×

சகலத்தையும் தாங்கும் தர்ம சக்தி

லக்ஷ்ய ரோம லதா தாரதா
ஸமுன்னேய மத்யமா

இந்த நாமத்தை நாம் பிரித்துச் சொன்னால், லக்ஷ்ய ரோம லத ஆதாரதா ஸமுன்னேய மத்யமா… இதற்கு முந்தைய இரு நாமங்களில் அம்பிகையின் ஸ்தனங்களையும் அடுத்ததாக அந்த ஸ்தனங்களில் கீழேயுள்ள நாபியையும் அந்த நாபியிலிருந்து வளர்ந்துள்ள ரோம வரிசை, அது வளர்ந்து இரண்டாகப் பிரிந்து அந்த வரிசை முடியும் இடத்தில் அம்பிகையின் இரண்டு ஸ்தனங்கள் இருக்கின்றன என்று பார்த்தோம். இப்போதும் இந்த நாமத்தினுடைய தொடர்ச்சியாகத்தான் இந்த நாமமும் இருக்கிறது.

சென்ற நாமத்தில் ரோம வரிசையானது ஒரு கோடி போல இருக்கிறது என்று சொல்லியிருந்தார்கள். அந்த ரோம வரிசையான கொடிக்கு ஒரு ஆதாரம் வேண்டும். ரோம கொடியானது அம்பிகையின் கருணையினால் வளர்ந்தது என்று பார்த்தோம். இந்த கருணையை நாபி என்றோம். இப்போது இந்த கொடிக்கு எது ஆதாரம் என்பதை இந்த நாமம் காட்டுகின்றது. எது ஆதாரமெனில் அம்பிகையின் இடைப்பகுதி. நாபியையும் ஸ்தனங்களையும் (திருமார்புகளையும்) இணைப்பது என்பது இடைப்பகுதி (இடுப்பு). இடையின் இந்த அதி சூட்சுமத்தை அறிய முடியவில்லை. ஏனெனில், அந்த இடை அவ்வளவு நுண்ணியதாக இருக்கிறது. அவ்வளவு சூட்சுமமாக இருக்கிறது. இந்த ரோமக்கொடி இங்கு எழும்புவதை வைத்து இந்த கொடி எதன்மீது ஆதாரமாக இருக்கிறது என்று பார்த்து நாமாக யூகித்துக் கொள்கிறோம். இந்த ஆதாரமாக இருப்பதாதாலேயே, அதாவது மையத்திலிருப்பதாலேயே மத்யமா என்றும் சொல்கிறோம்.மத்தியில் என்றால் இரண்டிற்கும் நடுவில் என்றும் பொருள்.

ஒரு கொடி வளர்வதற்கு ஒரு ஆதாரம் வேண்டும். ஒரு கொம்பையோ குச்சியையோ படர்ந்து வளரலாம். ஆனால், உண்மையிலேயே இந்த கொடி வளர்வதற்கு எது ஆதாரமாக இருக்கிறது என்று பார்த்தால், இந்த கொம்போ அல்லது குச்சியோ ஆதாரமாக இருக்கட்டும். ஆனால், இந்த வளர்வதற்கு ஆதாரமாக இருப்பது ஆகாசம்தான். ஆகாசம் என்கிற ஆதாரம் இருந்தால்தான் இந்தக் கொடியினால் வளர முடியும். அப்போது இங்கே நாபியிலிருந்த எழுந்த அந்த ரோம வரிசைக்கு, ஆதாரம் எதுவென்று பார்த்தால் சூட்சுமமாக இருக்கிறது. ஆனால், இந்த ரோம வரிசை இருப்பதை வைத்து இதற்கொரு ஆதாரம் இருக்கிறது என்று நாமாக யூகித்துக்கொள்கிறோம். அந்த யூகிக்கக்கூடிய ஆதாரம் எதுவென்று பார்த்தால், அம்பிகையினுடைய மத்யமா என்கிற இடைப்பகுதி. அந்தளவுக்கு எது சூட்சுமமாக இருக்கிறதோ, அம்பிகையினுடைய இடைப்பகுதி அவ்வளவு சூட்சுமமாக இருந்து அந்த இடைப்பகுதியில் இந்த ரோம வரிசை, இந்த நாபியிலிருந்து எழும்பிய ரோம வரிசைக்கு ஆதாரமாக இருக்கிறது. பிறகு அந்த ரோம வரிசைக் கொடி இரண்டாகப் போய் பர ஞானம், அபர ஞானம் என்று இரண்டாக இருப்பதைப் பார்க்கிறோம்.

இப்போது சென்ற நாமத்தில் இந்த நாபியை கருணை (compassion) என்று பார்த்தோம். ஸ்தனங்கள் இரண்டும் பர ஞானம், அபர ஞானம் என்று பார்த்தோம். நாபியிலிருந்து எழும்புகிற கொடிக்கு மத்யமா என்கிற இடைப்பகுதி ஆதாரமாக உள்ளது. இந்த இரண்டுக்கும் நடுவே என்னமோ இருக்கிறது. அதுதான் இவற்றின் ஆதாரமாகவும் சூட்சுமமாகவும் இருக்கிறது. அதாவது நுண்ணிய இடை. அந்த நுண்ணிய என்பதுதான் இந்த நாமத்தின் மையம். இந்த மையத்தை இடை என்று தெரிந்துகொண்டோம். நேரடியான பொருள். ஆனால், இதன் அத்யாத்மிகமான, சூட்சுமமான பொருள் என்னவென்று பார்ப்போமா?

இந்த இடையே சூட்சுமமானது. நம் உடலை கீழ்ப் பாகம் மேல்பாகம் என்று பிரித்தால் நம் உடலை சேர்த்து வைக்கக் கூடியது இந்த இடை. நடுவில் இருப்பது. சமஸ்கிருதத்தில் மத்யமா… இப்போது இந்த மத்யமா எதைக் காண்பித்துக் கொடுக்கிறது. நமக்கு எதை உணர்த்து கிறது. நாபி என்கிற கருணை வெளிப்பட்டால்தான் பரஞானம், அபர ஞானம் என்கிற ஸ்தனங்கள். இந்த கருணையால் வெளிப்பட்டிருக்கும் பரஞானம்,
அபரஞானத்தை ஒரு ஜீவன் தாங்குவதற்கு எது அடிப்படையாக இருக்கிறது. அந்த ஞானம் எப்போது அவனுக்கு சித்திக்கும். அதைத் தாங்குவதற்குரிய வலிமை இருக்கும்போதுதான் சித்திக்கின்றது. சரி, அதைத் தாங்குவதற்கு என்ன வலிமை என்றால் அது என்ன வலிமை. எப்போதுமே எல்லாருக்கும் சித்தித்து விடுகின்றதா எனில் அப்போதும் இல்லை. இதை உணரக் கூடிய பக்குவம் வேண்டும். அம்பிகை அந்த கருணையைக் கொண்டு அந்தந்த ஜீவனின் பக்குவத்திற்கு தகுந்தாற்போல் அருள்கிறாள் என்பதும் இதில் அடங்கியுள்ளது. இதுவும் இருக்கட்டும்.

இந்த பக்குவம் எதுவென்று பார்த்தால், எல்லாவற்றையும் ஒரு நடுநிலையிலிருந்து பார்க்கக்கூடிய ஒரு மத்தியத்திலிருந்து பார்க்கக் கூடிய, ஒரு ஸ்தித பிரக்ஞனாக இருந்து பார்ப்பதற்கு எது நமக்கு ஆதாரமெனில், தர்மம் ஆதாரம். ஒருவன் தர்மத்தில் நிலை நிறுத்தப்பட்டால்தான் அவனால் எந்த ஒரு விஷயத்தையும் நடுநிலையில் நின்று பார்க்க முடியும். ஒரு பக்கமாக சாயாமல்… பொதுவாக நல்லது கெட்டது என்று இரண்டு பக்கமும் சாயாமலிருப்பது என்று பலர் அர்த்தம் எடுத்துக்கொள்கிறோம்.

ஆனால், நாம் நடு நிலையில் இருந்தால் நல்லது எது என்று நமக்கு காட்டிக் கொடுக்கப்படும். அது எதுவென்று தெரியும். இந்த நடுவான ஸ்தித பிரக்ஞைத் தன்மையை கொடுக்கக் கூடியது எதுவென்று பார்த்தால், அதுதான் தர்மம். எதையும் தேர்ந்தெடுக்கப்படாத, எந்தப் பக்கமும் சாயாத ஒரு விழிப்புணர்வு அதாவது பிரக்ஞைத் தன்மை ஒன்றுண்டு. இதையே ஸ்தித பிரக்ஞை தன்மை என்கிறோம். ஜே,கிருஷ்ணமூர்த்தி கூட choiceless awareness என்பார். நன்மை, தீமை போன்றவற்றில் நடுவில் இருக்க வேண்டும். நல்லது நடந்தாலும் கெட்டது நடந்தாலும் நடுவில் இருக்க வேண்டும். எல்லாவற்றையும் சமமாக பார்க்க வேண்டும். ஆனால், இந்த choiceless அவ்வளவு எளிமையாக வந்துவிடுமா. எப்படி வரும். Awareness… இருக்க வேண்டும். இந்த awareness என்பதைத்தான் தர்மம் என்று சொல்கிறோம். ஏனெனில், அது அவ்வளவு சூட்சுமமானது. இந்த தர்மமே ஆத்ம சொரூபம். வெறும் வார்த்தைகளில் சர்வ சாதாரணமாக கடந்துபோய்விட முடியாது. Highly subtle.

எனவே, இந்த தர்மம்தான் இங்கு அம்பிகையினின் மத்யமாவாக இருக்கிறது. இடைப்பகுதியாக இருக்கிறது. அந்த தர்மத்தில் ஒருவன் நிலை நிற்கும்போதுதான், அந்த தர்மத்தின் மூலமாகத்தான் ஜீவன் பக்குவப்படுகின்றது. அந்த பக்குவத்திற்காகத்தான் நாபி ஸ்தானத்திலிருந்து கருணை பிறக்கிறது. அந்த கருணையினால்தான் ஸ்தனங்களாகிய பரஞானம், அபர ஞானமும் சித்திக்கிறது.

ஸ்தித பிரக்ஞ லட்சணமான இரண்டிற்கும் நடுவில் இருப்பதைத்தான் இந்த நாமம் சொல்கிறது. பௌத்தத்தில் நாகார்ஜுணருடைய மாத்யமிகம் என்கிற நடுப்பாதை காண்பிக்கப்பட்டிருக்கிறது. நீங்கள் தர்மம் என்கிற சொரூபத்தில் நின்றால்தான் எதையுமே தெளிவாக பார்க்க முடியும். தர்மத்தில் நில் அர்ஜுணா என்றால் சொரூபத்தில் நில் என்றே பொருள். அப்படி சொரூபத்தில் நின்றால் அதற்கு எதிராக எதிலும் நடக்க முடியாது. அதற்குப் பிறகு எல்லாமுமே சரியாகவே நடக்கும். ஏனெனில், சொரூப ஞானம்தான் உண்மையான தர்மம். அதனால்தான் அது அவ்வளவு சூட்சுமமானது.

எனவேதான் தர்மம்தான் மத்யமா என்கிற இடத்தில் இருக்கிறது. அதுதான் அந்தக் கொடிக்கு ஆதாரமாக இருக்கிறது. ஏனெனில், இந்த தர்மத்தினால் பக்குவப்பட்ட ஜீவன், அந்த ஜீவனுக்கு அம்பிகையினுடைய கருணை வருகின்றது. அந்த கருணையின் மூலமாக பர ஞானமும் அபர ஞானமும் சித்திக்கின்றது. இப்படியே பின்னால் சென்றால் தர்மத்தில் சென்று முடியும். அதனால்தான் இந்த தர்மத்தை நாம் இடை என்று சொல்கிறோம் அல்லவா… இந்த தர்மத்தை அர்ஜுனனுக்கு காண்பித்துக் கொடுப்பதற்கு பகவான் இடையனாக வந்தான். பசுக்களாகிய ஜீவர்களை மேய்க்கக் கூடிய இடையன். அவன் எல்லாவற்றிற்கும் நடுவே மத்தியில் இருக்கிறான். எல்லாவற்றிற்கும் நடு எது தர்ம சொரூபம். அம்பிகையை கொடியிடையாள் என்கிறோம், இந்த கொடி இடைச்சிதான் புருஷ ரூபமான கிருஷ்ணனாக வருகிறாள்.

இங்கு கொடியின் மையம் ஆகாசம் என்று பார்த்தோம். இந்த பிரபஞ்சத்தை தாங்கி கொண்டிருப்பது ஆகாசம்தான். ஆனால், அது எவ்வளவுக்கு எவ்வளவு சூட்சுமமாக இருக்கிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு சூட்சுமமாக இருக்கிறது. பஞ்ச பூதங்களில் மண்ணையோ நீரையோ நெருப்பையோ அல்லது காற்றையோ உணரச் செய்யலாம் காண்பித்து விடலாம். ஆனால், ஆகாசத்தை இதோ அதோ என்று காண்பித்துக் கொண்டே போய்க் கொண்டே இருக்க வேண்டியதுதான். இந்த மொத்த பிரபஞ்சமும் எப்படி ஆகாசத்தில் பிரதிஷ்டை ஆகியிருக்கிறதோ, ஆகாசம் எவ்வளவு சூட்சுமமாக இருக்கிறதோ அதேசமயம் ஆகாசம் என்று ஒன்று இல்லை என்று சொல்ல முடியாதோ அதுபோன்ற இந்த ஒட்டுமொத்த பிரபஞ்ச இயக்கம் அனைத்தும் தர்மம் என்கிற சொரூபத்தில் பிரதிஷ்டை ஆகியிருக்கிறது. ஆகாசம்போல இதுவும் சூட்சுமமானது.

ஆனால், நாம் சாமானிய தர்மம், விசேஷ தர்மம் என்றெல்லாம் சொல்கிறோமே… அது எல்லாம் கூட நாம் தர்மத்தை உணர்ந்திருந்தால்தான் அந்த சாமானிய தர்மம், விசேஷ தர்மத்தை பிரித்து சொல்ல முடியும். அல்லது
தர்மத்தை உணர்ந்தவர்களின் சொற்களையே நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். உதாரணமாக ராமாயணத்தில் ஒரு விஷயம் சொல்லுவார்கள். தசரதர் உடலை விட்டதற்குப் பிறகு மேலே தேவர்கள் வரவேற்கிறார்கள். அப்போது சொர்க்கத்திற்கு தசரதனுக்கு வழி காண்பிக்கிறார்கள். மற்றவர்களெல்லாம் கேட்கிறார்கள், ராமர் என்கிற அவதார புருஷரை பெற்ற தந்தை. அவருக்கு வந்து சொர்க்கம்தான் கிடைத்திருக்கிறதா… அவருக்கு மோட்சம்தானே கிடைக்க வேண்டும் என்று கேட்டார்கள். அதற்கு மற்ற தேவர்களெல்லாம் சொன்னார்களாம்.

‘‘நியாயப்படி பார்த்தால் இவருக்கு நரகம்தான் கொடுத்திருக்கணும்.
ஆனால், நாங்கள் சொர்க்கம் கொடுக்கிறோம்.’’

இவர் கைகேயிக்கு ஒரு வரத்தை கொடுக்கிறார். அந்த வரத்தை காப்பாற்றுவதற்காக ராம பிரானை காட்டுக்கு அனுப்பினார். சரி, ஆனால், உண்மையிலேயே அவர் என்ன செய்திருக்க வேண்டுமெனில் கைகேயிக்கு அவர் கொடுத்தது, சாமானிய தர்மம். ஆனால், இங்கு கண் முன்னால் வந்து நிற்பது யாரெனில், யாரோ சும்மா சாதாரணமாக தசரதனின் மகன் வந்து நிற்கவில்லை. தர்மத்தினுடைய சொரூபமான ராமர் வந்து நிற்கிறார். இங்கு எந்த தர்மத்தை காப்பாற்ற வேண்டுமென நினைத்தாரோ, அந்த தர்மத்தை காட்டுக்கு அனுப்பி விட்டார். இந்த இடத்தில் தசரதர் விசேஷ தர்மத்தை கைக்கொண்டிருக்க வேண்டும். தசரதர் எல்லாரிடமும் நடந்து கொள்வதுபோன்று சாமானிய தர்மத்தை கைக்கொண்டிருக்கக் கூடாது. சாமானிய தர்மத்தை கைக்கொண்டு ஏதோ தான் என்னவோ தர்மத்தை காப்பாற்றப் போவதாக நினைத்துக் கொண்டு தர்மத்தையே காட்டுக்கு அனுப்பி விட்டார். அதனால் தசரதரை நரகத்தில்தான் போட வேண்டும். ஆனால், பரப்பிரம்மமான ராமனை பெற்றான் என்கிற காரணத்திற்காக சொர்க்கத்தில் போட்டார்கள் என்று தேவர்கள் சொல்வதுபோன்று ஒரு கதை உண்டு.

சாமானிய தர்மம், விசேஷ தர்மம் இரண்டு இருந்தாலும் இதற்கெல்லாம் மேலாக இருக்கக் கூடியது சொரூபம். இந்த நாமத்திற்கான கோயில் வட திருமுல்லைவாயில் மாசிலாமணீஸ்வரர் ஆலயம் ஆகும். இங்குள்ள அம்பாளின் பெயரே இங்கு நாமமாக வந்துள்ளது. கொடியிடை நாயகி, கொடியிடை அம்பிகை. லதா மத்யாம்பாள். லக்ஷ்ய ரோம லதா தாரதா ஸமுன்னேய மத்யமா என்கிற நாமத்தில் வரும் லதா என்றால் கொடி என்று பொருள். மத்யமா என்றால் இடை என்று அர்த்தம்.

இத்தலத்தில்தான் சிறப்புமிக்க வைஷ்ணவி ஆலயமும், பிரார்த்தனைக் கோயிலாகிய ‘பச்சையம்மன் கோயிலும்’ உள்ளன. இக்கோயில் தொடர்பாகச் சொல்லப்படும் செவிவழிச் செய்தியொன்று வருமாறு: – சென்னைப் பொன்னேரிப் பாதையில் மீஞ்சூருக்கு அருகில் உள்ள மேலூரில் வீற்றிருக்கும் திருவுடை நாயகியம்மை; சென்னை – திருவொற்றியூரில் வீற்றிருக்கும் வடிவுடையம்மை; இத்தலத்து கொடியிடை அம்மை – ஆகிய மூன்று திருவுருவங்களும் ஒரே ஸ்தபதியால் செய்யப்பட்டவை என்றும்; வெள்ளிக்கிழமை பௌர்ணமி சேர்ந்து வரும் நாளில் இம்மூன்று அம்பிகைகளையும் ஒரே நாளில் முறையே காலையிலும், நண்பகலிலும், மாலையிலும் தரிசித்தல் பெருஞ் சிறப்பு என்றும் சொல்லப்படுகிறது. சென்னை – ஆவடி சாலையில் திருமுல்லைவாயில் உள்ளது.

The post சகலத்தையும் தாங்கும் தர்ம சக்தி appeared first on Dinakaran.

Tags : Ambika ,Nabi ,
× RELATED பரமக்குடி ஈஸ்வரன் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம்