×

பங்குச்சந்தை செயலி மூலம் ₹38.40 லட்சம் இழந்த பெயின்ட் கடை உரிமையாளர் சைபர் கிரைம் போலீசார் விசாரணை வேலூரில் வாட்ஸ்ஆப் தகவலை நம்பி

வேலூர், மார்ச் 3: வாட்ஸ்ஆப் அழைப்பை நம்பி அதில் வந்த பங்குச்சந்தை செயலியில் ₹38.40 லட்சத்தை இழந்த வேலூர் பெயின்ட் கடை உரிமையாளர் புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வேலூரை சேர்ந்தவர் அரவிந்தன்(43), பெயின்ட் கடை உரிமையாளர். இவர் முதலீடு செய்வதற்காக பல்வேறு இணையதளங்களில் தனது பெயரை பதிவு செய்து வைத்திருந்தார். இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் 21ம் தேதி இவரை வாட்ஸ்ஆப் மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர், ஆன்லைன் பங்கு சந்தையில் முதலீடு செய்யலாம் என்று குறுந்தகவல் அனுப்பியுள்ளார். தொடர்ந்து அரவிந்தனை மொபைல் லிங்க் மூலம் ‘ஜோனதான் சைமன் ஸ்டாக் எலைட் ஹப்’ என்ற வாட்ஸ்ஆப் குரூப்பில் இணைத்துள்ளார். அந்த குரூப்பில் முதலீடு செய்வது குறித்தும், லாபம் பெறுவது குறித்தும் விளக்கம் பெற்று, பின்னர் அந்த குழுவில் பகிரப்பட்ட ‘ஆல்ப்ஆக்ஸிஸ்புரோ’ என்ற செயலியை பதிவிறக்கம் செய்து, அதன் மூலம் கடந்த ஜனவரி 4ம் தேதி முதல் பிப்ரவரி 19ம் தேதி வரை பல்வேறு தவணைகளாக ₹38 லட்சத்து 40 ஆயிரத்து 249 பணத்தை முதலீடு செய்துள்ளார்.

ஆனால் அதன் பிறகு முதலீடு செய்த பணம் குறித்தும், லாபம் குறித்தும் எந்த தகவலும் இல்லாததால், தன்னை முதலில் வாட்ஸ்ஆப் மூலம் தொடர்பு கொண்டு பேசிய ஆசாமியை தொடர்பு கொள்ள முயன்றார். ஆனால் அந்த ஆசாமியை தொடர்பு கொள்ள இயலவில்லை என்று தெரிகிறது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அரவிந்தன், வேலூர் சைபர் கிரைம் இலவச உதவி எண் 1930ஐ தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தார். இப்புகாரின் பேரில் எஸ்பி மணிவண்ணன் உத்தரவின்படி, ஏடிஎஸ்பி கோட்டீஸ்வரன் அறிவுறுத்தலின்பேரில் சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் புனிதா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார். இதுகுறித்து எஸ்பி அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பில், பொதுமக்கள் வாட்ஸ்ஆப், டெலிகிராம் மற்றும் இதர சமூக ஊடகங்களில் முதலீடு, டாஸ்க், ஆன்லைன் பார்ட் டைம் ஜாப் தொடர்பாக வரும் விளம்பரங்களை நம்பி பணத்தை முதலீடு செய்து ஏமாற வேண்டாம். இவ்வாறு பண இழப்பு ஏற்பட்டால் உடனடியாக சைபர் கிரைம் இலவச உதவி எண் 1930 அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதள முகவரியில் புகார் அளிக்கலாம் என்று தெரிவித்துள்ளது.

The post பங்குச்சந்தை செயலி மூலம் ₹38.40 லட்சம் இழந்த பெயின்ட் கடை உரிமையாளர் சைபர் கிரைம் போலீசார் விசாரணை வேலூரில் வாட்ஸ்ஆப் தகவலை நம்பி appeared first on Dinakaran.

Tags : Vellore ,WhatsApp ,Aravindan ,Dinakaran ,
× RELATED குடிபோதையில் ரகளை செய்ததால்...