×

நாட்டு வெடிகுண்டு வீசி திமுக பிரமுகர் கொலை வழக்கில் 5 பேர் சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் சரண்: வண்டலூரில் கடைகள் அடைப்பு

கூடுவாஞ்சேரி: வண்டலூரில் நேற்றிரவு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழாவுக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வந்த திமுக பிரமுகர் ஆராமுதனின் கார்மீது நாட்டு வெடிகுண்டு வீசி, அவரை ஒரு மர்ம கும்பல் சரமாரி வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி சென்றது. இதுதொடர்பாக ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம கும்பலை 6 தனிப்படையினர் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், இக்கொலை வழக்கு தொடர்பாக இன்று காலை சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் 5 பேர் சரணடைந்ததாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னை அருகே வண்டலூர் ஊராட்சிக்கு உட்பட்ட வேம்புலி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வி.எஸ்.ஆராமுதன் (56). இவர் ஏற்கெனவே வண்டலூர் ஊராட்சி மன்றத் தலைவராகவும், தற்போது காட்டாங்கொளத்தூர் வடக்கு ஒன்றிய திமுக செயலாளராகவும் ஒன்றிய சேர்மனாகவும் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்றிரவு வண்டலூர் மேம்பாலம் அருகே தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா மற்றும் காஞ்சிபுரம் எம்பியின் நிதியில் அமைக்கப்பட்ட புதிய பேருந்து நிறுத்த திறப்புவிழாவுக்கான பணிகளை ஒன்றிய செயலாளர் ஆராமுதன் மேற்கொண்டிருந்தார்.

இப்பணி தொடர்பாக நேற்றிரவு புதிய பேருந்து நிறுத்த பகுதியில் தனது ஆதரவாளர்களுடன் ஆராமுதன் பேசிக்கொண்டிருந்தார். பின்னர் காரில் ஏறி, மேம்பாலத்துக்கு அருகே உள்ள தனது கட்சி அலுவலகத்துக்கு கிளம்ப முயன்றார். அப்போது அவரை நோட்டமிட்டபடி பின்தொடர்ந்த 10க்கும் மேற்பட்ட மர்ம கும்பல் காரை சூழ்ந்தது. பின்னர் அக்காரின் இருபக்கத்திலும் நாட்டு வெடிகுண்டுகளை வீசியது. இதில் ஆராமுதனின் இடது கை முறிந்து துண்டாகி விழுந்தது. மேலும், காரிலிருந்து ஆராமுதனை கீழே இழுத்து போட்டு, அவரை மர்ம கும்பல் சரமாரி வெட்டிவிட்டு பைக் மற்றும் காரில் தப்பி சென்றது. இதை பார்த்ததும் கார் டிரைவர் மற்றும் ஆதரவாளர்கள் உயிர் பிழைக்க தப்பி ஓடினர்.

இதுகுறித்து தகவலறிந்ததும் ஓட்டேரி போலீசார் விரைந்து வந்தனர். அங்கு மர்ம கும்பல் தாக்கியதில் படுகாயம் அடைந்த ஆராமுதனை மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். எனினும், மருத்துவமனைக்கு செல்லும் வழியில் திமுக பிரமுகர் ஆராமுதன் பரிதாபமாக பலியானார். அவரது உடல் உடனடியாக அதே மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர் பிரேத பரிசோதனை முடிந்து, இன்று காலை ஆராமுதனின் உடல் அவரது இல்லத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனால் காட்டாங்கொளத்தூர் வடக்கு ஒன்றியத்தில் இன்று நடைபெறவிருந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்பட்டன.

இப்புகாரின்பேரில் ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதி சிசிடிவி காமிரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் ஓட்டேரி, கிளாம்பாக்கம், பள்ளிக்கரணை, மறைமலைநகர், கூடுவாஞ்சேரி மற்றும் பீர்க்கங்கரணை ஆகிய காவல் நிலையங்களை சேர்ந்த இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 6 தனிப்படை போலீசார் மர்ம கும்பல் குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். மேலும், திமுக பிரமுகர் ஆராமுதன் படுகொலையை தொடர்ந்து, இன்று காலை வண்டலூர் ஊராட்சியில் அனைத்து பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டன. இதனால் அங்கு பதட்டம் நிலவியது. இந்நிலையில், இன்று காலை வண்டலூரில் உள்ள அவரது இல்லத்துக்கு ஆராமுதனின் உடல் கொண்டு வரப்பட்டது.

அவரது உடலுக்கு தாம்பரம் மாநகராட்சி துணைமேயர் கோ.காமராஜ், காஞ்சிபுரம் மாவட்ட சேர்மன் படப்பை மனோகரன் உள்பட பல்வேறு திமுக நிர்வாகிகள் மற்றும் பலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இதற்கிடையே, திமுக பிரமுகர் ஆராமுதன் கொலை வழக்கு தொடர்பாக இன்று காலை ஈரோடு அருகே சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் வண்டலூரை சேர்ந்த முனிஸ்வரன் (22), மண்ணிவாக்கத்தை சேர்ந்த சத்தியசீலன் (20), அவினாசியை சேர்ந்த சம்பத்குமார் (20), மணிகண்டன் (22), திண்டுக்கல்லை சேர்ந்த 17 வயது சிறுவன் என 5 பேர் சரணடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து தகவலறிந்ததும் தனிப்படையினர் ஈரோடுக்கு சென்று, சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் சரணடைந்த 5 பேரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

The post நாட்டு வெடிகுண்டு வீசி திமுக பிரமுகர் கொலை வழக்கில் 5 பேர் சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் சரண்: வண்டலூரில் கடைகள் அடைப்பு appeared first on Dinakaran.

Tags : Sathyamangalam court ,DMK ,Vandalur ,Guduvanchery ,Aramudhan ,Chief Minister ,MK Stalin ,Otteri ,Sathyamangalam ,court ,Dinakaran ,
× RELATED வண்டலூர் உயிரியல் பூங்கா 9ம் தேதி திறந்திருக்கும்