×

விபத்தில் பெற்றோரை இழந்த 671 மாணவர்களுக்காக ரூ.4.98 கோடி நிதி ஒதுக்கீடு

சென்னை: பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் குமரகுருபரன் வெளியிட்டுள்ள அரசாணை: அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவியரின் வருவாய் ஈட்டும் தந்தை அல்லது தாய் விபத்தில் இறந்துவிட்டால் அல்லது நிரந்தர முடக்கம் அடைந்தால் பாதிக்கப்படும் ஒவ்வொருவருக்கும் ரூ.75 ஆயிரம் நிதி உதவி வழங்கப்படும் என்றும், இந்த நிதி அரசு நிறுவனங்களில் வைப்புத் தொகையாக செலுத்தப்பட்டு அதிலிருந்து கிடைக்கும் வட்டித் தொகை மற்றும் அதன் முதிர்வுத் தொகை அவர்களின் கல்விச் செலவுக்காகவும், பராமரிப்பு செலவுக்காகவும் பயன்படுத்தப்படும் என்றும் பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டு இருந்தது.

இந்நிலையில் கடந்த 2022-2023ல் இந்த திட்டத்துக்கு நிதியாக தொடக்க கல்வித்துறை மற்றும் பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.13 கோடியே 61 லட்சத்து 50 ஆயிரம் ஒதுக்கி ஆணையிடப்பட்டது. தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் 19.10.2023 தேதி நிலவரப்படி நிலுவையில் உள்ள 671 விண்ணப்பங்களில் ரூ.50 ஆயிரத்துக்கான வைப்பு நிதி தொகைக்கு 18 விண்ணப்பங்கள், வைப்பு நிதி தொகைக்கான 388 விண்ணப்பங்களுக்கு ரூ.3 கோடி தேவைப்படுகிறது என்றும் அந்த தொகையை தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்துக்கு பெற்று வழங்குவதற்கும் ஆணைகள் வழங்க தொடக்க கல்வி இயக்குநர் அரசை கேட்டுக் கொண்டுள்ளார்.

தொடக்க கல்வி இயக்குநரின் கருத்துருவை ஏற்று நடப்பு ஆண்டில் நிலுவையில் உள்ள 671 விண்ணப்பங்களுக்கு தேவைப்படும் செலவுத்தொகை ரூ.4 கோடியே 98 லட்சத்து 75 ஆயிரம் ஒப்பளிப்பு செய்தும் இந்த தொகையை தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்துக்கு பெற்று வழங்கவும் அரசு ஆணையிட்டு உள்ளது.

The post விபத்தில் பெற்றோரை இழந்த 671 மாணவர்களுக்காக ரூ.4.98 கோடி நிதி ஒதுக்கீடு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Principal Secretary School Education Department ,Kumaragurubaran ,
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...