×

செங்கல்பட்டில் சிலிண்டர் வெடித்து தீப்பிடித்ததில் 2 குழந்தைகள் பரிதாப பலி: மேலும் 2 பேர் சீரியஸ்

செங்கல்பட்டு: செங்கல்பட்டில் நேற்றிரவு வீட்டுக்குள் சமையல் காஸ் சிலிண்டர் வெடித்து தீப்பிடித்ததில் தாய் மற்றும் 3 குழந்தைகள் பலத்த தீக்காயம் அடைந்தனர். இதில், தீவிர சிகிச்சை பலனின்றி இன்று காலை 8 வயது சிறுமி மற்றும் 2 வயது சிறுவன் பரிதாபமாக பலியாகிவிட்டனர். மேலும் 2 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். செங்கல்பட்டு நகராட்சிக்கு உட்பட்ட பெரியமணியக்கார தெருவில், பீகார் மாநிலத்தை சேர்ந்த சதாம் (28) என்பவர், தனது மனைவி ரோஜி குத்தூன் (24), மகள் ரஜியா பர்வீன் (8), சாய்பலி (5), அப்தாப் (2) என்ற 2 மகன்கள் என குடும்பத்துடன் வசித்து வருகிறார். செங்கல்பட்டு ரயில்வே கேன்டீனில் சதாம் சமையல் வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று வழக்கம் போல் சதாம் வேலைக்கு சென்றுவிட்டார். இதைத் தொடர்ந்து, நேற்று மாலை வீட்டில் இருந்த அவரது மனைவி ரோஜி குத்தூன் குழந்தைகளுக்கு இரவு உணவு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது சமையல் காஸ் சிலிண்டர் திடீரென வெடித்து சிதறியதில் வீடு முழுவதும் தீப்பிடித்தது. இதில் தாய் ரோஜி குத்தூன் மற்றும் 3 குழந்தைகளும் 80 சதவீத பலத்த தீக்காயங்களுடன், உயிருக்கு போராடி கொண்டிருந்தனர்.

அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தாய் ரோஜி குத்தூன், மூத்த மகள் ரஜியா பர்வீன் ஆகிய இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. மகன்களான சாய்பலி, அப்தாப் ஆகிய இருவரும் மேல்சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்நிலையில், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் 80 சதவீத தீக்காயங்களுடன் தீவிர சிகிச்சை பெற்று வந்த 8 வயது மகள் ரஜியா பர்வீன் இன்று காலை பரிதாபமாக பலியானார்.

அதே சமயம், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த 2 வயது மகன் அப்தாப் பரிதாபமாக பலியானார். இதுகுறித்து தகவலறிந்ததும் செங்கல்பட்டு நகர போலீஸ் எஸ்ஐ டில்லிபாபு சம்பவ இடத்துக்கு சென்று தீவிர விசாரணை நடத்தினார். மேலும், தீ விபத்தில் பலியான 2 குழந்தைகளின் சடலங்களை கைப்பற்றி, அந்தந்த அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இதுகுறித்து செங்கல்பட்டு நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து, பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் சோகம் நிலவியது.

The post செங்கல்பட்டில் சிலிண்டர் வெடித்து தீப்பிடித்ததில் 2 குழந்தைகள் பரிதாப பலி: மேலும் 2 பேர் சீரியஸ் appeared first on Dinakaran.

Tags : Chengalpattu ,Chengalpatli ,Dinakaran ,
× RELATED வேட்பாளர்கள் பின்பற்ற வேண்டி தேர்தல்...