×

விவசாயிகள் போராட்டத்தில் கண்ணீர் புகை குண்டு வீச்சு விவசாயி உயிரிழந்து 9 நாட்களுக்கு பிறகு எப்ஐஆர் பதிவு

புதுடெல்லி: விவசாயிகள் போராட்டத்தில் சுப்கரன் சிங் என்ற விவசாயி உயிரிழந்து 9 நாட்களுக்கு பிறகு பஞ்சாப் காவல்துறை எப்ஐஆர் பதிவு செய்துள்ளது. விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை தர வேண்டும், விவசாய கடன்களை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து டெல்லி எல்லையில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் பஞ்சாப்-அரியானா எல்லை பகுதிகளான ஷம்பு மற்றும் கானவுரி ஆகிய பகுதிகளில் காவல்துறையின் தடுப்புகளை அகற்ற விவசாயிகள் முயன்றதால் இரு தரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது. குறிப்பாக கானவுரி பகுதியில் கண்ணீர் புகை குண்டுகள் வீசி விவசாயிகளை காவல்துறை கட்டுப்படுத்தியது.

அப்போது சுப்கரன் சிங்(21) என்ற விவசாயி படுகாயமடைந்தார். மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். சுப்கரன் சிங்கின் இறுதி சடங்கு நேற்று மாலை 3 மணிக்கு நடைபெற்றது. இந்நிலையில், சுப்கரன் சிங் உயிரிழந்து ஒன்பது நாட்கள் கழித்து பஞ்சாப் காவல்துறை எப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளது. அதில், சுப்கரன் சிங் உயிரிழப்பு தொடர்பாக அடையாளம் தெரியாத நபர்களுக்கு எதிராக ஐ.பி.சி 302 மற்றும் 114 ஆகிய பிரிவுகளிலும், அதேபோன்று விவசாயிகள் போராட்டத்தின் போது அரியானா காவல்துறையினருடன் ஏற்பட்ட மோதலில் ஏற்பட்ட காயங்கள் காரணமாக மரணம் ஏற்பட்டதாகவும் பதியப்பட்ட வழக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* பாஸ்போர்ட் ரத்து?
இதனிடையே அரியானா காவல்துறை தரப்பில் ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில், ‘‘போராட்டத்தின் போது வன்முறையில் ஈடுபட்ட விவசாயிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதுசார்ந்த விவரங்களை கொடுத்து அவர்களின் விசா மற்றும் பாஸ்போர்ட்டை ரத்து செய்யுமாறு அந்தந்த தூதரகங்கள் மற்றும் அரசிடம் கேட்டுக் கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post விவசாயிகள் போராட்டத்தில் கண்ணீர் புகை குண்டு வீச்சு விவசாயி உயிரிழந்து 9 நாட்களுக்கு பிறகு எப்ஐஆர் பதிவு appeared first on Dinakaran.

Tags : FIR ,New Delhi ,Punjab Police ,Subkaran Singh ,Dinakaran ,
× RELATED தேர்தலையொட்டி கெத்து காட்டும்...