×

சேலத்தில் குழந்தைகளைக் கடத்த 400 வெளிநாட்டவர்கள் வந்துள்ளதாக பரவும் காணொளி வதந்தி: தமிழ்நாடு அரசு

சென்னை: சேலத்தில் குழந்தைகளைக் கடத்த 400 வெளிநாட்டவர்கள் வந்துள்ளதாக பரவும் காணொளி வதந்தி என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக குழந்தைகள் கடத்தப்படுவதாக காணொளி வைரலாகி வருகிறது. 400 பேர் வெளிநாட்டில் இருந்து சேலத்தில் இறங்கி உள்ளனர். அவர்கள் 5 முதல் 10 வயதுடைய குழந்தைகளையும், பெண்களையும் கடத்தி வருகின்றனர். எனவே, குழந்தைகளை வெளியே விடாதீர்கள் என்று ஆடியோவுடன் கூடிய 1 நிமிடமும் 18 வினாடிகளும் ஓடக்கூடிய காணொலி ஒன்று வாட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் தமிழ்நாட்டில் குழந்தை கடத்தல் அதிகரித்துள்ளதாகவும் குழந்தைகளைக் கடத்தி அவர்களது உடல் உறுப்புக்களை வெட்டி எடுத்து கொலை செய்யப்படுவதாகவும் வீடியோவும் பரவி வருகிறது.

மேலும், இத்தகவலை செய்தியாக எழுதியும் சிலர் பகிர்ந்து வருகின்றனர். மேலும், இக்காணொளியின் அடிப்படையில் சில தகவல்களைத் தேடிய போது, கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதம் செய்தி நிறுவனங்கள் இக்காணொலி தொடர்பான செய்தி ஒன்றை வெளியிட்டு இருந்தது தெரியவந்தது. அச்செய்தியில் தஞ்சாவூர் பழைய பேருந்து நிறுத்தத்தில் குடிபோதையில் இருந்த வாலிபர் ஒருவர், பள்ளி மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. அந்த, வாலிபரை பொதுமக்கள் சரமாரியாக அடித்துள்ளனர்” இந்த வீடியோ பதிவையும் பரவி வரும் காணொளியில் இருக்கக்கூடிய சிறுமியும் ஒரே சிறுமி என்பது கண்டறியப்பட்டது. மேலும் இத்தகைய வதந்தி தொடர்பாகச் சென்னை காவல் துறை வெளியிட்ட பத்திரிக்கை செய்தியில், குழந்தை கடத்தல் தொடர்பாக மக்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருப்பின் சென்னை பெருநகர காவல் துறை உதவி எண் 100 அல்லது 112 அல்லது அருகில் உள்ள காவல் நிலையத்தை எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம் எனக் குறிப்பிட்டிருந்தது.

இருப்பினும் பம்பல் பகுதியில் திருநங்கை ஒருவரைக் குழந்தை கடத்தலில் ஈடுபடுபவர் என நினைத்து பொது மக்கள் கடுமையாகத் தாக்கி அவரது ஆடைகளைக் கிழித்தனர். திருநங்கை தாக்கப்பட்டது தொடர்பாகக் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து இரண்டு பேரைக் கைதும் செய்துள்ளது. இதேபோல், வட சென்னையிலும் குழந்தை கடத்தலில் ஈடுபடுபவர் என வடமாநில தொழிலாளர் ஒருவரை பொது மக்கள் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இந்த இரண்டு சம்பவங்களும் வதந்தியின் விளைவாக நடந்ததுதான். எனவே வாட்ஸ்அப்பில் எந்த செய்தி வந்தாலும் அதைத் தீர விசாரிக்க வேண்டும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இருந்த போதிலும் குழந்தை கடத்தல் தொடர்பாக வதந்திகள் எழுந்த வண்ணம் இருந்த நிலையில், சேலத்தில் குழந்தைகளைக் கடத்த 400 வெளிநாட்டவர்கள் வந்துள்ளதாக பரவும் காணொளி வதந்தி என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. 400 பேரில் ஒருவர் பெண் குழந்தையை கடத்தியபோது பிடிபட்டார் என பரப்பப்படும் காணொலி முற்றிலும் வதந்தி என்றும் அரசு தெரிவித்தது. பொதுமக்கள் இதுபோன்ற காணொலிகளை நம்பி பதற்றமடைய வேண்டாம்; வதந்தியை பரப்புவது குற்றச்செயல் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post சேலத்தில் குழந்தைகளைக் கடத்த 400 வெளிநாட்டவர்கள் வந்துள்ளதாக பரவும் காணொளி வதந்தி: தமிழ்நாடு அரசு appeared first on Dinakaran.

Tags : Salem ,Tamil Nadu Govt. ,CHENNAI ,Tamil Nadu government ,Tamil Nadu ,Tamilnadu government ,
× RELATED சேலம் விமானசேவை நேர மாற்றம்