×

கோசலை ராமனாக சென்று ஜானகிராமனாக வந்தான்

தசாவதாரங்களிலேயே பரசுராம அவதாரம் என்பது ஒருவித்தியாசமான அவதாரம். ஆவேச அவதாரம் என்று சொல்லுவார்கள். ஆழ்வார்கள் பரசுராம அவதாரத்தை தமது பாசுரங்களில் போற்றியிருக்கிறார்கள். திருவரங்கத்து அமுதனார் பரசுராம அவதாரத்தைப் பாடும்போது,

கோக்குல மன்னரை மூவெழுகால், ஒரு கூர்மழுவால்
போக்கிய தேவனைப் போற்றும் புனிதன் புவனமெங்கும்
ஆக்கிய கீர்த்தி இராமா னுசனை அடைந்தபின், என்
வாக்குரை யாது, என் மனம்நினை யாதினி மற்றொன்றையே.

மகாவிஷ்ணுவின் அவதாரமாக இருந்தாலும்கூட, மும்மூட்சுக்கள் (அதாவது பரம வைணவர்கள்) பரசுராம அவதாரத்தை உபாசன தெய்வமாகக் கொள்வதில்லை. பரசுராம அவதாரம் என்பதுதிரேதா யுகத்தில் தொடங்கி, துவாபரயுகம் வரைக்கும் நீடிக்கிறது. தனி அவதாரமாக பரசுராம அவதாரம் விளங்குகிறது.

ஜமதக்னி முனிவரின் பிள்ளையாகப் பிறந்து, 21 தலைமுறை மன்னர் ஆட்சிகளை வென்று, பல பிரதேசங்களை தனதாக்கிக்கொண்ட அவதாரம் பரசுராம அவதாரம். அதற்குப் பிறகு, ராம அவதார காலத்திலேயே ராமனைச் சந்தித்து, தான் வைத்திருந்த விஷ்ணு தனுசு எனப்படும் வில்லை ராமருக்குத் தந்துவிட்டு, அதோடு தன்னுடைய தவத்தை எல்லாம் ராமனோடு ஐக்கியமாக்கிவிட்டு விடைபெறுகிறார் பரசுராமர்.

பரசுராம அவதாரம் சிரஞ்சீவி அவதாரமாக இருப்பதினால் தொடர்ந்து தவம்செய்யப்போய்விடுகிறார். பரசுராமன் இரானிடம் விடைபெறும்போது என்ன சொல்லி விடை பெறுகிறார் தெரியுமா?

எண்ணிய பொருள் எலாம் இனிது முற்றுக!
மண்ணிய மணி நிற வண்ண! வண்துழாய்க்
கண்ணிய! யாவர்க்கும் களைகண் ஆகிய
புண்ணிய! விடை’ எனத் தொழுது போயினான்.

“நீலமணி வண்ணமும் பைந்துழாய்க் கண்ணியும் உடைய நீ சரணாகதி வத்சலன் ஆகிய பரம்பொருளே! இனி. உலகு உன்னால் நலம் அனைத்தும் பெறும். நான் விடை பெறுகிறேன்” என பரசுராமன் விடைபெற்றனன்.

அதாவது, அலுவலகத்தில், அடுத்து வரும் நிர்வாகியிடம் பழைய நிர்வாகி, முக்கியமான கோப்புகளை (விஷ்ணு வில்) ஒப்படைத்துவிட்டு கைகுலுக்கி வாழ்த்தி விடை பெறுவது போல விடைபெற்றார் பரசுராமர். ஆனால், பரசுராம அவதாரம், அடுத்து வருகின்ற கண்ணனுடைய அவதாரத்திலும் வருவதைப் பார்க்கிறோம். மகாபாரதத்தில் துரோணருடைய ஆச்சாரியராகவும் கர்ணனுடைய ஆசிரியராகவும் பரசுராம அவதாரம் திகழ்வதையும் நாம் பார்க்கின்றோம்.

இரண்டு பூரண அவதாரம் (ராமன், கிருஷ்ணன்) இருக்கின்ற காலத்திலேயே இருக்கக்கூடிய அவதாரம் என்கின்ற சிறப்புப்பரசுராம அவதாரத்திற்கு மட்டுமே உண்டு. இந்தியாவின் சிறப்பான இரண்டு இதிகாசக்கதைகளிலும் உள்ள பாத்திரம் பரசுராமன்.

பரசுராமன், தான் சம்பாதித்த பூமிகளை எல்லாம், காஸ்யப மகரிஷிக்குத் தந்துவிட்டு சென்று விட்டார் என்று அவருடைய வரலாறு மத் பாகவதத்திலும் மற்றுமுள்ள புராணங்களிலும் கூறப்பட்டிருக்கிறது. ராமனுக்கே உரிய மகாவிஷ்ணுவினுடைய வில்லை தருவதற்காகவும் தம்முடைய சக்திகளை எல்லாம் அடுத்து வந்த அவதாரத்தோடு இணைத்துக் கொள்வதற்காகவும், “ராம- பரசுராம சந்திப்பு” ராமாயணத்தில் நிகழ்கிறது. இப்பொழுது இராமன் பரசுராமன் தந்த வில்லை வாங்கி, வருண பகவானிடம் தந்துவிட்டு அயோத்திக்கு புறப்படுகிறார் என்பதோடு பாலகாண்டக் கதை முடிகின்றது.

இராமாயணத்தை, தில்லை திருச்சித்ர கூடப் பாசுரங்களில் பாடிய குலசேகர ஆழ்வார், பாலகாண்டச் செய்திகளை மட்டும், முதல் மூன்று பாசுரங்களிலே பாடியிருக்கின்றார். பரசுராம அவதார வீரியத்தையும் தன்னுடைய அவதாரத்தோடு ஐக்கியப் படுத்திக் கொண்ட ராமன், முன்னிலும் முழுமையான ஒளிமுகத்துடன் தேர் ஏறி அயோத்திக்குத்திரும்புகின்றான்.

‘‘அம்பொன் நெடுமணி மாட அயோத்தி எய்தி’’ என்று ஆழ்வார் பாடிய இந்த வரியோடு பாலகாண்டம் முடிகின்றது. ராமாயணத்தில் ராமன் இரண்டு முறை அயோத்தியை விட்டு வெளியே செல்லுகின்றான். முதல் முறை அவன் விசுவாமித்திர மகரிஷியோடு வெளியே சென்று, தாடகை வதத்தை முடித்துக் கொண்டு, சீதையை கரம்பிடித்து சீதாராமனாகத் திரும்புகின்றான். இரண்டாவது முறை, சீதாராமனாக அவன் அயோத்தியை விட்டு வெளியேறி, 14 ஆண்டுகள் வனவாசம் செய்து, மறுபடியும் அயோத்திக்கு வருகின்றான்.

ராமன் அயோத்திக்குச் சென்றான் என்பதை ‘‘அம்பொன் நெடுமணி மாட அயோத்தி எய்தி’’ என்ற சொல்லினாலே ஆழ்வார்கள் குறிப்பிடுகின்றார்கள். அயோத்தி என்பது வைகுந்தத்தையும் குறிக்கும். நிலவுலகத்தில் ராமன் ஆண்ட நிலப்பரப்பையும் குறிக்கும். வைகுந்தம் என்கின்ற அயோத்தி விரஜாநதிக் கரையில் இருக்கிறது. நிலவுலகத்தில் உள்ள அயோத்தி சரயுநதிக்கரையில் இருக்கின்றது. இரண்டுமே யுத்தங்களால் ஜெயிக்கப்படாத நகரம் என்கின்ற புகழோடு விளங்குகின்றது. வைகுந்தம் எப்படி பொன்னாலும் நவரத்தினங்களாலும் இழைத்த நீண்ட மணிமாடங்களோடு திகழுமோ, அதைப்போலவே இராமன் ஆண்ட அயோத்தியும் திகழ்ந்தது என்பதை ‘‘அம்பொன் நெடு மணிமாட அயோத்தி’’ என்று குறிப்பிடுகின்றார்.

“நெடுமணி மாடம்” என்பது அற்புதமான தொடர்.

காரணம் பெருமாளுக்கு, ‘‘நெடியோன்’’ என்று பெயர். நெடியோன் குன்றம் என்று வேங்கட மாமலையைச் சொல்வார்கள். நெடியோன் என்ற தொடரே பெருமாளைத் தான் குறிக்கும். இராமனைத் தான் குறிக்கும் ஆகையினால் அவன் அவன் ஆட்சி செய்த நகரமானது நெடு மணி மாடங்களோடு திகழ்ந்தது.

மணிமாடம் என்கின்ற சொல் புகழ்பெற்ற சொல். வைணவர்கள் வசிக்கின்ற இல்லங்களை மணிமாடங்கள் என்று சொல்வது வழக்கம். வைணவ அடியவனுடைய இல்லம் என்பது ஆண்டவனுடைய இல்லத்தை விட கௌரவம் வாய்ந்தது என்பதால் ஆண்டாள்கூட ‘‘தூமணி மாடத்து’’ என்ற சொல்லால் குறிப்பிடுகின்றாள்.

நம்மாழ்வார் “துவளில் நன் மணிமாட தொலை வில்லி மங்கலம்” என்ற சொற்களால் குறிப்பிடுகின்றார். அப்படிப்பட்ட அயோத்தியை விட்டு வெளியேறிய கோசலை ராமன், ஜானகிராமனாக வந்து சேர்ந்தான் என்ற செய்தியோடு பாலகாண்டம் நிறைவு பெறுகிறது. இதற்குப் பிறகு, அவதார நோக்கத்தை ஒட்டிய நிகழ்வுகள் அடுத்தடுத்து நடைபெறுகின்றன. அவற்றை நாம் பார்க்கலாம்.

The post கோசலை ராமனாக சென்று ஜானகிராமனாக வந்தான் appeared first on Dinakaran.

Tags : Ghosale ,Raman ,Janakraman ,Parasurama ,Alwar ,Thiruvarankatu ,Amudanar Barasurama ,King Kokula ,
× RELATED தீ தொண்டு நாள் வார விழா