×

கடக ராசிக்காரரின் படிப்பும் தொழிலும்

கடக ராசிக்காரர், சந்திரனின் ஆதிக்கத்தில் பிறந்தவர் என்பதால் அன்பும் பரிவும் கொண்டவர். கடும் உழைப்பாளி, நேர்மைக்குப் பெயர் போனவர் மற்றவர்களுக்கு ஊக்கமும் உற்சாகமும் அளிப்பார், அடிக்கடி உணர்ச்சிவசப்படுவார். இவரிடம் அன்புத் தோட்டம் அதிகம், தியாகத் திருவுள்ளம் கொண்டவர். பிறருக்காக உழைப்பதில் சளைக்க மாட்டார். எனவே இவர்கள் தேர்ந்தெடுக்கும் படிப்பும் தொழிலும், தியாகம் பொதுநலம், அன்பு, பரிவு, அக்கறை சார்ந்ததாகவே இருக்கும்.

மென்கலை படிப்புகள்

கடக ராசிக்காரர் கலைகள் சார்ந்த படிப்பை விரும்பிப் படிப்பார். கர்நாடக சங்கீதம், பேச்சுக் கலை, ஓவியம் வரைதல் என உடல் வலிமை தேவைப்படாத அமைதியாக செய்யக் கூடிய எந்த கலையையும் இவர்கள் விரும்பிப் படிப்பதுண்டு.

ஆர்க்கிடெக்ட்

பொறியியல் (இன்ஜினியரிங்) படிக்கும் மாணவர்கூட உள் அலங்காரம் பற்றிய படிப்பில் அக்கறை செலுத்துவர். கட்டிடம் கட்டுதல், சிவில் இன்ஜினியரிங், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் போன்ற படிப்புகளில் ஆர்வம் செலுத்தாமல், ஆர்கிடெக்ட் பிரிவில் ஆர்வம் செலுத்துவர். தொழில் துறையில் இவருக்கு பராமரிப்புப் பணி விருப்பமானதாகும். வீட்டின் உள் அலங்காரம், சுவர் அலங்காரம் வெளியே உருவாக்கப்படும் தோட்டங்கள் அதில் வைக்க வேண்டிய குரோட்டன்ஸ் மற்றும் பூச்செடி பதியன் போட வேண்டிய புல் வகைகள் என்று வீடு சார்ந்த எந்த தொழிலையும் இவர் விருப்பமாக செய்வார். குறிப்பாக, உள் அலங்காரம் செடி கொடிகள் திரைச் சேலைகள் இவற்றில் இவருக்கு விருப்பம் அதிகம்.

உணவுக் கலை

செவ்வாய் ராசிக்காரர் சமையல் சம்பந்தப்பட்ட நெருப்பு சம்பந்தப்பட்ட தொழிலாக, சமையல் தொழிலை விரும்பினாலும், கடக ராசிக்காரர் பரிமாறுதல், மேசை அலங்காரம் செய்தல் காய்கறிகளை அழகாக வெட்டி அலங்காரமாக வைத்தல், மேசை விரிப்பு, திரைச் சீலை, சுவரில் தொங்கவிடும் பதாகை படங்கள் போன்றவற்றில் நாட்டம் செலுத்துவார். சமையலைவிட பரிமாறுவதை ஒரு கலையாகக் கருதிச் செய்வார். பெண்களாக இருந்தால், வீட்டிலேயே சமையல் பொடி, ஊறுகாய், ஜாம் என்று தயாரித்து விற்பனை செய்வர். பூச்செண்டு, பூ அலங்காரம் செய்வதில் விருப்பம் உடையவர். கல்யாண மண்டபம், கருத்தரங்கக் கூடங்களில் பூ அலங்காரம் செய்வது, பூச்செண்டு (பொக்கே) தயாரிப்பது, மலர் மாலை கட்டுவது இவற்றில் இவர்களுக்கு அதிக பிரியம் இருப்பதால், இதுபோன்ற பணிகளை பெரிய அளவிலும், அவரவர் வசதிக்கேற்ப சிறிய அளவிலும் செய்து வருவர்.

சமூகம் சார்ந்த கல்வி

சமூக அறிவியல், சமூக சேவை சார்ந்த கல்லூரிப் படிப்புகளை இவர்கள் தேர்ந் தெடுப்பார். சோசியல்சயின்ஸ் இவருக்கு விருப்பமான பாடப் பிரிவாக அமையும். சமூகவியல், உளவியல் போன்ற படிப்புகளை விரும்பி அப்பிரிவுகளில் சேர்வர்.

சிகிச்சை அளித்தல்

குழந்தை நலம், முதியோர் நலம், தாய்சேய் நலம், மாற்று திறனாளி நலம், மனநிலை பாதிக்கப்பட்டோர் நலம், குடி நோயாளிகள் நலம் போன்ற துறைகளில் படிக்க ஆர்வம் செலுத்துவர். வீடுகளுக்கு சென்று பிஸியோதெரபிஸ்ட், நர்ஸ், முதியோர்களை கவனித்தல் போன்ற பணிகளை விரும்பிச் செய்வர். சமூக சேவை, சமூக சேவர்களாக விளங்குவதில் தன்னிகரற்று விளங்கும் இவர்கள், குழந்தை பராமரிப்பு, முதியோர் பராமரிப்பு, ஊனமுற்றோர் பராமரிப்பு, மனநிலை பிறழ்ந்தோர் பராமரிப்பு போன்ற பணிகளை மனமுவந்து செய்வர்.

ஆற்றுனர் (கவுன்சலிங்)

சந்திரன், மனோகாரகன் என்பதால் இவர்களுக்கு மன நலம் பற்றிய குளறுபடிகளும், புரிதலும் அதிகம். மனநல சிகிச்சையில் ஆர்வமாக ஈடுபடுவார். பொறுமையாக அடுத்தவர் பிரச்னைகளை கேட்பார். திறமையான ஆற்றுனராக (கவுன்சிலிங்) இருப்பார். மனநலம் பாதிக்கப்பட்டவர், தற்கொலை மனப்பான்மை கொண்டவர், தாழ்வு மனப்பான்மை கொண்டவர் போன்றோர், இவரிடம் ஒருமுறை பேசினாலே போதும், அவருக்கு ஊக்கமும் உற்சாகமும் கரை புரண்டு ஓடும். அவர்கள் புதிய மனிதர்களாக மாற்றி, ஃபீனிக்ஸ் பறவை போல உற்சாக வானில் சிறகடித்துப் பறக்க விடுவர்.

மேலாளர்

ஒரு சிலர் மேனேஜ்மென்ட் பிரிவில் சேர்ந்து படித்து, மேனேஜராக, எக்ஸிக்யூட்டிவ் அதிகாரியாக வருவதுண்டு. பொதுவாக, கடக ராசியினர் சொந்த தொழில் செய்வதை அதிகம் விரும்புவர். அந்தத் தொழிலும் வீடு சார்ந்த தொழிலாக அல்லது குலத்தொழிலாக, குடும்பத் தொழிலாக அமைவதுண்டு.

கல்விப்பணி

கடக ராசிக்காரர், ஆசிரியர் பணிக்கு ஏற்றவர். குறிப்பாக, நர்சரி பள்ளி, ஆரம்பப் பள்ளிகளில் ஆசிரியர்களாக இருந்து, குழந்தைகளை அன்போடும், அரவணைப் போடும் பார்த்துக் கொள்வதில் விருப்பம் உடையவர். கடிந்து பேசமாட்டார். குழந்தைகளைக் கொஞ்சித் திருத்துவார். ஆசிரியப் பணியை ஒரு தூய்மையான உன்னதமான பணியாகக் கருதி அதில் ஈடுபடுவார். தன்னிடம் படிக்கும் மாணவர்களை முன்னேற்றுவதில் முதன்மையானவர். படிப்பில் மட்டுமல்ல, வாழ்க்கையிலும் ஒழுக்கத்திலும் தன் திறமைகளை வளர்த்துக் கொள்வதிலும் அவர்கள் மீது அதிக அக்கறை காட்டி வாழ்க்கையில் மறக்க முடியாத ஆசிரியராக அவர்கள் மனதில் நீங்காத இடம் பெறுவார்.

நேர்த்தியான ஆத்மார்த்தமான பணி

கடக ராசிக்காரரிடம், சம்பளத்திற்காக வேலை செய்கின்ற குணம் எப்போதுமே இருக்காது. எந்த வேலையையும் இவர் பணத்துக்காக செய்ய மாட்டார். தனக்குப் பிரியமான உகந்த வேலைகளை மட்டுமே செய்ய முன்வருவார். அவ்வாறு செய்யும்போது, தன்னுடைய ஆத்ம திருப்திக்காக அந்த வேலையை செய்வார். பயனாளிகள் பாராட்டும் வகையில் செய்து முடிப்பார்.

முதலாளி – தொழிலாளி இணைப்பு

அதிகாரி, மேலாளர், கண்காணிப்பாளர் போன்ற வேலைகளில் கடக ராசிக்காரர் இருந்தால், அவர் முதலாளிக்கு விஸ்வாசமாக இருப்பதோடு, தொழிலாளிக்கும் தன்னால் இயன்ற அனைத்து நன்மைகளையும் சலுகைகளையும் பெற்றுத் தருவார். இவரிடம் ஈவு இரக்கம், அன்பு, பண்பு, பரிவு ஆகியவை அதிகம் இருப்பதால், நலிந்தவருக்கும் எளியோருக்கும் இவர் நன்மை செய்ய எப்போதும் துடித்துக் கொண்டு இருப்பார். பொது நலப் பணி செய்ய முன்வரிசையில் நிற்பார்.

இப்படித்தான் வாழவேண்டும்

தன் மனதிற்கு நேர்மை என்று தோன்றிய தொழிலை மட்டுமே செய்யக் கூடிய கடக ராசிக்காரர், பணம் வருகிறது என்பதற்காக ஒரு நாள், ஒரு மணி நேரம்கூட தன் மனதுக்குப் பொருந்தாத வேலையைச் செய்யமாட்டார். இவர்களின் இந்தப் பொதுநல ஆர்வமும், உழைப்பின் பேரில் உள்ள நம்பிக்கையும், கடமை, கண்ணியம், கட்டுப்பாடு போன்ற பண்புகளும் இவருக்கு சில சமயங்களில் எதார்த்தம் புரியாதவர், பைத்தியக்காரர், பிழைக்கத் தெரியாத முட்டாள் போன்ற வசை மொழியைப் பெற்றுத் தரும். எல்லோரோடும் ஒத்துப் போவதில் இவர் தயக்கம் காட்டுவார். தான் நினைத்ததே சரி தன்னுடைய வாழ்க்கை முறையே சரி. இப்படித்தான் வாழ வேண்டும் என்ற கொள்கையில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நம்மைத்தான் மற்றவர்கள் பின்பற்ற வேண்டுமே தவிர, பணத்தாசை பிடித்த மற்றவர்களை நாம் பின்பற்றக் கூடாது என்பதில் உறுதியாக இருப்பார். மற்றவர்களை மோசக்காரர்கள் நமக்கு விரோதிகள் என்பதாக கருதி, அவர்களிடம் முகம் கொடுத்து பேசாமல் ஒதுங்கிவிடுவார். இதனால், இவர் கடக ராசிக்காரர் பலருடைய பகை உணர்ச்சிக்கும், எள்ளலுக்கும் ஆளாக வேண்டிவரும்.

The post கடக ராசிக்காரரின் படிப்பும் தொழிலும் appeared first on Dinakaran.

Tags : Moon ,
× RELATED கண்ணகி கோயில் சித்திரை முழுநிலவு விழா அறக்கட்டளையினர் ஆலோசனை