×

1.40 லட்சம் விவசாயிகளுக்கு ₹1,095 கோடி வங்கிக்கடன்

சேலம், மார்ச் 4: சேலம் மாவட்டத்தில் நடப்பாண்டு கூட்டுறவு வங்கிகள் மூலம், 1.40 லட்சம் விவசாயிகளுக்கு ₹1,095 கோடி வங்கிக்கடன் வழங்கப்பட்டுள்ளது. தற்போது கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகளின் தேவைக்காக 26,302 மெட்ரிக் டன் உரம் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் விவசாயிகளின் மேம்பாட்டிற்காக, முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு வேளாண் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். வேளாண்மை வளர்ச்சிக்காக தனியாக வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு, ஒவ்வொரு பயிர் உற்பத்தியிலும் தனிக்கவனம் செலுத்தப்படுகிறது. ஆண்டுதோறும் விவசாய நிலத்தின் பரப்பை அதிகரிக்கும் நோக்கில், தோட்டக்கலைத்துறை பயிர்களுக்கும் முக்கியத்துவம் வழங்கப்பட்டு வருகிறது. காவிரி பாய்ந்தோடும் டெல்டா மாவட்டங்கள் மட்டுமின்றி, இதர மாவட்டங்களிலும் குறிப்பிட்ட பயிர்களை விவசாயிகள் விளைவித்து லாபம் ஈட்டிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை, கூட்டுறவுத்துறை இணைந்து பல்வேறு அரசு திட்டங்களை செயல்படுத்துகிறது.

சேலம் மாவட்டத்தை பொருத்தளவில் நெல், கரும்பு, வாழை, மரவள்ளி, மல்லிகை, அரளி உள்ளிட்ட பூச்செடிகள் விவசாயம் அதிகளவு இருந்து வருகிறது. இதுபோக காய்கறி மற்றும் மா விவசாயத்திலும் அதிகபடியான விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விவசாயிகளின் தேவைக்காக, மாவட்டம் முழுவதும் உள்ள கூட்டுறவு கடன் சங்கங்களில் வங்கிக்கடன் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், தேவையான அளவு உரத்தை இருப்பு வைத்து விவசாய காலங்களில் வழங்கி வருகின்றனர். விவசாயத்திற்கு தேவையான கருவிகளையும் வாடகைக்கு கொடுத்து வேளாண்துறை உதவி புரிகிறது. இதன்மூலம் கரும்பு, வாழை, மரவள்ளி போன்ற பயிர்களில் அதிக மகசூலை விவசாயிகள் ஈட்டி வருகின்றனர்.

மாவட்டம் முழுவதும் விவசாயத்தில் ஈடுபட்டு வரும் லட்சக்கணக்கான விவசாயிகளுக்கு தேவையான அளவு வங்கிக்கடன் வழங்கும் வகையில், ஆண்டுதோறும் கூட்டுறவுத்துறை இலக்கு நிர்ணயித்து கடன் வழங்குகிறது. இந்தவகையில் நடப்பாண்டு (2023-24) ₹1000 கோடி அளவிற்கு விவசாய கடன் வழங்க இலக்கு நிர்ணயித்திருந்தனர். ஆனால், அதையும் தாண்டி விவசாயிகளுக்கு கடன் வழங்கி கூட்டுறவு வங்கிகள் உதவி புரிந்துள்ளது. அதாவது நடப்பாண்டு, சேலம் மாவட்டத்தை சேர்ந்த 1,07,512 விவசாயிகளுக்கு ₹946.88 கோடி பயிர்கடன் வழங்கப்பட்டுள்ளது. இதுபோக கால்நடை பராமரிப்பு கடனாக 33,147 விவசாயிகளுக்கு ₹148.72 கோடி வழங்கியுள்ளனர். இந்த பயிர்கடன் மூலம் விவசாயிகள், பல்வேறு பயிர்களை விளைவித்து பயனடைந்துள்ளனர்.

அதேபோல், நடப்பு மாதத்திற்கு விவசாயிகளுக்கு தேவையான அளவு உரம் சப்ளை செய்ய கூட்டுறவுத்துறை ஏற்பாடு செய்துள்ளது. இந்தவகையில் சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் மற்றும் கூட்டுறவு சங்கங்களில் யூரியா 5,480 மெட்ரிக் டன்னும், டிஏபி 2,768 மெட்ரிக் டன்னும், பொட்டாஷ் 2,453 மெட்ரிக் டன்னும், காம்ப்ளக்ஸ் 15,601 மெட்ரிக் டன்னும் என மொத்தம் 26,302 மெட்ரிக் டன் ரசாயன உரம் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி கூட்டுறவுத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘சேலம் மாவட்டத்தில் விவசாயிகளுக்கான வங்கிக்கடன் வழங்குவதில் அனைத்து கூட்டுறவு கடன் சங்கங்களும் திறம்பட செயல்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் இதுவரை 1.40 லட்சம் விவசாயிகளுக்கு ₹1,095 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. வரும் நிதியாண்டிலும் அரசு நிர்ணயம் செய்யும் இலக்கை எட்டும் வகையில் விவசாயிகளுக்கு பயிர்கடன், கால்நடை பராமரிப்பு கடன் வழங்கப்படும். இதனை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்,’ என்றனர்.

The post 1.40 லட்சம் விவசாயிகளுக்கு ₹1,095 கோடி வங்கிக்கடன் appeared first on Dinakaran.

Tags : Salem ,Salem district ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED சேலம் மாவட்டம் ஓமலூரில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை..!!