×

கலியுகக் கவலை நீக்கும் கலிங்கநாதீஸ்வரர்

கர்ம வினைக்கேற்பவே ஒரு மனிதனுக்கு நல்லதும், தீயதும் நடக்கிறது என்றாலும், தீவினையை அனுபவிக்கும்போது துவண்டுவிடுகிறான். அப்படி துவண்டிடும்போதெல்லாம் துணையாய் நின்று காப்பது கயிலைநாதரே! அவ்வாறு கலியுகத்தின் கவலைகளை போக்கும் கயிலைநாதர், குடிகொண்டருளும் திருத்தலங்களுள் ஒன்றாய் விளங்குகிறது இருளஞ்சேரி. அப்பர் பெருமானால் வைப்புத்தலமாக போற்றப்பட்ட இப்பதி முன்பு இறையாஞ்சேரி என்றிருந்து, தற்போது இருளஞ்சேரி என்றும் மருவியுள்ளது. இறைவன் வாசம் செய்யும் இடம் என்கிற பொருளிலும், மனிதனின் மனஇருளை அகற்றும் சேரி என்கிற பொருளிலும் இப்பதி `இறையாஞ்சேரி’ என்றிருந்து `இருளஞ்சேரி’ ஆகியுள்ளது.
கி.பி.13-ஆம் நூற்றாண்டில், திருக்கயிலை பரம்பரை திருவாவடுதுறை ஆதீனத்தில் இருந்து, திருமூலர் வழிவந்த குரு முதல்வர் அழகிய சிற்றம்பல சுவாமிகள் திருவாரூரில் பிறந்தவர். இவர் தல யாத்திரையாக வடபுறம் வரும்போது திருவாலங்காடு, கூவம், இலம்பயங்கோட்டூர் போன்ற தலங்களை தரிசித்தபடி இருளஞ்சேரியை அடைந்து, சங்கு தீர்த்தத்தில் நீராடி, ஈசனை வணங்குகின்றார். இத்தல இறைவனால் ஈர்க்கப்பட்டு, இங்கேயே தங்கிவிடுகின்றார். சில காலம் இங்கு வசித்து, சிவதரிசனம் செய்த குருமுதல்வர், தேவர் சிங்கஆதீனம் ஒன்றைத் தொடங்கினார்.

18 மடங்களுள் ஒரு மடமாக இம்மடம் திகழ்ந்துள்ளது. இதை ஊரனடிகள், தான் இயற்றிய சைவமட வரலாற்றில் குறிப்பிட்டுள்ளார். அழகிய சிற்றம்பல சுவாமிகள் அன்பர்கள் துணையுடன், இச்சிவாலயத்தை சீர் செய்தும், அம்பாள் ஆலயத்தை ஸ்தாபித்தும், கும்பாபிஷேகம் செய்து முடிக்கின்றார். தன்னை நாடி வந்த பக்குவப்பட்டபக்தர்களுக்கு சமய தீக்ஷயையும், விசேஷ தீக்ஷயையும் அளித்து வந்தார். ஓர் வெகுதான்ய வருஷம், ஆனி மாதம், வளர்பிறை சப்தமி திதியன்று கபால மோட்சம் அடைந்தார். இவரது திருச்சமாதி ஆலய தென்பாகத்தில் தனியாக அமைந்துள்ளது.இவரது வழிவந்த ஆறாம் குரு முதல்வரான முதலாவது சிதம்பரம்நாத தம்பிரான் இப்பதி ஈசன் மீது நேசம் கொண்டு, 101 பாடல்களைக் கொண்ட கலிங்கேசன் பதிற்றுப் பத்தந்தாதியை இயற்றி, அருளியுள்ளார். அவற்றில் சில பாடல்களே கிடைக்கப் பெற்றுள்ளன.முதலாம் பராந்தகச் சோழன் கி.பி. பத்தாம் நூற்றாண்டில் கலிங்கதேசத்தை வென்றதன் நினைவாக இங்கு சிவாலயம் எழுப்பியதால், இத்தல இறைவன் `கலிங்கநாதீஸ்வரர்’ என்று போற்றப்படுகின்றார்.ஊரின் கீழ்த்திசையில் பச்சைப்பசேலென வயல்வெளிகள் சூழ அமைந்துள்ளது ஆலயம். சாலையை ஒட்டி சங்கு தீர்த்தம் சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமாய் காட்சி தருகின்றது.

1943-ல் கூவம் நதியில் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் இந்த தீர்த்தக் குளத்தின் படித்துறைகள் சேதமடைந்தது. புனரமைப்பு செய்தால், மீண்டும் பொலிவுறும்.திருக்குளத்தைக் கடந்திட, ஆலயத்திற்கு வெளியே தென்மேற்கில் அழகிய சிற்றம்பல சுவாமிகளின் சமாதிக் கோயில் தனியொரு ஆலயமாகத் திகழ்கிறது. மிகப் பெரியதொரு முகப்பு மண்டபம். உள்ளே கணபதியும், கந்தனும் இருபுறங்களிலும் காட்சி தர, கருவறையில் சிவலிங்கம்ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. மனமுருகி இவரை வேண்டிட, நல்லருள்கிடைப்பது உறுதி.பின் ஆலயத்தின் தென்வாயில் வழியே உள் நுழைக்கின்றோம். இடதுபுறம் திரும்ப, வரகு விநாயகர் தனிச்சந்நதியில் திருக்காட்சித் தருகின்றார். கி.பி.12-ஆம் நூற்றாண்டில் திருவிற்கோலமுடையான் என்பவன் இச்சந்நதியை கட்டியுள்ளான். கணபதியை கைதொழுது, ஐயனைக் காண விழைகின்றோம். தெற்கு வாசல் முன்னே, முகமண்டபம் சிம்மத்தூண்களைக் கொண்டு பல்லவர் கலைத்திறனை வெளிப்படுத்தினாலும், கல்வெட்டுகள் என்னவோ சோழர்களை பிரதிபலிக்கின்றது. ஒரே மகாமண்டபத்தைக் கொண்டு கிழக்குப் பார்த்த ஸ்வாமி சந்நதியும், தெற்கு பார்த்த அம்பாள் சந்நதியும் அமைந்துள்ளது. மகாமண்டபத்தில் நின்றவாறே ஒருசேர சுவாமியையும், அம்பாளையும் தரிசனம் செய்யலாம். சுவாமி சந்நதியின் அர்த்தமண்டபத்தில் ஓர் கணபதி காணப்படுகின்றார். கருவறையுள் சிறியதொரு லிங்கமாக தரிசனம் தந்தருள்கின்றார் கலிங்கநாதீஸ்வரர். வழவழ பச்சைக்கல்லால் ஆன மூர்த்தம்.

கலியுகத்தில் அஞ்சுவோருக்கு அபயம் தந்தருளும் இறைவன் என்கிற பொருளில். கலியஞ்சீஸ்வரர் என்றும் இவர் அழைக்கப்படுகின்றார்.அம்பிகையாக தாயினும் நல்லாள்சிறிய திருமேனி கொண்டு பத்ம பீடத்தின் மீது நின்றவண்ணம் எழில் நகை சிந்துகின்றாள். திருமூலர் திருமந்திரத்தில் ‘‘தாயினும் நல்லாள் தாள் சடையோனேளே’’ என்கிற பாடல் வரிகளில் வரும் பெயரை இங்கு அம்பாளுக்கு சூட்டி மகிழ்கின்றார் அழகிய சிற்றம்பலநாத சுவாமிகள். தாயைவிடவும் தயை காட்டுபவள். கேட்கும் வரம் தந்தருளுபவள். இவ்வன்னைக்கு `காமாட்சி’ என்கிற பெயரும் உண்டு.அன்னையை வணங்கி, ஆலய வலம் வருகையில் இடையே அழகிய கலை நயம் மிகுந்த கும்பஞ்சரங்கள் பராந்தகச் சோழனின் படைப்பு இது என பறைசாற்றுகின்றன. கோஷ்ட மாடங்களில், முதலில் வலம்புரி கணபதி வீற்றுள்ளார். தென்முகக் கடவுளான தட்சிணாமூர்த்தி பச்சைக்கல்லில் பளபளக்கின்றார். துர்கை, விஷ்ணு துர்கையாக திருவருள் பொழிகின்றாள். சண்டிகேஸ்வரர் விரித்த ஜடாமுடியுடன் விசித்திரமாக காணப்படுகின்றார். மேற்கு ஸ்தானத்தில் வள்ளி – தெய்வானையுடன் சுப்பிரமணியர் வீற்றருள்கின்றார். இப்பதி நந்தியம் பெருமானின் வலது கண் சூரியன் போன்றும், இடது கண் சந்திரன் போன்றும் வடிவமைக்கப்பட்டிருப்பது அபூர்வ அமைப்பாகும். ஈசான பாகத்தில் காலபைரவர் குடிகொண்டுள்ளார்.கருவறையின் வெளிப்புறச் சுவரில் தொண்டை மண்டல திருத்தலங்களின் வரலாற்றினை சிறிய வடிவில் புடைப்புச் சிற்பங்களாக வடித்துள்ளனர் சோழர்கள்.

அதில், பசுபூஜிக்கும் சிவன் திருப்பாசூரையும், மயில் பூஜிக்கும் சிவன் மயிலாப்பூரையும், யானை பூஜிக்கும் சிவம் திருக்காளத்தியையும், கழுகு பூஜிக்கும் சிவன் திருக்கழுகுன்றத்தையும், அனுமன் பூஜிக்கும் சிவன் ராமகிரியையும் தத்துரூபமாக நினைவு கூர்கின்றன. மேலும் அப்பர், சம்பந்தர், குபேரன், ரம்பா, ஊர்வசி போன்ற சிற்பங்களும் சிறப்புற வடிக்கப்பட்டுள்ளன. சிற்பக் கூடமாய் ஆலயம் திகழ்ந்தாலும், உழவாரப் பணி செய்தால்தான் பொலிவு பெறும்.பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் காலத்தின் எட்டு கல்வெட்டுகள் இங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 1947-ல் இந்திய தொல்பொருள் துறையினரால் இவ்வெட்டு கல்வெட்டுகளும் படியெடுக்கப்பட்டுள்ளன.கல்வெட்டில் இவ்வூர், ஜெயங்கொண்ட சோழமண்டலத்து, மணவிற்கோட்டத்து, தியாகசமுத்திரநல்லூர் இறையாஞ்சேரி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தல இறைவன் “கலியஞ்சீஸ்வர மகாதேவர்’’ என்று அழைக்கப்பட்டுள்ளார். 1237-ல் இராஜராஜதேவன் எனப்படும் மூன்றாம் இராஜராஜன் தனது 22-ஆம் ஆட்சியாண்டு கல்வெட்டு ஒன்றில் சிந்தனை உடையார் என்கிற பெண்மணி தனது கணவன் தியாகமேகன் என்பவனது நினைவாக இச்சிவாலயத்திற்கு விளக்கு தானம் வழங்கிய செய்தி தெரியவருகிறது.

அனைத்து சிவாலய விசேஷங்களும் இங்கு சிறப்புற நடத்தப்படுகின்றன. மாத பிரதோஷங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. அதோடு மாதாமாதம் வரும் திருவாதிரை நட்சத்திரத்தன்று அழகிய சிற்றம்பல சுவாமிகளுக்கு சிறப்பு பூஜை நடக்கின்றது. ஆருத்ரா அன்று பக்தர்களால் இவருக்கு குரு பூஜை நடத்தப்படுகின்றது. சித்ரா பௌர்ணமி அன்று விசேஷ அபிஷேக – அலங்கார – ஆராதனைகள் இங்கு வருடாவருடம் சிறப்புடன் நடைபெற்று வருகின்றன. ஒரு கால பூஜை மட்டும் நடைபெறும் இவ்வாலயம், தினமும் காலை 9 மணி முதல் 12 மணி வரையும், மாலை 5 மணி முதல் 6:30 மணி வரையும் திறந்திருக்கும். சனி பிரதோஷம் தொடங்கி, தொடர்ந்து ஏழு பிரதோஷங்கள் இங்கு சிவன் – பார்வதிக்கு பால், தயிர், தேன் அபிஷேகத்திற்கு தந்து, வழிபட, ஏழரை நாட்டுச் சனி, அஷ்டமச் சனி, கண்டகச் சனி, பாதச்சனி, பில்லி, சூனியம், ஏவல் போன்ற தீவினைகள் அகலும். அதோடு கலிகால கஷ்டங்கள் யாவும் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.

இங்கு சுவாமிக்கு அபிஷேகம் நடத்தி புது வஸ்திரம் சாற்றி, எலுமிச்சம்பழத்தை வைத்து, பூஜித்து, அதை எடுத்துச் சென்று சாறு பிழிந்து குடித்தால், குழந்தையில்லா தம்பதிகளுக்கு குழந்தைப்பேறு கிட்டும்.ஏழு சுமங்கலிகளுக்கு இங்கு ஆலயத்தில் மங்களப் பொருட்களும், புடவை மற்றும் மஞ்சள் கிழங்கு வைத்து கொடுத்திட, புனர்பூசதோஷம் நீங்கும். இத்தலத்தோடு அருகிலுள்ள சிவபுரம், கூவம், இலம்பையங்கோட்டூர், பேரம்பாக்கம் நரசிங்கபுரம் மப்பேடு போன்ற சிறப்பு வாய்ந்த தலங்களையும் தரிசித்து மகிழ்ந்திடலாம். இக்கலியுகத் துன்பங்களிலிருந்து மீண்டிட கலிங்கநாதீசப் பெருமானை வணங்கி, வளங்கள் பல பெறுவோம். ஆலயத் தொடர்புக்கு:- 9840987534. பூந்தமல்லியில் இருந்து 34 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பேரம்பாக்கத்தை அடைந்து, அங்கிருந்து 2 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள இருளஞ்சேரியை அடையலாம். சென்னையில் இருந்து 56 கிலோ மீட்டர் தூரத்தில் இருளஞ்சேரி அமைந்துள்ளது.

 

The post கலியுகக் கவலை நீக்கும் கலிங்கநாதீஸ்வரர் appeared first on Dinakaran.

Tags : Kalinganatheeswarar ,Kaliyuga ,Kailaina Nathara ,Irulancheri ,Kailainathar ,Kali Yuga ,
× RELATED மனநோயை குணப்படுத்தும் குணசீலப் பெருமாள்