×

வீட்டு சிலிண்டர் விலையில் 7வது மாதமாக மாற்றமில்லை வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ரூ.23.50 அதிகரிப்பு: சென்னையில் ரூ.1,960.50 ஆக நிர்ணயம்

சேலம்: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை கணக்கில் கொண்டு பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் உள்ளிட்ட எரிபொருட்களின் விலையை, எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு நிர்ணயித்து வருகிறது. இதில், காஸ் சிலிண்டர் விலை மாதந்தோறும் 1ம் தேதி மாற்றியமைக்கப்படுகிறது. இந்நிலையில் நடப்பு மாதத்திற்கான (மார்ச்) புதிய விலை பட்டியலை நேற்று அதிகாலை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு வெளியிட்டது. அதில், தொடர்ந்து 7வது மாதமாக வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றத்தை ஏற்படுத்தாமல், கடந்த மாத விலையே நீடிப்பதாக அறிவிக்கப்பட்டது.

இதனால், நடப்பு மாதத்திற்கு வீட்டு சிலிண்டர் டெல்லியில் ரூ.903, மும்பையில் ரூ.902.50, கொல்கத்தாவில் ரூ.929, சென்னையில் ரூ.918.50, சேலத்தில் ரூ.936.50 ஆக நீடிக்கிறது. அதேவேளையில், 19 கிலோ எடை கொண்ட வர்த்தக காஸ் சிலிண்டர் விலையை ரூ.23 முதல் ரூ.26 வரை அதிகரித்துள்ளனர். கடந்த மாதம் (பிப்ரவரி) சென்னையில் வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ரூ.1,937 ஆக இருந்தநிலையில், ரூ.23.50 அதிகரிக்கப்பட்டு ரூ.1,960.50 ஆகவும், சேலத்தில் ரூ.1,885.50ல் இருந்து ரூ.23.50 அதிகரித்து ரூ.1,909 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவே டெல்லியில் ரூ.1,769.50ல் இருந்து ரூ.25.50 அதிகரித்து ரூ.1,795 ஆகவும், மும்பையில் ரூ.1,723.50ல் இருந்து ரூ.25.50 அதிகரித்து ரூ.1,749 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.1,887ல் இருந்து ரூ.24 அதிகரித்து ரூ.1,911 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

* தேர்தலுக்காக விரைவில் விலை குறைப்பு?
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால் காஸ் சிலிண்டர் விலையை ஒன்றிய பாஜ அரசு பெருமளவு குறைக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், விலை குறைப்பு நடவடிக்கையை தற்போது அரசு மேற்கொள்ளவில்லை. இதனால், இன்னும் ஓரிரு நாளில் வீட்டு உபயோக சிலிண்டர் மற்றும் பெட்ரோல், டீசல் விலையை தேர்தலுக்காக குறைக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

The post வீட்டு சிலிண்டர் விலையில் 7வது மாதமாக மாற்றமில்லை வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ரூ.23.50 அதிகரிப்பு: சென்னையில் ரூ.1,960.50 ஆக நிர்ணயம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Salem ,Dinakaran ,
× RELATED சேலம் ஆத்தூரில் அமைச்சர் உதயநிதி...