×

திருமண நிகழ்ச்சிக்கு ஆர்டர் இருப்பதாக அழைத்து போட்டோகிராபரை அடித்து ெகான்று சடலம் புதைப்பு: 15 லட்சம் கேமரா கொள்ளை: 2 வாலிபர்கள் கைது

திருமலை: திருமண நிகழ்ச்சிக்கு ஆர்டர் இருப்பதாக கூறி வரவழைத்து போட்டோகிராபரை அடித்து கொலை செய்து, 15 லட்சம் மதிப்பிலான கேமராவை கொள்ளையடித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மதுரவாடா பக்கண்ணாபாளையத்தைச் சேர்ந்தவர் சாய்குமார்(23). போட்டோகிராபரான இவர் திருமணம் உள்ளிட்ட விசேஷங்களுக்காக ஆன்லைனில் ஆர்டர் பெற்று புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்து வந்தார்.

இந்நிலையில் அம்பேத்கர் கோனசீமா மாவட்டத்தில் உள்ள ரவுலபாலம் பகுதியைச் சேர்ந்த சண்முகதேஜா என்பவர் கடந்த மாதம் 26ம்தேதி சாய்குமாரை செல்போனில் தொடர்பு கொண்டு திருமணத்திற்காக போட்டோ ஷூட் இருப்பதாக தகவல் கொடுத்தார். இதனையடுத்து சாய்குமார் தனது பெற்றோரிடம் கூறிவிட்டு ரயிலில் விசாகப்பட்டினத்தில் இருந்து ராஜமுந்திரிக்கு சென்றார். ஆனால் 3 நாட்களாகியும் சாய்குமார் வீடு திரும்பவில்லை. செல்போனில் பலமுறை தொடர்பு கொண்டும் எந்த பதிலும் இல்லை.

அதன்பிறகு அவரது செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர், விசாகப்பட்டினம் பி.எம்.பாலம் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சாய்குமாரை தேடிவந்தனர். மேலும் அவரின் செல்போன் அழைப்புகளை ஆய்வு செய்தனர். அப்போது சண்முகதேஜா என்பவர் கடைசியாக பேசியது தெரிய வந்தது. இதையடுத்து செல்போன் எண் மூலம் நேற்று அவரை பிடித்து விசாரித்தனர். விசாரணை குறித்து போலீசார் கூறியதாவது:

ரயிலில் இருந்து இறங்கிய சாய்குமாரை சண்முகதேஜாவும், அவரது நண்பர்கள் சேர்ந்து காரில் அழைத்து சென்றனர். அங்குள்ள ரவுலபாலம் அருகே சென்றபோது சாய்குமாரை அவர்கள் அடித்து கொலை செய்து உடலை ஆலமூரில் புதைத்துள்ளனர். பின்னர் சுமார் ரூ.15 லட்சம் மதிப்புள்ள கேமரா மற்றும் அவர் வைத்திருந்த பொருட்களை கொள்ளையடித்துள்ளனர். விலை உயர்ந்த கேமராவை கொள்ளையடிக்க நைசாக பேசி சாய்குமாரை வரவழைத்து கொலை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து சடலத்தை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினோம். மேலும் சண்முகதேஜாவையும் அவரது நண்பரையும் கைது செய்து தொடர்ந்து விசாரித்து வருகிறோம். மேலும் கொலைக்கு உடந்தையாக இருந்த மற்றொரு வாலிபரையும் தேடி வருகிறோம். இவ்வாறு போலீசார் கூறினர்.

The post திருமண நிகழ்ச்சிக்கு ஆர்டர் இருப்பதாக அழைத்து போட்டோகிராபரை அடித்து ெகான்று சடலம் புதைப்பு: 15 லட்சம் கேமரா கொள்ளை: 2 வாலிபர்கள் கைது appeared first on Dinakaran.

Tags : Tirumala ,Saikumar ,Pakannapalayam, Maduravada, Visakhapatnam, Andhra Pradesh ,
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயிலில் விஐபி...