×

பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் ₹1.70 கோடி டெபாசிட்

சேலம், மார்ச்5: சேலம் மாவட்டத்தில் முதலமைச்சரின் 2 பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் 680 பயனாளிகளுக்கு ₹1.70 கோடிக்கு நிலையான வைப்பு தொகைக்கான பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பெண் கல்வியை ஊக்குவிக்கவும் பெண் சிசு கொலைகளை தவிர்க்கவும் பல்வேறு சமூக நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், சமூக நலத்துறை சார்பில் முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டமானது மாநிலம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அண்டை மாநிலங்களிலும் கவனம் ஈர்க்கும் திட்டமாக மாறியுள்ளது. இந்தியாவின் ஒரு சில மாநிலங்களில் இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஆயத்த பணிகள் நடந்து வருகிறது.

முதலமைச்சரின் பெண்குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை மட்டும் பிறந்திருந்தால், அந்த குழந்தையின் பெயரில் நிலையான வைப்புத் தொகை ₹50 ஆயிரத்திற்கு தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் முதலீடு செய்யப்படுகிறது.

அதே போல், குடும்பத்தில் 2 பெண் குழந்தைகள் பிறந்திருப்பின் அவர்களின் பெயரில் நிலையான வைப்புத்தொகை தலா ₹25 ஆயிரத்திற்கு தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டு வைப்புத்தொகைக்கான பத்திரம் வழங்கப்படுகிறது. இந்த வைப்புத்தொகை ரசீது நகல் பெண் குழந்தையின் குடும்பத்திற்கு கொடுக்கப்படுகிறது. இந்த வைப்புத் தொகையை ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும். பெண் குழந்தைக்கு 18 வயது நிறைவடைந்தவுடன் வட்டியுடன் சேர்த்து முதிர்வுத்தொகை வழங்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் மற்றும் மாவட்ட சமூக நல அலுவலர்(பொ) சுகந்தி கூறியதாவது: பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் 18 வயதிற்கு உட்பட்ட இளவயது திருமணத்தை தவிர்க்கும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதலமைச்சரின் பெண் குழந்தைகள் திட்டத்தின் பயன்பெற பெண் குழந்தைகள் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத வேண்டும். பெண் குழந்தைகளுக்கு கல்வி செலவுகளை ஈடுகட்ட 6வது ஆண்டு முதல் ஊக்கத்தொகையாக ₹1800 வழங்கப்பட்டு, 18வயது நிறைவடைந்தவுடன் வட்டியுடன் சேர்த்து முதிர்வுத்தொகை வழங்கப்படும்.

இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க குடும்பத்தின் ஆண்டு வருமானம் ₹72 ஆயிரத்திற்குள் இருக்க வேண்டும். அதே போல், 2வது பெண் குழந்தை 3வயது பூர்த்தியாகும் முன்பும், பெற்றோர்களின் வயது 40 வயதிற்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்க முடியும். அந்த வகையில், சேலம் மாவட்டத்தில் 2023-24 ஆண்டில் ஒரு பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தில் 3 பேரும், 2 பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் 677 பேர் என மொத்தம் 680 பயனாளிகள் உள்ளனர். அந்த பெண் குழந்தைகளின் பெயரில் ₹1 ேகாடியே 70 லட்சத்து 75 ஆயிரத்திற்கு நிலையான வைப்புத் தொகைக்கான பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

The post பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் ₹1.70 கோடி டெபாசிட் appeared first on Dinakaran.

Tags : Salem ,Chief Minister ,Salem District ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED சேலம் மாவட்டம் ஓமலூரில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை..!!