×

பதக்கம் வென்ற இரட்டை சகோதரிகள்!

நன்றி குங்குமம் தோழி

கேலோ இந்தியா போட்டிகள் இந்த வருடம் தமிழ்நாட்டில் நடைபெற்றது. இதில் 800 மீட்டர் தடகளப் போட்டியில் இரட்டை சகோதரிகளான அன்ஸ்லின் தங்கப்பதக்கமும் அக்ஸ்லின் வெள்ளிப்பதக்கமும் வென்று அசத்தியுள்ளனர். கன்னியாகுமரியை சேர்ந்த இந்த சகோதரிகள் இருவருக்கும் ஒரு வருடமாக பயிற்சி கொடுத்து வெற்றி வாகை சூட வைத்துள்ளார் இவர்களின் பயிற்சியாளரான நல்வீன் ராஜா. ‘‘எனக்கு சொந்த ஊர் கன்னியாகுமரி. நான் கேலோ இந்தியாவின் பயிற்சியாளராக இருக்கிறேன். தனியார் பள்ளியிலும் பயிற்சியாளராக இருக்கிறேன். அன்ஸ்லின், அக்ஸ்லின் இருவருமே பள்ளிக்கூட அளவிலேயே 400 மீட்டர் போட்டிகளில் வெற்றிப்பெற்றிருக்கின்றனர்.

இதனால் கேலோ போட்டிகளில் விளையாடுவதற்காக இருவரையும் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு பயிற்சியும் அளித்தேன். இவர்கள் இருவருடன் மற்ற பள்ளிகளில் இருந்து சுமார் பத்து மாணவிகள் போட்டியில் கலந்துகொள்ள வந்திருந்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் போட்டிகளில் தயாராவதற்கு ஒரே ஒரு மைதானம் வடசேரிப் பகுதியில் இருக்கிறது. அன்ஸ்லின், அக்ஸ்லின் இவர்களின் வீடு இந்த மைதானத்தில் இருந்து கிட்டதட்ட 20 கிலோமீட்டர் தூரம் இருக்கும். பயிற்சி பெறுவதற்காக மட்டுமே இவர்கள் ஒரு மணி நேரம் பயணம் செய்ய வேண்டும்’’ என்றவர் அவர்களுக்கு பயிற்சி அளித்த விதம் பற்றி விவரித்தார்.

‘‘கன்னியாகுமரி மாவட்டத்தில் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள பல மாணவிகள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். மற்ற மாவட்டங்களை காட்டிலும் இந்த மாவட்டத்தில் உள்ளவர்கள் அதிகமாக விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்கிறார்கள். பெற்றோர்களும் ஆர்வத்துடன் குழந்தைகளை அனுப்பி வைக்கின்றனர். இங்கு கால்பந்து, தடகளம், கைப்பந்து போன்ற போட்டிகளில்தான் அதிகம் விளையாடுகிறார்கள். ஆனால் இதை விளையாடுவதற்கு இங்கு முறையான விளையாட்டு மைதானங்கள் இல்லை.

தற்போது இருக்கும் வடசேரி மைதானமும் சேறு, மண் அதிகம் உள்ள பகுதி. இங்கு வைத்துதான் இந்த மாணவிகளுக்கு பயிற்சியளித்து வந்தேன். கேலோ இந்தியா போட்டிகள் ஜனவரி மாதத்தில் நடைபெறும். கன்னியாகுமரி மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகள் அதிகமாக மழை பெறும். இங்கு அக்டோபர் மாதம் மழை துவங்கும். டிசம்பர் இறுதி வரை மழை பெய்யும் காலம். இந்த காலகட்டங்களில் முட்டி அளவு வரை இந்த மைதானத்தில் தண்ணீர் தேங்கி இருக்கும்.

இதனால் இங்கு பயிற்சி எடுக்க முடியாது. இந்த மூன்று மாதங்களில் சரியாக பயிற்சி எடுக்க முடியவில்லை என்றால், போட்டிகளில் வெல்ல முடியாது. அதனால் நாங்கள் திருநெல்வேலியில் உள்ள மைதானத்திற்கு சென்று பயிற்சிகளை தொடங்கினோம். அந்த மைதானத்திற்கு இங்கிருந்து செல்ல குறைந்தபட்சம் இரண்டு மணி நேரம் ஆகும். அதிகாலையில் 4.30 பேருந்தில் ஏறினால் 6 மணிக்குதான் மைதானத்தை அடைவோம். முதலில் சின்னச்சின்ன பயிற்சிகள் முடித்து தடகளப் போட்டிக்கான பயிற்சி எடுக்க ஆரம்பிக்க 7.30 மணியாகும். இரண்டரை மணி நேரம் கடுமையான பயிற்சியில் ஈடுபடுவோம்.

அதன் பிறகு மறுபடியும் பஸ் பிடித்து நாகர்கோவில் வந்து பள்ளிக்கு செல்ல வேண்டும். இந்த மூன்று மாதங்களும் இப்படித்தான் இந்த இரட்டை சகோதரிகள் பயிற்சி எடுத்துக்கொண்டு, கேலோ இந்தியா போட்டிகளுக்காக தயாரானார்கள். கடுமையான பயிற்சி எடுத்துதான் இந்த மாணவிகளை கேலோ போட்டிகளுக்கு அழைத்து வந்தோம். இந்த மாணவிகள் இருவரும் 12ம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களின் விளையாட்டுத் திறமை மற்றும் கடும் பயிற்சியை பார்த்து பள்ளி நிர்வாகம் பயிற்சிக்கான நேரம் கொடுத்தார்கள்.

தொடர்ந்து எடுத்த கடுமையான பயிற்சியின் பலனாகத்தான் இந்த வெற்றி எங்களுக்கு கிடைத்தது. இந்த வெற்றி இங்கிருக்கும் பல பெண்களுக்கு உத்வேகமாக இருக்கும். இவர்களின் கடுமையான பயிற்சிக்கான பலன் வெற்றி என்றாலும், அந்த வெற்றிக்கான அங்கீகாரம் அவர்களுக்கு கிடைக்கக்கூடிய அரசு வேலை. ஆனால் இங்கு பல திறமையான விளையாட்டு வீரர்களுக்கு அதற்கான வாய்ப்பு அமைவதில்லை. பல பெண்கள் போட்டியில் வெற்றிபெறுவார்கள்.

அதன் பிறகு அவர்கள் அந்த துறையில் இருந்து முற்றிலும் விலகிவிடுவார்கள். இப்படித்தான் இங்குள்ள பல விளையாட்டு வீராங்கனைகளின் நிலை இருக்கிறது. மைதானம் இல்லாமல் விளையாட முடியாமல் போனவர்களில் நானும் ஒருவன். மைதானங்கள் நாங்களே அமைத்தாலும் மழை அதிகமாக வரும் பகுதி என்பதால் மைதானம் எப்போதும் ஈரமாகவே இருக்கும். அதற்கு சிந்தடிக் மைதானங்கள் மற்றும் பயிற்சியாளர்களை அரசு அமைத்துக் கொடுத்தால், இவர்களைப் போன்ற பல வீராங்கனைகளை உருவாக்க முடியும்’’ என்கிறார் நல்வீன் ராஜா.

தொகுப்பு: மா.வினோத்குமார்

The post பதக்கம் வென்ற இரட்டை சகோதரிகள்! appeared first on Dinakaran.

Tags : Kumkum Doshi ,Kelo ,India ,Tamil Nadu ,Anslin ,Axlin ,Kanyakumari ,Dinakaran ,
× RELATED மேஜிக் செய்யும் ‘மில்லட்’ உணவுகள்!