×

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப காலத்திலும் கால அவகாசம் கேட்பதா? கருப்பு கருப்புதான்… மொத்த பருப்புமே கருப்புதான்… தேர்தல் நேரத்தில் பாஜவை காப்பாற்ற துடிக்கும் எஸ்பிஐ

பங்குச்சந்தை விதிகளுக்குப் புறம்பாக சுப்ரதா ராயின் சகாரா நிறுவனம் முதலீட்டாளர்களிடம் இருந்து ரூ.25,000 கோடியை திரட்டிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக 2014ல் கைது செய்யப்பட்ட சுப்ரதா ராய் சிறையில் அடைக்கப்பட்டார். மோசடி தொகையை முதலீட்டாளர்களுக்கு திரும்ப வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், செபி கணக்கில் ரூ.25,781 கோடியை செலுத்தியதாகவும், 98 சதவீதம் பேருக்கு முதலீட்டு தொகையை நேரடியாக திரும்ப கொடுத்து விட்டு அந்த விவரங்களை செபியிடம் ஒப்படைத்து விட்டதாகவும் சுப்ரதா ராய் தரப்பில் கூறப்பட்டது.

பின்னர் இது குறித்த ஆவணங்களை 127 டிரக்குகளில் செபிக்கு சுப்ரதா ராய் நிறுவனம் அனுப்பியது. இதனால் மும்பையில் பெரும் போக்குவரத்து பிரச்னை உருவானது. இரண்டாவது தவணையாக 25 சதவீத வாடிக்கையாளர் விவரங்கள் அனுப்பப்பட்டபோது அவற்றை ஏற்காமல் செபி நிராகரித்து விட்டது. விவரங்கள் இருந்தும் செபி ஒப்படைக்காத நிலையில், வழக்கு முடியாமலேயே சுப்ரதா ராய் காலமாகி விட்டார். அடுத்ததாக, 2016 நவம்பர் 8ம் தேதி இரவு, பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட பணமதிப்பிழப்பு அறிவிப்பு, நாட்டையே உலுக்கி விட்டது.

கருப்புப் பணத்தை ஒழிப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும், மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் எனவும் கோரினார் மோடி. பாடுபட்டுச் சேர்த்த பணம் ஒரு நொடியில் செல்லாக்காசாகி விட்டதே என்ற பதைபதைப்பில் மக்கள் துடித்து விட்டனர். வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம் என தெரிவித்த போதும், இதற்கான குறைந்த பட்ச ஆயத்தத்துக்கு கூட வங்கிகளுக்கு அவகாசம் வழங்கப்படவில்லை. இதற்கெல்லாம் ஒரே காரணம்… ‘கருப்பு பணத்தை ஒழிக்க வேண்டும்’ ஒன்றை பதிலாக மட்டுமே இருந்தது. பணத்தை மாற்ற மக்கள் பட்ட துயரம் சொல்லி மாளாது. பல அப்பாவி பாமர மக்கள் காலக்கெடு நீட்டிக்கப்பட்டபோதும் விவரம் அறியாமல் வங்கிகளில் மாற்றாமல் போனதால் சுருக்குப் பையிலும், பருப்பு டப்பாக்களிலும் அந்தப் பணம் புதைந்து விட்டது.

ஆனால், இதே கருப்புப் பண பிரச்னைதான் தேர்தல் பத்திரங்கள் விவகாரத்திலும் எழுந்துள்ளது. பணமதிப்பிழப்பு அறிவிப்புக்குப் பிறகு தேர்தல் பத்திர திட்டத்தை கொண்டு வந்ததே பாஜதான். இதன்மூலம் அதிக நிதி திரட்டியதும் இந்த கட்சிதான். தேர்தல் பத்திர திட்டம் மூலம் 2017-18 நிதியாண்டு முதல் 2022-23 நிதியாண்டு வரை மொத்தம் ரூ.6,570 கோடியை பாஜ திரட்டியுள்ளது. காங்கிரஸ் கட்சி ரூ.1,123 கோடி மட்டுமே. இதுபோல், காங்கிரஸ் உள்ளிட்ட 30 கட்சிகளுக்கும் சேர்த்து வந்த மொத்த நிதி ரூ.5,438 கோடி தான்.

இப்படி கருப்புப் பணத்தை ஒழிப்பதாக கூறி மோடி அரசு கொண்டு வந்த இந்த திட்டத்தை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 15ம் தேதி பரபரப்பு தீர்ப்பு அளித்தது. அப்போது, நிதி தந்தவர்கள், கட்சி வாரியாக நிதி பெறப்பட்ட விவரங்களை மார்ச் மாதம் 13ம் தேதிக்குள் வெளியிட கெடுவும் விதித்தது. இந்த பத்திரங்கள் அனைத்தும் நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி மூலம் செயல்படுத்தப்பட்டதுதான். அந்த வங்கியிடம்தான் அத்தனை விவரங்களும் உள்ளன. உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து 20 நாட்களுக்கு மேல் ஆன நிலையில், தேர்தல் பத்திரம் மூலம் நிதி தந்தவர்கள் விவரங்களை வெளியிடுவதற்கு ஜூன் 30ம் தேதி வரை அவகாசம் தேவை என உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறது பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ).

வங்கிகள் கணினி மயமாகி பல ஆண்டுகள் ஆகி விட்டன. தற்போது ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமும் வந்து விட்டது. எல்லா விவரங்களும் நொடியிலேயே விரல் நுனியில் பெற்று விட முடியும். இப்படிப்பட்ட காலக்கட்டதில் கூட எஸ்பிஐ கால அவகாசம் கேட்டுள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கி, 2,35,858 ஊழியர்களை கொண்டு இயங்கி வருகிறது. இவர்களில், வங்கி நிர்வாகத்துக்காக மட்டும் 1,09,259 அதிகாரிகள் இருக்கின்றனர்.

நாட்டிலேயே அதிகமாக 48 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களை கொண்டதும், அதிக ஊழியர்களையும், நவீன உள்கட்டமைப்புகளையும் கொண்டதும் இந்த வங்கிதான், தீர்ப்பு விவரங்கள் உட்பட பல ஆவணங்களை இரவு பகலாக டிஜிட்டல் படுத்தி பதிவேற்றி வைத்துள்ள நீதித்துறையிடம் அப்பட்டமான பச்சைப் பொய்யை கூறியிருப்பதாக விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். நீதிமன்ற ஆவணங்களை விடவா இந்த தேர்தல் பத்திர விவரங்கள் பெரியவை? எனவும் அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

கருப்புப் பணத்தை ஒழிப்பதாக கூறி ஒன்றிய பாஜ அரசு கொண்டு வந்த திட்டம் கருப்பு பணத்தை சட்டப்பூர்வமாக பெறுவதற்கு வழி வகுத்ததாக அமைந்து விட்டது என்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ள நிலையில், பாஜவை காப்பாற்றவே விவரங்களை தாமதிக்கும் முடிவை எஸ்பிஐ எடுக்க காரணம் என அழுத்தம் திருத்தமாக அவர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால், இதைவிட பெரிய அதிர்ச்சி, கால அவகாசம் நீட்டிப்பதற்காக எஸ்பிஐ கூறியியுள்ள சொத்தைக் காரணங்கள்
தான்.

இது தொடர்பாக இந்த வங்கி உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ள அறிக்கையில், கால அவகாசத்துக்காக தெரிவித்துள்ள சில காரணங்கள்:
* பத்திரங்கள் வாங்கியவர்கள் பற்றிய விவரங்கள், வங்கி கிளைகளில்தான் இருக்கின்றன.
* இவை அனைத்தும் லெட்ஜர்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால், மையப்படுத்தப்பட்டுள்ள சர்வரில் இவை ஏற்றப்படவில்லை.
* எனவே, யார், எந்த தேதியில் பத்திரங்களை வாங்கியது? எவ்வளவு முதலீடு செய்தார்கள், பத்திர எண் போன்ற விவரங்களை வங்கி கிளைகள் மூலம்தான் தனித்தனியாகப் பெறப்படுகிறது.
* மேலும், இந்த பத்திரங்களை வங்கி கிளைகளில் இருந்து சீலிட்ட உறையில் மும்பையில் உள்ள வங்கி தலைமை அலுவலகத்துக்கு அனுப்பியுள்ளனர்.
* தற்போது வரை 44,400 தகவல்கள் இரண்டு விதமாக பிரிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. இவற்றை தொகுத்து ஒப்பீடு செய்து விவரங்களை தயாரிக்க கால அவகாசம் தேவைப்படுகிறது.
* எனவே, மார்ச் 6ம் தேதிக்குள் விவரங்களை சமர்ப்பிக்குமாறு உச்ச நீதிமன்றம் விதித்துள்ள கெடுவுக்குள் இவற்றை தொகுத்து வழங்க இயலாது. இவைதான், பாரத ஸ்டேட் வங்கி உச்ச நீதிமன்றத்திடம் சமர்ப்பித்துள்ள சொத்தைக் காரணங்கள். எதையும் நொடியில் சாத்தியமாக்கும் செயற்கை நுண்ணறிவு ஆதிக்கம் செலுத்தி வரும் இந்த நவீன காலக்கட்டத்திலும் இப்படி ஒரு காரணத்தை எஸ்பிஐ கூறியிருப்பது அப்பட்டமான பொய் என நாட்டு நலன் விரும்புபவர்களும், எதிர்க்கட்சிகளும் கொதிப்புடன் விமர்சிக்கின்றனர்.

கருப்பு பணம் ஒழிக்க வேண்டும் என்று கூறிய ஒன்றிய பாஜ அரசு கொண்டு வந்த தேர்தல் பத்திர திட்டம், கருப்புப் பணத்தை ஊக்குவிக்கிறதா என கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள், நன்கொடையாளர்கள் பெயரை ரகசியமாக வைப்பது ஏன் என கேள்வி எழுப்பியிருந்தனர். இதை மெய்ப்பிப்பது போல, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் அந்த ரகசியத்தை மூடி மறைக்கும் நோக்கத்தோடு எஸ்பிஐ கால அவகாச கோரிக்கையை முன்வைத்துள்ளது. அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறை வரிசையில் ஒன்றிய அரசின் கைப்பாவையாக எஸ்பிஐயும் சேர்ந்து விட்டது என அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

பாரத ஸ்டேட் வங்கி கால அவகாசம் கேட்டது குறித்து கருத்து தெரிவித்த ராகுல் காந்தி, ‘ஒரே கிளிக்கில் அனைத்து விவரங்களையும் திரட்ட முடியும் என்ற நிலையிலும் எஸ்பிஐ அவகாசம் கேட்பது, பருப்பில் கருப்பு என்பதை விட, மொத்த பருப்புமே கருப்பு தான்’ என்பதை காட்டுவதாக உள்ளது’ என கூறியுள்ளார். கருப்பு பணத்தை ஊக்குவிக்கும் இந்த திட்டத்தில் பணம் தந்தவர்கள் விவரங்களை வெளியிட தாமதிக்க எஸ்பிஐ முனைப்போடு செயல்படுவது நீதித்துறைக்கு சவால் விடுவது போலவும், நீதி கிடைக்க விடாமல் முட்டுக் கட்டை போடுவது போலவும் உள்ளதாக நாட்டு நலனில் அக்கறை கொண்ட சமூக ஆர்வலர்கள் விமர்சிக்கின்றனர்.
தாமதிக்கப்பட்ட நீதி… மறுக்கப்பட்ட நீதி…

* டிஜிட்டல் திட்டம் பலனில்லையா?
குழந்தையை கேட்டால் கூட, இது டிஜிட்டல் யுகம் என்பதை கூறிவிடும். மிகப்பெரிய கட்டமைப்பை கொண்ட பாரத ஸ்டேட் வங்கி ‘டிஜிட்டல் லீடர்ஷிப்’ திட்டத்தில் மட்டும் 386 அதிகாரிகளுக்கு பயிற்சி அளித்து வருகிறது. தனது வங்கியில் அனைத்து பொது மேலாளர்கள், துணை பொது மேலாளர்களுக்கு டிஜிட்டல் திட்ட பயிற்சி அளித்துள்ளதாக கூறும் இந்த வங்கி, ஆவணங்கள் டிஜிட்டல் படுத்தப்படவில்லை என கூறியிருப்பது கேலிக்குரியதாக உள்ளதாக பலரும் விமர்சிக்கின்றனர்.

தேர்தல் பத்திரம் மூலம் பாஜ திரட்டிய நிதிஆண்டு நிதி
(கோடிகளில்)
2017-18 ரூ.210
2018-19 ரூ.1,450
2019-20 ரூ.2,555
2020-21 ரூ.22
2021-22 ரூ.1,033
2022-23 ரூ.1,300
மொத்தம் ரூ.6,570 கோடி

* யுபிஐ செயல்படுத்தியும் உடந்தையாகலாமா?
முற்றிலும் டிஜிட்டல் முறையில், மொபைல் மூலமான எளிதான அதிவேக பண பரிமாற்றத்துக்கு யுபிஐ செயலி, பணமதிப்பு நீக்கத்துக்குப் பிறகு அறிமுகம் செய்யப்பட்டது. ஐக்கிய அரபு எமிரேட், சிங்கப்பூர், மலேசியா, பிரான்ஸ், நேபாளம், இங்கிலாந்து, மொரீஷியஸ், இலங்கை நாடுகளிலும் இவை தற்போது ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்டது. இப்படி உலகத்துக்கு யுபிஐயை அறிமுகம் செய்த இந்தியாவில் இதை செயல்படுத்தியுள்ள பெரிய பொதுத்துறை வங்கி, டிஜிட்டல் யுகத்துக்கே மாறவில்லையா? அல்லது பாஜவின் மோசடியை மறைக்க துணை போகிறதா? என்ற சந்தேகம் பலருக்கும் எழுந்துள்ளது.

* வங்கி தலைவர் மீது நடவடிக்கை வருமா?
ஊழல், கருப்பு பண பதுக்கல், சட்ட விரோத பண பரிவர்த்தனை என பல்வேறு காரணங்களை காட்டி எதிர்க்கட்சி தலைவர்கள், பிரமுகர்களை குறிவைத்து அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறை ஆகியவை ரெய்டு நடத்தி வழக்குப் போட்டு வருகின்றன. இதற்கும் தங்களுக்கும் சம்பந்தம் இல்லை என பாஜ கூறி வந்தாலும், எதிர்க்கட்சியினர் மீது மட்டுமே தொடரும் நடவடிக்கைகள் பாஜவின் கைப்பாவையாக மேற்கண்ட புலனாய்வு அமைப்புகள் செயல்படுவதை பட்டவர்த்தனமாக மெய்ப்பிக்கின்றன. இதுபோல் கருப்பு பணத்தை ஊக்குவிப்பதாக அமைந்துள்ள தேர்தல் பத்திர விவகாரத்தில் அந்த விவரங்களை மறைக்க துடித்து இதற்கு துணை போகும் எஸ்பிஐ வங்கியின் தலைவர் தினேஷ் குமார் காரா வீட்டில் ரெய்டு நடத்தி இந்த புலனாய்வு அமைப்புகள் கைது செய்யுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. சர்வதேச வங்கிக் குழுமம் மற்றும் வங்கியின் சர்வதேச செயல்பாடுகளில் முக்கிய பொறுப்பு வகித்தவர் இவர் என்பதும், இவரது பதவிக்காலம் ஒன்றிய அரசால் இந்த ஆண்டு ஆகஸ்ட் வரை நீட்டிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

* ஒன்றிய அரசு நிர்ப்பந்தம்: பிரஷாந்த் பூஷன் கண்டனம்
பாரத ஸ்டேட் வங்கி கால அவகாசம் கோரியது பற்றி கருத்து தெரிவித்த மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் ‘‘இது முழுக்க முழுக்க வஞ்சகமானது. இந்த தகவலை தேர்தல் ஆணையத்திடம் வழங்குவதற்கு ஒரு நாள் முன்னதாக எஸ்பிஐ இந்த மனுவை தாக்கல் செய்துள்ளது. இதுவரை எதுவும் செய்யாமல், தேர்தலே முடிந்து விடும் நிலையில் ஜூன் 30 வரை நீட்டிப்பு கோருகின்றனர். ஏனென்றால் ஒன்றிய அரசு தான் எஸ்பிஐ-ஐ இந்த மனுவை தாக்கல் செய்ய வைத்துள்ளது’’ என்றார்.

The post செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப காலத்திலும் கால அவகாசம் கேட்பதா? கருப்பு கருப்புதான்… மொத்த பருப்புமே கருப்புதான்… தேர்தல் நேரத்தில் பாஜவை காப்பாற்ற துடிக்கும் எஸ்பிஐ appeared first on Dinakaran.

Tags : SBI ,BJP ,Subrata Roy ,Sagara ,Dinakaran ,
× RELATED மூத்த குடிமக்களின் ஃபிக்சட் டெபாசிட்...