×

அசான்சோல் தொகுதிக்கு வந்த சோதனை பாடகர் பின்வாங்கியதால் நடிகையை களமிறக்கும் பாஜக?: மேற்குவங்கத்தில் வேட்பாளர் கிடைக்காமல் தடுமாற்றம்

புதுடெல்லி: அசான்சோல் தொகுதி பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பாடகர் திடீரென பின்வாங்கியதால் நடிகையை பாஜக களமிறக்க திட்டமிட்டுள்ளது. மக்களவை தேர்தலுக்கான முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக கடந்த 2ம் தேதி வெளியிட்டது. இதில், 195 வேட்பாளர்களின் பெயர்கள் இடம்பெற்றன. இதில், மேற்குவங்க மாநிலம் அசான்சோல் தொகுதியில் பிரபல போஜ்புரி பாடகர் பவன் சிங் (38) போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்த அறிவிப்பு வெளியானதில் இருந்தே, சமூக ஊடகங்களில் இவரை திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் கடுமையாக விமர்சிக்க தொடங்கினர். பவன் சிங் பாடிய பல திரைப்பட பாடல்கள், வங்காள பெண்களை கிண்டல் செய்தும், இழிவுபடுத்தியும் பாடுபடுவதுபோல இருப்பதாக விமர்சனம் செய்தனர். பவன் சிங்குக்கு இது தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது.

தவிர, மேற்கு வங்கத்தின் சந்தேஷ்காலி தொகுதியில் நடந்த பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் திரிணாமுல் கட்சியை பாஜக விமர்சித்து வரும் நிலையில், பவன் சிங்கை வேட்பாளராக நிறுத்துவதை பாஜக தலைமையும் விரும்பவில்லை. இதையடுத்து, போட்டியில் இருந்து விலகுமாறு பவன் சிங்கை பாஜக அறிவுறுத்தியதாக தெரிகிறது. தொடர்ந்து பவன் சிங் வெளியிட்டபதிவில், ‘என் மீது நம்பிக்கை வைத்து வேட்பாளராக அறிவித்த பாஜக தலைமைக்கு நன்றி. சில காரணங்களால், அசான்சோல் தொகுதியில் என்னால் போட்டியிட முடியாது’ என தெரிவித்துள்ளார். இந்நிலையில் மற்றொரு பிரபல போஜ்புரி நடிகை அக்ஷரா சிங்கை, அசான்சோல் தொகுதியில் போட்டியிட வைக்க பாஜக தலைமை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இவரும் போட்டியிட மறுக்கும்பட்சத்தில் மற்றொரு பாஜக மூத்த தலைவர் ஜிதேந்திர திவாரியை களமிறக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அசான்சோல் தொகுதிக்கு ஆள்பிடிக்கும் வேலையில் பாஜக தலைமை ஈடுபட்டுள்ளது.

 

The post அசான்சோல் தொகுதிக்கு வந்த சோதனை பாடகர் பின்வாங்கியதால் நடிகையை களமிறக்கும் பாஜக?: மேற்குவங்கத்தில் வேட்பாளர் கிடைக்காமல் தடுமாற்றம் appeared first on Dinakaran.

Tags : BJP ,Asansol ,New Delhi ,Lok Sabha ,West ,Bengal ,West Bengal ,
× RELATED தேர்தல் பத்திரம் விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல்