×

கருக்கலைப்பு செய்த நர்சிங் மாணவி பலி: டாக்டர் உட்பட 3 பேர் மீது வழக்கு

திருச்சி: திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி காந்திகிராமத்தில் உள்ள ஒரு கல்லூரி விடுதியில் தங்கி நர்சிங் பட்டய படிப்பு படித்து வந்தார். திண்டுக்கல்லில் உள்ள தனது பாட்டியின் பராமரிப்பில் வளர்ந்து வந்தார். கடந்த மாதம் 22ம் தேதி விடுதியில் உள்ள மாணவியை திருச்சியில் வசிக்கும் அவரது உறவினர் ஒருவர் பார்க்க சென்றபோது, அவரது உடலில் மாற்றங்கள் இருந்தது. இதில் சந்தேகம் அடைந்த உறவினர், மாணவியை அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு மாணவியை பரிசோதித்த போது, அவர் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது.

இதில் அதிர்ச்சி அடைந்த உறவினர், மாணவியிடம் விசாரித்தபோது, சின்னாளப்பட்டியில் உள்ள ஒரு காப்பகத்தில் கணக்காளராக வேலை செய்யும் திண்டுக்கல்லை சேர்ந்த ராம்குமார் (27) என்பவரை காதலிப்பதாக தெரிவித்துள்ளார். கல்லூரி விடுமுறையின்போது அம்பாத்துறையில் உள்ள அவரது அண்ணன் வீட்டுக்கு அழைத்து சென்று, தன்னுடன் ராம்குமார் தனிமையில் இருந்ததாகவும், அதனால்தான் கர்ப்பம் ஆனதாகவும் கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து மாணவியின் கர்ப்பத்தை கலைக்க முடிவு செய்த உறவினர், அவரை திருச்சி உறையூரில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றார்.

அங்கு அவருக்கு கடந்த 2 நாட்களுக்கு முன் டாக்டர் கருக்கலைப்பு செய்துள்ளார். உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால் உடனடியாக மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாணவி உயிரிழந்தார். இதுதொடர்பாக மாணவியின் சகோதரி கொடுத்த புகாரின்பேரில் ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் இதுகுறித்து போலீசார் காதலன் ராம்குமார், மாணவியின் உறவினர் மற்றும் சிறுமிக்கு கருக்கலைப்பு செய்த டாக்டர் சுதர்சன் ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கருக்கலைப்பு செய்த நர்சிங் மாணவி பலி: டாக்டர் உட்பட 3 பேர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Trichy ,Athur ,Dindigul ,Gandhigram ,
× RELATED திருச்சி விமான நிலையத்தில் போலி...