×

ஏன் எதற்கு எப்படி…?

?கைரேகை சாஸ்திரப்படி, தனரேகை என்பது நமது கைகளில் எந்த இடத்தில் உள்ளது? அதனை எப்படி பார்க்க வேண்டும்?
– பவமானாஸ்ரீ, ராய்ச்சூர்.

விதிரேகை என்ற பிரதானமான ரேகைதான் தனரேகையாகப் பார்க்கப்படுகிறது. இது, நமது நடுவிரலுக்குக் கீழே நேராக அமைந்திருக்கும். மணிக்கட்டிற்கு சற்று மேலே பின்னலாகத் துவங்கும் இந்த ரேகை, நேராக நடுவிரல் நோக்கிப் பயணிக்கும். இந்த ரேகை நல்ல அழுத்தமாகத் தென்பட்டால், தனவான் ஆகவும் லேசாகத் தென்பட்டால் சற்று தனம் குறைந்தவனாகவும் இருப்பார்கள். கீழ்ப்பகுதியில் துவங்கும்போது லேசாக இருந்தால், குழந்தைப் பருவத்தில் தனம் குறைந்தும் அதற்கு சற்று மேலே லேசாகத் தென்பட்டால் இளமைப் பருவத்தில் வறுமையுடனும், மேலே செல்லச் செல்ல அழுத்தமாக இருந்தால் தங்கள் உழைப்பால் முன்னேறி செல்வந்தன் ஆகவும் உயர்ந்திருக்கிறார்கள் என்று புரிந்து கொள்ள வேண்டும். ஒரு சிலருக்கு, கீழ்ப்பகுதியில் நல்ல அழுத்தமாகவும் மேலே செல்லச் செல்ல அது லேசாகவும் மாறி இருந்தால், பிறக்கும்போது செல்வந்தனாகப் பிறந்து நாட்கள் செல்ல செல்ல செலவுகள் கூடி ஏழ்மை நிலைக்குள் சென்றிருக்கிறார் என்றும் பலன் காண முடியும். இது அடிப்படையான ரேகை சாஸ்திரம்தானே தவிர, இதனை மட்டும் கணக்கில் கொண்டு பலன் சொல்லக் கூடாது.

?ஒரே ராசியில் பிறந்த ஆண் பெண் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாமா?
– வண்ணை கணேசன், சென்னை.

எந்தவித தயக்கமுமின்றி தாராளமாக திருமணம் செய்து கொள்ளலாம். கஷ்டம் வந்தால் இருவருக்கும் ஒரே நேரத்தில் வரும், ஒரே நேரத்தில் ஏழரை சனி நடக்கும் என்பது போன்ற தவறான கருத்துக்கள் நிலவுகின்றன. ஏழரை சனி என்றாலே கஷ்டம் வரும் என்பதும் தவறான எண்ணமே. அவரவர்கள் ஜாதகத்தில் நடக்கும் தசாபுக்தியும், அந்த கிரகங்களின் அமர்வு நிலையும்தான் பலன்களை தீர்மானிக்கும். அதனால் லக்னம், ஏழாம் இடம் மற்றும் கிரகங்களின் அமர்வுநிலை பொருந்தியிருக்கிறதா என்பதை மட்டும் பார்த்து திருமணத்தை முடிவு செய்ய வேண்டும். ஒரே ராசியைச் சேர்ந்த ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொள்வதால் அன்யோன்யம் என்பதுகூடும். பரஸ்பரம் புரிந்துக் கொள்ளும் தன்மை என்பதும் நன்றாகவே இருக்கும்.

?திருஷ்டி கழிப்பதாகச் சொல்லி பக்கத்துவீட்டுக்காரர்கள் எங்கள் வீட்டு வாசலில் மிளகாய் போன்றவற்றை கொட்டியுள்ளார்கள். இதனால் கெட்டது நடக்குமா?
– ஸ்ரீகைலாஷ், செகந்திராபாத்.

திருஷ்டி கழித்த மிளகாயை, அவர்கள் தெருவில்தானே கொட்டியுள்ளார்கள். உங்கள் வீட்டிற்குள் கொட்டவில்லையே? வீட்டு வாசலில் அது கிடப்பதால், உங்களுக்கு எந்த விதத்திலும் கெடுதல் உண்டாகாது. மாறாக, உங்கள் வீட்டிற்கு உண்டாகும் திருஷ்டியையும் அது
போக்கிவிடும். பயப்பட வேண்டாம்.

?குறிப்பிட்ட சில கோயில்களுக்குச் சென்று வந்தால், திருமணத் தடை நீங்கும் என்கிறார்களே, அது உண்மையா?
– சி.ராஜாமணி, கொட்டிவாக்கம்.

உண்மை என்பதால்தானே அதுபோன்ற ஆலயங்களை நாடி அனைவரும் வந்து கொண்டிருக்கிறார்கள். உதாரணத்திற்கு, திருமணஞ்சேரி என்ற ஊரில் உள்ள ஆலயத்திற்கு திருமணத்தடை நீங்க அனைவரும் செல்கிறார்கள் என்றால், அங்கே இருக்கும் தெய்வீக சாந்நித்யத்தைப் புரிந்துக் கொள்ள வேண்டும். அந்த ஊரின் பெயரே அந்த நம்பிக்கையை நமக்குத் தந்துவிடுகிறது. அதுபோக, அங்கே இறைவனுக்கு நடந்துக் கொண்டிருக்கும் நித்யக் கல்யாண உற்சவமும், அந்த சாந்நித்யத்தைக் கூட்டுகிறது. ஒவ்வொரு ஆலயம் அமைந்திருக்கும் இடத்திலும், ஒவ்வொரு விதமான ஸ்தான பலம் என்பது உண்டு. அந்த ஸ்தான பலத்தினைக் கொண்டும் அந்த ஆலயத்தினுடைய ஸ்தல புராணத்தைக் கொண்டும் அங்கே கிடைக்கும் பலன்களை அனுபவித்தும் பெரியவர்கள் அதனை நமக்கு வழிகாட்டி இருக்கிறார்கள்.

?ஈமக்கிரியை நடைபெறுவது போல் கனவு காண்பது நல்லதா?
– பி.கனகராஜ், மதுரை.

ஈமக்கிரியை என்று நீங்கள் எதனைக் குறிப்பிடுகிறீர்கள் என்பது தெரியவில்லை. ஏதோ ஒரு பிணம் எரிந்து கொண்டிருப்பது போல கனவு வந்தால், நல்லது. எரிந்து கொண்டிருக்கும் பிணம் நமக்கு பரிச்சயமான நபர் என்றால் அது நல்லதல்ல. எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம். அதே போல, பிண்டம் வைத்து கருமகாரியம் செய்வது போல கனவு வந்தால் நல்லதல்ல. நதிக்கரை அல்லது தீர்த்தக்கரையில் ஸ்நானம் செய்துத் தர்ப்பணம் விடுவது போலக் கனவுக் கண்டால், முன்னோர்களுக்கானக் கடன் ஒன்று பாக்கி இருப்பதைப் புரிந்து கொண்டு, அதனை உடனடியாக செய்துமுடித்துவிட வேண்டும். அசுப சடங்குகள் கனவில் வந்தால், உடனடியாக அன்றைய தினமே அருகில் உள்ள சிவாலயத்திற்குச் சென்று, வழிபட்டு நெற்றியில் திருநீறு பூசிக்கொள்வது நல்லது.

?தென்கிழக்கு பகுதியை வாடகைக்கு விடலாமா?
– லிங்கேசன், மதுரவாயல்.

தென்கிழக்கு என்பது அக்னி மூலை என்பதால், டீக் கடை, ஹோட்டல் கடை, ஸ்வீட் ஸ்டால், பேக்கரி போன்ற சமையல் சார்ந்த வியாபாரத்திற்கு வாடகைக்கு விடலாம்.

?குழந்தைகள் அறைக்கு ஏற்ற இடம் எது?
– வே.இந்துஜா, உளுந்தூர்பேட்டை.

தென்மேற்கு, மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் உள்ள அறைகள் உகந்தவை. 14 வயதிற்கு உட்பட்ட குழந்தை களாக இருந்தால், வடகிழக்கு திசையும் நன்மையையே தரும்.

?கிழக்கு நோக்கிய வீடு நல்லதா?
– வேலுச்சாமி, வண்ணாரப்பேட்டை.

கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என்று எல்லா திசைகளை நோக்கிய வீடுகளும் நல்லதுதான். இவற்றில், நம்முடைய ஜாதகப்படி, குறிப்பாக அந்த இல்லத்தின் குடும்பத்தலைவியின் ஜாதகப்படி, எந்த திசை நோக்கிய வாயிற்படி அமைப்பு உள்ள வீடு நல்லது என்பதைத் தெரிந்து கொண்டு, அதற்கேற்றவாறு அமைத்துக் கொள்ள வேண்டும். ஜாதகத்தைப் பார்க்காமல், மேலோட்டமாக இந்த திசை வீடு நல்லது இந்த திசை வீடு கெட்டது என்று தீர்மானிக்கக் கூடாது.

?கடவுளிடம் பிரார்த்தனை செய்யும்போது எந்தப் பக்கத்தை நோக்கி வணங்க வேண்டும்?
– இந்திரா சந்திரசேகரன், காட்பாடி.

இறைவன் இல்லாத இடம் ஏது? இறைவன் தூணிலும் இருக்கிறான், துரும்பிலும் இருக்கிறான் எனும்போது, எல்லா திசைகளிலும் நீக்கமற நிறைந்திருக்கும் இறைவனை வணங்குவதற்கு திசையைப் பார்க்க வேண்டிய அவசியமில்லை. நினைத்த மாத்திரத்தில் நினைத்த இடத்தில் இருந்துக் கொண்டு, நமக்குள்ளேயே இருக்கும் இறைவனை உணர்ந்து, மனதார பிரார்த்தனைச் செய்யும்போது, நிச்சயமாகப் பலன் கிடைக்கும்.

உங்களுக்கு ஏற்படும் ஜோதிட சந்தேகங்களை கேள்விகளாக எழுதி கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.
ஏன் எதற்கு எப்படி…?
தினகரன், ராசி பலன்கள்
தபால் பை எண். 2908,
மயிலாப்பூர், சென்னை – 600 004.

The post ஏன் எதற்கு எப்படி…? appeared first on Dinakaran.

Tags : Bawamanashree ,Rajasur ,
× RELATED ALP ஜோதிடம் ஓர் அறிமுகம்