×

கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீட்டுக்காக 3ம் பாலினத்தவர் எண்ணிக்கை குறித்த புள்ளி விவரத்தை சேகரிக்க வேண்டும்: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: கல்வி, வேலைவாய்ப்பில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு உரிய இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று ஒன்றிய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதன் அடிப்படையில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு உரிய இடஒதுக்கீடு கோரி தூத்துக்குடியைச் சேர்ந்த கிரேஸ் பானு கணேசன் என்ற மூன்றாம் பாலினத்தவர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு, தலைமை நீதிபதி எஸ்.வி. கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசுத் தரப்பில் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆஜராகி, உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது குறித்த கொள்கையை வகுக்க அரசு திட்டவட்டமாக உள்ளது. அதற்கு மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை குறித்த புள்ளிவிவரங்கள் தேவைப்படுகின்றன எனக் கூறி அரசின் அறிக்கையை தாக்கல் செய்தார்.

இதையடுத்து, நீதிபதிகள், தமிழகத்தில் எத்தனை மூன்றாம் பாலினத்தவர்கள் உள்ளனர் என்பது குறித்த எந்த புள்ளிவிவரங்களும் இல்லை என்பதால் முதலில் அந்த புள்ளிவிவரங்களை சேகரிக்க வேண்டும். தற்போது, சாதிச்சான்று அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டாலும், அதை தனி இடஒதுக்கீடாக கருத முடியாது. தமிழகத்தில் மூன்றாம் பாலினத்தவர்கள் குறித்த புள்ளி விவரங்களை சேகரிக்க இதுவே தக்க தருணம் என்பதால், இந்த நடைமுறையை விரைவுபடுத்த வேண்டும். அவர்களுக்கு எத்தனை சதவீதம் உள் இடஒதுக்கீடு வழங்கப்படும் என்பது குறித்து அரசு கொள்கை முடிவை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தி விசாரணையை ஏப்ரல் 17ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

அப்போது, பொது இடங்களில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி கழிப்பிட வசதியை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். இது சம்பந்தமாக வழக்குகள் உள்ளன என்று நீதிபதி பரத சக்கரவர்த்தி குறிப்பிட்டார். இதைக்கேட்ட அட்வகேட் ஜெனரல், மூன்றாம் பாலினத்தவர்களுக்காக தனி கழிப்பிட வசதியை ஏற்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி தெரிவித்தார்.

The post கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீட்டுக்காக 3ம் பாலினத்தவர் எண்ணிக்கை குறித்த புள்ளி விவரத்தை சேகரிக்க வேண்டும்: ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Supreme Court ,Union ,State ,Grace Banu Ganesan ,Thoothukudi ,
× RELATED தேர்தல் பத்திரம் விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல்