×

அவனியாபுரத்தில் 1000 ஆண்டுகள் பழமையான முருகன் சிலை கண்டெடுப்பு: பிற்கால பாண்டியர் காலத்தை சேர்ந்தது

அவனியாபுரம்: அவனியாபுரத்தில் பிற்கால பாண்டியர் காலத்தை சேர்ந்த 1,000 ஆண்டுகள் பழமையான முருகன் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் தெய்வ வழிபாட்டில் முருகனுக்கு என்று தனி இடமுண்டு. குறிஞ்சி நிலத்தலைவனான முருகனுக்கு தமிழகத்தில் பல கோயில்கள் உள்ளன. இந்நிலையில், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வரலாற்று துறை முதுகலை மாணவர் வினோத், அவனியாபுரம் புறவழிச்சாலை மேற்குப் புறமாக அமைந்துள்ள செம்பண் ஊருணியில் களஆய்வு செய்தார். அப்போது, ஒரு முருகன் சிலையை கண்டெடுத்தார். இந்த சிலை, தலை இல்லாமல், முன்கைகள் சிதைந்த நிலையில் காணப்படுகிறது. ஒரு மரத்தின் வேருக்கு அருகில் உள்ளது. இதன் உயரம் 60 செ.மீ., அகலம் 50 செ.மீ. கண்டிகை, சரப்பளி, ஆரம் ஆகிய அணிகலன்களை தோள் மற்றும் காலில் அணிந்துள்ளது. மேடையில் இடது காலை மடித்து, வலது காலைத் தொங்கவிட்டபடி சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. வலது இடது கைகள் சிதைந்துள்ளன.

பீடத்தின் கீழ்ப் பகுதியில் நீண்ட தோகையுடன் ஆண் மயில் சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஆராய்ச்சி மாணவர் வினோத் கூறுகையில், ‘பிற்கால பாண்டியர்களின் காலத்தில் இந்த முருகன் சில உருவாக்கப்பட்டுள்ளது. காலம் 11ம் நூற்றாண்டு அல்லது 12ம் நூற்றாண்டாக இருக்கலாம். தலை சிதிலடைந்து காணப்படுகிறது. இப்பகுதியில் பிரதான சிவன் கோவில் இருக்கிறது. அதில் சிதிலமடைந்த சிற்பங்கள் காணப்படுகின்றன. கோவிலின் அருகிலேயே பழமை வாய்ந்த செவந்திஸ்வரர் கோவில் முற்றிலும் சிதிலடைந்துள்ளது. அங்கிருந்து கூட சிலைகள் வந்திருக்கலாம் என தெரிகிறது முருகன் சிலை என்பதற்கான ஆய்வுகளை, முன்னாள் தொல்லியல் துறை கண்காணிப்பாளர் வசந்தி, பழநி தொல்லியல் ஆராய்ச்சியாளர் சாந்தலிங்கம் ஆகியோர் உறுதிப்படுத்தியுள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 

The post அவனியாபுரத்தில் 1000 ஆண்டுகள் பழமையான முருகன் சிலை கண்டெடுப்பு: பிற்கால பாண்டியர் காலத்தை சேர்ந்தது appeared first on Dinakaran.

Tags : Avanyapura ,AVANIAPURAM ,Murugan ,Tamil Nadu ,Martian ,Madurai ,Kamarajar ,
× RELATED பள்ளிகள் விடுமுறையையொட்டி...