருத்துவமனை உட்பட, சமீபத்தில் 6 எய்ம்ஸ் மருத்துவமனைகள் அடுத்தடுத்து பிரதமர் திறந்த நிலையில், தமிழகத்தை புறக்கணிக்கும் வகையிலான பிரதமரின் செயல்பாடுகள் மக்கள் மத்தியில் கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. மக்களை தேர்தல் நெருங்கும் நிலையில் தமிழ்நாட்டில் ஒரு சீட்டாவது பிடித்து விட வேண்டும் என்ற நோக்கில் பிரதமர் மோடி தமிழ்நாடு பக்கம் தொடர்ந்து தலை காட்டி வருகிறார்.

ஆனால், தமிழ்நாட்டு மக்களும், எதிர்கட்சிகள் தலைவர்கள் 10 ஆண்டுகளில் எங்களுக்கு என்ன செய்தீர்கள் என லிஸ்ட் போட்டு கேள்வி மேல் கேள்வி கேட்கின்றனர். அதோடு தமிழ்நாடுக்கு மோடி அறிவித்து வராத திட்டங்களை நோட்டீஸ் அடித்து, ‘மோடி சுட்ட வடை’ என்று நூதன பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். இதனால், தேர்தலை எப்படி சமாளிப்பது என தெரியாமல் மோடியும், பாஜவும் திணறி வருகின்றனர். 10 ஆண்டுகள் ஒன்றிய பாஜ அரசு போட்ட வேஷத்தை மறைக்க எய்ம்ஸ் கட்டுமானத்திற்கான டெண்டர் இறுதி செய்யப்பட்டு, எல் அண்ட் டி நிறுவனத்திற்கு நேற்று முன்தினம் ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து நேற்று காலை கட்டுமான பணிகளுக்கான பூமி பூஜை தொடங்கியது . இந்த பூமி பூஜையில் எய்ம்ஸ் கட்டுமான பணிகளை மேற்கொள்ளும் தனியார் நிறுவன அதிகாரிகள் மற்றும் எய்ம்ஸ் நிர்வாக இயக்குநர் அனுமந்தராவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ரகசியமாக நடத்தப்பட்ட பூமி பூஜைக்கு மக்கள் பிரதிநிதிகளான விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர், எம்எல்ஏ ராஜன் செல்லப்பா உட்பட மக்கள் பிரதிநிதிகள் ஒருவருக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை. பூமி பூஜை நடந்த இடத்தில் வைக்கப்பட்ட மருத்துவமனை வடிவமைப்பு மற்றும் கட்டிட பணிகள் நடைபெறுவதை குறிக்கும் பிளக்ஸ் போர்டு, பூஜை நடத்திய 2 மணி நேரத்திற்குள் அகற்றப்பட்டது.

இந்த பூமி பூஜை நிகழ்ச்சியில் முதலில் ஒப்பந்தக்காரர், நிறுவன பணியாளர்கள் மட்டுமே இருந்தனர். எய்ம்ஸ் நிர்வாக அலுவலகத்தை சேர்ந்த இயக்குநர் அனுமந்தராவ் தாமதமாகத்தான் நிகழ்விடத்திற்கு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு சடங்காக, பூஜை நடத்திய 2 மணிநேரத்திற்குள் அங்கு வைத்த பிளக்ஸ் போன்றவற்றையும் வந்தவர்கள் அங்கிருந்து எடுத்துச் சென்று விட்டனர். மதுரைக்கு பிரதமர் வந்தபோதோ, நேற்று முன்தினம் சென்னை வந்தபோது கூட எய்ம்ஸ் கட்டுமானம் குறித்த அறிவிப்பில்லை. மோடியே கூட தொடங்கி வைக்கவில்லை. கடந்த தேர்தல் காலத்தைப்போலவே, இந்த தேர்தல் காலத்தையும் கருத்தில் கொண்டே பிரதமரும், பாஜவினரும் இந்த மதுரை எய்ம்ஸ் திட்டத்தை கையிலெடுத்து விளம்பர அரசியலில் களமிறங்கி இருக்கிறார்கள் என பொதுமக்களிடம் விமர்சனக்குரல்கள் ஓங்கி ஒலிக்கின்றன.

* இரண்டு கட்டமாக பணிகள்
எய்ம்ஸ் நிர்வாக இயக்குநர் அனுமந்தராவ் கூறும்போது, ‘‘எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிட பணிகள் துவங்கியதில் இருந்து 33 மாதங்களுக்குள் கட்டி முடிக்கப்படும். இரண்டு கட்டமாக பணிகள் நடைபெற உள்ளது. முதல்கட்ட பணிகளாக மருத்துவக்கல்லூரி, விடுதி, வெளி நோயாளிகள் பிரிவு, நிர்வாக அலுவலகம் உள்ளிட்டவை 18 மாதங்களுக்குள் நிறைவடையும். உள் நோயாளிகள் பிரிவு, செவிலியர் கல்லூரி, அலுவலர்கள் குடியிருப்பு வளாகம் உள்ளிட்டவை இரண்டாம் கட்டமாக அடுத்த 15 மாதங்களுக்குள் நிறைவடையும். இம்மருத்துவமனை 900 படுக்கைகள் கொண்ட 5,000 வெளி நோயாளிகளை கையாளும் தரத்துடன் உருவாக்கப்படுகிறது’’ என்றார்.

* சென்டிமென்ட் சரியில்லை… 2 செங்கல்லை வைங்கப்பா…!
எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிக்கான பூமி பூஜை குறித்து மதுரை தோப்பூர் ஊராட்சி மன்ற தலைவருக்கு கூட எய்ம்ஸ் நிர்வாகம் தகவல் தெரிவிக்கவில்லை. பின்னர் தகவலறிந்து அங்கு வந்த ஊராட்சி மன்ற தலைவர் சேகர் ஏற்கனவே ஒரு செங்கல்லை வைத்து 2019ல் அடிக்கல் நாட்டப்பட்டது. அது வாஸ்து படி சரியில்லாததால் இன்னும் கட்டிட பணிகள் துவங்கவில்லை. எனவே இரு செங்கல்களை வைத்து பூஜை செய்வதாக கூறி பூமி பூஜை நடந்து முடிந்த பின் இரு செங்கல்களை வைத்து தனியாக பூஜை செய்தார்.

* தேர்தல் நாடகம் அமைச்சர், எம்.பி.க்கள் கண்டனம்
அமைச்சர் மா.சுப்பிரமணியன்: எய்ம்ஸ் மருத்துவமனையை விரைவில் கட்ட வேண்டும் என்று ஜைக்கா நிறுவனத்தின் துணை தலைவரை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தோம். அவர் இந்த பணி 2024 இறுதியில் தொடங்கி 2028ல் முடிக்கப்படும் என தெரிவித்தார். தற்போது தேர்தல் வருவதால் முன்னரே பணிகளை தொடங்கி விட்டனர். தேர்தல் மீது அச்சம் இருப்பதால் தான் பிரதமர் மோடி ஒரே வாரத்தில் 2 முறை தமிழகத்திற்கு வந்துவிட்டார். இன்னும் தேர்தல் முடிவதற்குள் எத்தனை முறை வருவார் என்று தெரியவில்லை. வெள்ள மேலாண்மையை அரசு எவ்வாறு கையாண்டது என்று மக்களிடம் கேட்டு குறை சொல்பவர்கள் தெரிந்துகொள்ளலாம்.

விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர்: கடந்த 2019ல் அவசரமாக தேர்தலுக்காக அப்போது மோடி அடிக்கல் நாட்டினார் .கடந்த 5 ஆண்டுகளாக ஒரு செங்கல் வைத்ததைத் தவிர ஏதும் நடக்காமல் தொடந்து இந்த பணிகள் தள்ளிப்போடப்பட்டு வந்தது. அதே நேரத்தில் அடிக்கல் நாட்டப்பட்ட 6 எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் நிறைவடைந்து திறப்பு விழாவிற்கு சென்றுவிட்டது. தொகுதி எம்பியான எனக்கு எய்ம்ஸ் பூமி பூஜை குறித்து தகவல் ஏதும் வரவில்லை. எனக்கு கூறவில்லை என்றாலும், கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரை வந்து பசுமலையில் தங்கியிருந்த பிரதமர் மோடியை அழைத்து பூமி பூஜை செய்திருக்கலாம். அதையும் செய்யாமல் நாடகமாடுவதற்கும், வாயில் வடை சுடுவதற்கும் பாஜவினரும் மோடியும் ஏன் இவ்வளவு முயற்சிக்கிறார்கள்? தமிழக மக்களை ஏன் ஏமாற்ற நினைக்கிறார்கள்.

மதுரை எம்பி சு.வெங்கடேசன்: மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணியை ரகசிய திட்டத்தைப் போல ஒன்றிய அரசு செய்திருக்கிறது. அடிக்கல் நாட்டப்பட்டு 5 ஆண்டுகளுக்கு பின்னர் கட்டுமான பணிகள் தொடங்கிய புதிய வரலாறு படைக்கப்பட்டுள்ளது. இது தேர்தலுக்காக தொடங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 20க்கும் மேற்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனைகள் கட்டுவதற்கு ஒன்றிய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை மட்டும் கடன் வாங்கி கட்டப்பட உள்ளது. கடன் வாங்கி எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான காரணத்தை ஒன்றிய அரசு கூறவில்லை. பாஜவின் அரசியல் நாடகத்தை தமிழ்நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். எய்ம்ஸ் கட்டப்பட உள்ள இடத்தில் புல்டோசரை வைத்து குப்பைகளை அகற்றி எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுகிறோம் என கண்ணாமூச்சி ஆடுகிறார்கள். எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் தொடக்கம் என்பது, பாஜவின் தேர்தலுக்கான நாடகம் என்பதை நாடு அறியும்.

The post 2014ல் அறிவிச்சாங்க… 2019ல் செங்கல் வெச்சாங்க… 2024ல் போர்டு நட்டாங்கா… இது எலக் ஷனுக்கான எய்ம்ஸ்… மக்களுக்கான எய்ம்ஸ் அல்ல… 10 ஆண்டுகள் ஒன்றிய அரசு போட்ட வேஷம்; தேர்தல் நெருங்கும் நிலையில் ரகசிய பூமி பூஜை; 2 மணி நேரத்தில் மூட்டை முடிச்சுடன் ‘எஸ்கேப்’ appeared first on Dinakaran.

Tags : Board Natanga ,AIIMS ,Elk Shaun ,EU Government ,Madurai AIIMS Hospital ,Union Government ,Madurai AIIMS ,Brick Vechanga ,Bhumi Pooja ,
× RELATED சுற்றுச்சூழல் அனுமதி பெறும் முன்பே...