×

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு மாநகராட்சி பூங்கா பராமரிப்புக்கான ஆணை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு சென்னை மாநகராட்சியில் உள்ள பூங்கா பராமரிப்புக்கான ஆணைகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் செயல்படும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கமான நகர்ப்புறங்களில் உள்ள ஏழைகளை கொண்டு சுய உதவிக்குழுக்கள் மற்றும் கூட்டமைப்புகளை அமைத்து, அவற்றின் உறுப்பினர்களுக்கு தொழிற் பயிற்சிகள், வங்கி கடன் இணைப்புகள் போன்றவற்றை பெற்று தந்து அவர்களின் வாழ்வாதார முன்னேற்றத்திற்கு வாய்ப்பு ஏற்படுத்தி
வருகிறது.

தமிழ்நாட்டில் முதன்முறையாக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மூலம் உருவாக்கப்பட்ட 51 பூங்காக்களை தேர்வு செய்து, அவற்றினை பராமரிப்பதற்காக நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் செயல்படும் தகுதி வாய்ந்த, ஆர்வம் உள்ள மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு, பூங்காக்கள் பராமரிப்பு முறைகள், நீர்நிலை மேலாண்மை, விளையாட்டு சாதனங்களை பராமரித்தல், நர்சரி மேம்பாடு போன்ற பயிற்சிகள் வழங்கப்பட்டு, பராமரிப்பிற்கான உபகரணங்கள், சான்றிதழ், கையேடுகள் போன்றவை வழங்கப்பட்டுள்ளன.

இந்த நடவடிக்கையின் வாயிலாக சுமார் 500 சுய உதவிக் குழுவினரின் குடும்பங்கள் நேரடியாக பயனடைவர். இந்த திட்டத்தை துவக்கி வைக்கும் வகையில் முதற்கட்டமாக பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 6 பூங்காக்களை பராமரிக்கும் பணிக்கான ஆணை மற்றும் உபகரணங்களை நகர்ப்புற சுய உதவிக் குழுக்களிடம் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று வழங்கினார்.
நிகழ்ச்சியில், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை செயலாளர் செந்தில்குமார், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் திவ்யதர்சினி, செயல் இயக்குநர் ஸ்ரேயா பி சிங் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு மாநகராட்சி பூங்கா பராமரிப்புக்கான ஆணை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Minister ,Udayanidhi Stalin ,CHENNAI ,Udhayanidhi Stalin ,Chennai Corporation ,Tamil Nadu Urban Livelihood Movement ,Tamil Nadu Women's Development Corporation ,
× RELATED மணப்பாறையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரப்புரை..!!