×

தேர்தல் விதி அமலுக்கு முன்பே நோன்பு கஞ்சி அரிசி வழங்க வேண்டும்: தென்னிந்திய பள்ளிவாசல்கள் அமைப்பு கோரிக்கை

நாகை: நாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதி அமலுக்கு முன்பே ரமலான் மாத நோன்பு கஞ்சிக்குரிய விலையில்லா அரிசியை வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளிவாசல்கள் அமைப்பு வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளிவாசல்கள் அசோசியேஷன் தலைவர் செய்யது முகம்மது கலீபா சாகிப், செயலாளர் முஜம்மில் ஜாபர் ஆகியோர் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:

வருடந்தோறும் தமிழக அரசு இஸ்லாமிய மக்களுக்காக புனித ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சிக்கான அரிசியை இலவசமாக பள்ளிவாசல்களுக்கும், தர்காக்களுக்கும் வழங்கி வருகிறது. இதனால் அரசுக்கு தமிழக இஸ்லாமிய மக்கள் மனதார நன்றி செலுத்தி வருகின்றனர்.

இந்த வருடம் அரிசியை கூடுதலாக வழங்க வேண்டும் என தமிழக பள்ளிவாசல்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு கோரிக்கை வைத்திருந்தோம். அதனை பரிசீலனை செய்வதாக தமிழக அரசிடமிருந்து பதில் வந்திருந்தது.
தற்போது தமிழகத்தில் உள்ள பள்ளி வாசல்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு தமிழக அரசு அரிசியை ‪6500‬ மெட்ரிக் டன்னாக உயர்த்தி வழங்க வேண்டும்.

அந்தந்த மாவட்ட நிர்வாகம் நோன்பு பிறைக்கு அதாவது மார்ச் 8ம்தேதிக்கு முன்பே தமிழக அரசின் விலையில்லா அரிசியை அந்தந்த பள்ளிவாசலுக்கும், தர்காவிற்கும், தைக்காலுக்கும் கொண்டு சேர்த்திட வேண்டும். இதன் மூலம் காலதாமதம் தவிர்க்கப்படும்.

நாடாளுமன்ற தேர்தல் நடக்க இருப்பதால், தேர்தல் நடத்தை விதி விரைவில் அமலுக்கு வரலாம். எனவே தேர்தல் நடத்தை விதிமுறைகளை அமல்படுத்துவதற்கு முன்பே காலதாமதமின்றி விலையில்லா அரிசி வழங்க வேண்டும்.
இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

The post தேர்தல் விதி அமலுக்கு முன்பே நோன்பு கஞ்சி அரிசி வழங்க வேண்டும்: தென்னிந்திய பள்ளிவாசல்கள் அமைப்பு கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Indian Mosques ,Tamil Nadu government ,Ramadan ,Dinakaran ,
× RELATED பேருந்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு...