×

இந்த வார விசேஷங்கள்

சாமிதோப்பு அய்யா வைகுண்டர் அவதார தினம்

3.3.2024 – ஞாயிறு

இன்று அய்யா வைகுண்டசாமி 192வது அவதார தின விழா. அவதார தின விழா ஊர்வலம் ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்கு நாகர்கோவில் நாகராஜா கோயில் திடலில் இருந்து சாமிதோப்பை நோக்கி புறப்படுகிறது. நாகராஜா திடலில் இருந்து தொடங்கும் ஊர்வலம் கோட்டார், இடலாக்குடி, சுசீந்திரம், வழுக்கம் பாறை, ஈத்தங்காடு, வடக்குத்தாமரைகுளம் வழியாக சாமிதோப்பு தலைமைப்பதியை வந்தடைகிறது. ஊர்வலத்தில் குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள்.
சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடியவர் அய்யா வைகுண்டர். மும்மூர்த்திகளின் அவதாரமாக அய்யா வைகுண்டரை அவர் வழியை பின்பற்றும் மக்கள் பார்க்கின்றனர். கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பில் அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதி உள்ளது. அவதார தினத்தையொட்டி அய்யா வழி மக்கள் பாதயாத்திரையாக பல ஊர்களில் இருந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சாமிதோப்பு வந்து அருள் பெற்றுச் செல்வர்.

திருக்காளத்திநாதர் மாசிப் பெருவிழா

3.3.2024 – ஞாயிறு

பஞ்ச பூதத் தளங்களில் வாயுத்தலமாக விளங்குவது காளஹஸ்தி. உத்தரவாகினியாகப் பொன்முகலி ஆறு பாயும் ஊர், ராகு, கேது ஆகிய சாயா கிரகங்கள் நல்ல கிரகங்களாக நன்மை வழங்கும் புண்ணிய க்ஷேத்திரம் என்று இவ்வூருக்கு மகிமைகள் நிறைய உண்டு. சிவன் கோயிலில்
மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா ஆண்டுதோறும் நடைபெறும். அதன் கொடியேற்றம் வெகுசிறப்பாக நடந்தது. பக்த கண்ணப்பர் கோயிலில் பிரம்மோற்சவ கொடி ஏற்றப்பட்டது. இதனை தொடர்ந்து காளத்திநாதர் கோயில் முன் உள்ள தங்கக் கொடி மரத்தில் வேதங்கள் முழங்க, உற்சவர்கள் முன்னிலையில், சிவாச்சாரியார்கள் பிரம்மோற்சவ கொடியை ஏற்றினர். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். காலை, வெள்ளி சப்பரத்தில் ஞானபூங்கோதை சமேதமாய் உற்சவர் காளத்திநாதர், விநாயகர், முருகர் ஆகியோரின் திருவீதி உலா நடந்தது. இன்றும் வாகன உலா
நடைபெறும்.

வாஸ்து

5.3.2024 – செவ்வாய்

வாஸ்து நாளில், வாஸ்து பகவானை வழிபடுவது சிறப்பு. இல்லத்தின் திருஷ்டியைப் போக்கி, தொழிலில் மேன்மையும் உத்தியோகத்தில் உயர்வும் தந்து அருளுவார் வாஸ்து பகவான். இன்று வாஸ்து நாள். வாஸ்து பகவான் கண் விழிக்கும் நாளே வாஸ்து நாள் எனப்படுகிறது. சித்திரை, வைகாசி, ஆடி, ஆவணி, ஐப்பசி, கார்த்திகை, தை, மாசி என எட்டு மாதங்களில் வரும் வாஸ்து நாட்களில் பூமி பூஜை செய்யலாம். ஒரு வருடத்தில் எட்டு வாஸ்து நாட்கள் மட்டுமே வரும். அந்த எட்டு நாட்களிலும் வாஸ்து புருஷன் ஒன்றரை மணிநேரம்தான் கண் விழித்திருப்பார்.

வாஸ்து பகவான் விழித்திருக்கும் நாட்களில் ஒருநாளில் ஒன்றரை மணி நேரம் மட்டுமே விழித்திருப்பார். அப்படி அவர் விழித்ததும் காலையிலேயே நீராடுவார் என்றும் பூஜைகள் செய்வார். இதையடுத்து பூஜைக்குப் பின்னர் உணவு எடுத்துக் கொள்ளுவார். அப்படி நிம்மதியும் நிறைவுமாக இருக்கும் தருணம்தான், வாஸ்து பூஜைக்கான நேரம். பூமிபூஜைக்கான நேரமாகும். பூமிபூஜையின் போது வாஸ்து ஹோமம் மற்றும் பூஜைசெய்தால் கட்டுமானப்பணி தடையின்றி நிறைவேறும். இன்று பூமி காரகனாகிய செவ்வாய்க் கிழமை வாஸ்து செய்வது விசேஷம். இன்று வேறு தோஷங்கள் பார்க்க வேண்டாம். நேரம், வாக்கிய பஞ்சாங்கப்படி காலை 9.12 முதல் 10.42 வரை.

ஏகாதசி

6.3.2024 – புதன்

மகாவிஷ்ணுவின் அருளை வாரி தரும் ஏகாதசி விரதம். ஏகாதசி திதி என்றாலே விஷ்ணுவின் வழிபாட்டு நாள்தான். நாம் இருக்கும் விரதங்களில் ஏகாதசி விரதம்தான் அதிகம் புண்ணியம் அளிக்கும் விரதமாக கருதப்படுகிறது. இன்று ஸ்ரீ ரங்கத்தில் நம் பெருமாளுக்கு சந்தன மண்டபத்தில் விசேஷ திருமஞ்சனம் நடைபெறும். ஏகாதசியில் விரதம் இருப்பவர்களுக்கு வாழ்க்கையில் இருக்கும் எல்லா நலன்களும் கிடைக்கும் என விஷ்ணு புராணம் நமக்கு விளக்குகிறது. திதிகளில் பதின்றொவது திதியாக வருவது ஏகாதசி, வளர்பிறை, தேய்பிறை முறையே ஒவ்வொரு மாதத்திற்கும் இரண்டு ஏகாதசிகள் உண்டு. இப்படி ஆண்டுக்கு 24 ஏகாதசிகள் இருக்கின்றன. அவற்றிற்கு வெவ்வேறு பெயர்கள், சிறப்பு பலன்கள் உள்ளன. அதிகாலையில் எழுந்து, குளிர்ந்த நீரில் நீராடி, விஷ்ணு பகவானை வழிபட வேண்டும். அன்றைய தினம் முழுவதும் விரதம் இருந்து, மறுநாள் காலை பூஜை செய்த பின் விரதம் முடிக்க வேண்டும். விரதம் இருக்கும்போது திருமாலின் நாமத்தை உச்சரிக்கவேண்டும். தேவையுள்ள எளியவர்களுக்கு உணவு, உடை போன்ற அத்தியாவசியப் பொருட்களை தானம் செய்யலாம். ஏகாதசி அன்று பெருமாளுக்கு நெல்லிக்காய் நைவேத்தியம் வைத்து வழிபடலாம். உங்கள் வீட்டின் அருகே ஏதேனும் நெல்லிமரம் உண்டெனில் அதற்கு தீபாராதனை, தூபராதனை காட்டி வழிபடுங்கள். இந்த பாசுரத்தை சொல்லி வழிபடுங்கள்.

`துப்புடையாரை அடைவதெல்லாம்
சோர்விடத்துத் துணையாவ ரென்றே
ஒப்பிலேனாகிலும் நின்னடைந்தேன்
ஆனைக்குநீ அருள்செய் தமையால்
எய்ப்புஎன்னை வந்துநலியும்போது
அங்குஏதும் நானுன்னை நினைக்க
மாட்டேன்
அப்போதைக்கு இப்போதே சொல்லி
வைத்தேன்
அரங்கத் தரவணைப் பள்ளியானே!’

காரி நாயனார் குரு பூஜை
6.3.2024 – புதன்

இன்று, மாசி மாதம் பூராடம். காரி நாயனார் குருபூஜை தினம் ஒவ்வொரு நாயன்மாருக்கும் ஒரு சிறப்புண்டு. அதில் காரி நாயனார் தன்னுடைய பூத உடம்போடு கயிலை சேர்ந்து இன்புற்றார் என்பது பெருமை. இதை சேக்கிழார் பெருமான் மிக அற்புதமாக தன்னுடைய பெரிய புராணத்தில் பாடுகின்றார்.

`ஏய்ந்த கடல் சூழ் உலகில் எங்கும் தம்
இசை நிறுத்தி
ஆய்ந்த உணர்விடை அறா அன்பினராய்
அணி கங்கை
தோய்ந்த நெடும் சடையார்தம் அருள்
பெற்ற தொடர்பினால்
வாய்ந்த மனம் போலும் உடம்பும்
வடகயிலை மலை சேர்ந்தார்’.

அங்கே அவர் ஒளிஉடம்பு பெற்றார் என்பது வரலாறு. காலனைக் கடிந்து, தன்னைச் சரணடைந்த மார்க்கண்டய மகரிஷிக்கு என்றும் பதினாறு என்ற வரத்தை அளித்தவர் திருக்கடவூர் அமிர்தகடேஸ்வரர். அபிராமி அன்னை கோயில் கொண்டுள்ள அத்தலத்தில் பிறந்தவர் காரி நாயனார். செந்தமிழ் கற்றவர். நற்றமிழ் கற்ற நாவால் எப்பொழுதும் நமசிவாய என்ற ஐந்து எழுத்து மந்திரத்தை ஓதிக் கொண்டிருப்பவர். நான்கு வகை கவிபாடுவதில் வல்லவர். சேர, சோழ, பாண்டிய மன்னர்களிடம் சேர்ந்து, பாடி, பெரும் பரிசுகளைப் பெற்று, அந்த பரிசுகளை எல்லாம் சிவனடியார்களுக்கும் சிவனுடைய திருத்தலத் தொண்டுக்கும் முழுமையாக பயன்படுத்தியவர். கயிலைநாதனை கண நேரமும் மறவாதவர். அதனால் சிவபெருமான் இவரை நேரடியாக கயிலைப் பதியை அளித்தார்.

திருவோண விரதம்

7.3.2024 – வியாழன்

இன்று, சந்திரனுக்குரிய திருவோண நாள். குரு வாரம் வருவது சிறப்பு. சந்திரனும் குருவும் சேர்ந்த யோக நாளில் எந்த விரதம் இருந்தாலும் சிறப்பான பலன் அளிக்கும். திருமாலுக்கு உரிய சிறந்த நட்சத்திரம் திருவோணம். திருவோணத்தான் உலகு ஆளும் என்பார்களே என்று திருவோண நட்சத்திரத்தின் சிறப்பைச் சொல்வார்கள். ஒவ்வொரு திருவோண நட்சத்திரத்திலும் விரதமிருந்து திருமாலை வழிபடுவது பூர்வ ஜென்ம வினைகளைப் பூண்டோடு ஒழிக்கும். கும்பகோணத்திற்கு அருகே உள்ள ஒப்பிலியப்பன் கோயில் போன்ற சில தலங்கள் திருவோணத்தின் சிறப்பை சொல்லும் தலங்களாகும். அனேகமாக எல்லாப் பெருமாள் கோயில்களிலும் திருவோண சிறப்பு வழிபாடுகளும் திருமஞ்சனமும் நடைபெறும். சில கோயில்களில் உள் பிரகாரப் புறப்பாடும் உண்டு. இன்றைய தினம் காலை எழுந்து சூரிய நமஸ்காரம் செய்துவிட்டு திருவோண விரதத்தை ஆரம்பிக்க வேண்டும். மாலையில் துளசி மாலையோடு சென்று அருகில் உள்ள பெருமாள் கோயிலில் விளக்கேற்றி தரிசனம் செய்துவிட்டு வீட்டிற்கு வந்து பூஜை அறையில் விளக்கேற்றி சுவாமியை வணங்கி பாலோ பழமோ நிவேதனம் செய்து விரதத்தை முடிக்க வேண்டும். திருவோண விரதம் இருப்பதால் சகல ஐஸ்வர்யங்களும் பெருகும். நல்ல புத்திக்கூர்மை ஏற்படும். சந்திரதோஷம் விலகுவதுடன், சந்தோஷமான மணவாழ்வு அமையும். இன்று சொல்ல வேண்டிய பாசுரம்.

`நான்ஏதும் உன்மாய மொன்றறியேன்
நமன்தமர் பற்றி நலிந்திட்டு இந்த
ஊனேபுகே யென்று மோதும் போது
அங்கேதும் நான்உன்னை நினைக்க
மாட்டேன்
வானேய் வானவர் தங்களீசா!
மதுரைப் பிறந்த மாமாயனே! என்
ஆனாய்! நீஎன்னைக் காக்க வேண்டும்
அரங்கத் தரவணைப் பள்ளியானே!’

பிரதோஷம் – சிவராத்திரி

8.3.2024 – வெள்ளி

இன்று மங்கலகரமான வெள்ளிக் கிழமை. சிவராத்திரி. சிவராத்திரி விரதம் இருப்பவர்கள் இரவு உறங்காமல் சிவபூஜை, சிவ நாமஜெபம், சிவ தியானம், சிவபஜனை, சிவதரிசனம், சிவத்தொண்டு ஆகியவற்றைச் செய்ய வேண்டும். நமசிவாய என்ற மந்திரத்தை இரவு முழுவதும் உச்சரித்தால், மகத்தான பலன்கள் கிடைக்கும். வாழ்வில் செல்வம், வெற்றி ஆகியவற்றை பெற விரும்புவோர், அவசியம் சிவராத்திரி விரதம் இருக்க வேண்டும். சிவாலயத்தில் பலிபீடத்துக்கு அருகில்தான் நமஸ்கரிக்க வேண்டும். ஆண்கள் அஷ்டாங்க நமஸ்காரமும், பெண்கள் பஞ்சாங்க நமஸ்காரமும் செய்ய வேண்டும்.சிவாலயத்துக்குள் எப்போதும் திரியாங்க நமஸ்காரம் (இருகரங்களையும் சிரம் மேல் குவித்து) செய்ய வேண்டும். கிழக்கு நோக்கிய சந்நதியானால் பலிபீடத்திற்குத் தென்கிழக்கு மூலையில் தலை வைத்து வணங்க வேண்டும்.

தெற்கு, மேற்கு நோக்கிய சந்நதிகளில் பலிபீடத்திற்கு தென்மேற்கு மூலையில் தலை வைத்து வணங்க வேண்டும். வடக்கு நோக்கிய சந்நதியானால் பலிபீடத்திற்கு வடமேற்கு மூலையில் தலை வைத்து வணங்க வேண்டும். சிவராத்திரி அன்று உபவாசம் இருக்க வேண்டும்.உபவாசம் என்றால் என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டும். உபவாசம் என்பது உப+வாசம் என்று பிரியும். இறைவனுக்கு அருகில் செல்வது உண்ணாநோன்பு. அனேகமாக அனைத்து சமயநூல்களும் உண்ணாநோன்பை வலியுறுத்துகின்றன. உண்ணாநோன்பு என்பது உயிருக்கும் மட்டுமல்லாமல் உடலுக் கும் நன்மை செய்கின்றது. உடலில் உள்ள நச்சுப்பொருட்களை எல்லாம் உண்ணாநோன்பு வெளியேற்றுகின்றது. விரத நாளில் உண்ணாமல் இருப்பது மட்டுமல்ல, கெட்ட எண்ணங்களை எண்ணாமல் இருப்பதே உபவாசம் என்று பவிஷ்ய புராணம் சொல்கிறது.

சிவராத்திரியின் நோக்கம் தெரிந்துகொள்ள வேண்டும். ஒருவன் நிம்மதியாக இருக்க வேண்டும் என்று சொன்னால், அவனுக்கு வேண்டிய குணங்கள் பொறுமை, மௌனம், அகிம்சை, சத்தியம், தயை, தானம், தூய்மை, புலனடக்கம். அக விழிப்புணர்வைத் தூண்டும் இந்த குணங்களை அடையச் செய்வதே சிவராத்திரியின் நோக்கமாகும்.இறைவனின் பெயர்களை 16 முறை சொல்லி பூஜிப்பது ஷோடச பூஜை. 108 முறை சொல்லி பூஜை செய்வது அஷ்டோத்திரம். முன்னூறு முறை இறைவனின் நாமங்களை சொல்லி பூஜிப்பது திரிசதி. ஆயிரம் முறை சொல்லி பூஜிப்பது சகஸ்ரநாம அர்ச்சனை. ஒரு லட்சம் முறை சொல்லி பூஜிப்பது லட்சார்ச்சனை. ஒரு கோடி முறை சொல்லி பூஜை செய்வது கோடி அர்ச்சனை. சிவநாமத்தை ஒரு கோடி முறை சொல்வதன் மூலமாக பிறவிப்பிணி அகன்று பிறவாப் பேரின்பநிலை பிறக்கும்.

The post இந்த வார விசேஷங்கள் appeared first on Dinakaran.

Tags : Samitoppu Ayya Vaikunda Swami Incarnation Day ,Avatar Day ,Ayya ,Vaikundaswamy ,Incarnation Day Festival ,Nagaraja temple ,Nagarkot ,Samithop ,
× RELATED அய்யா வைகுண்டரை பற்றிய சனாதன பேச்சு ஆளுநரை கண்டித்து குமரியில் போஸ்டர்