×

டெலிகிராமில் லிங்க் அனுப்பி தனியார் நிறுவன ஊழியரிடம் ₹56 லட்சம் மோசடி வேலூர் சைபர் கிரைம் போலீசார் விசாரணை பகுதி நேர வேலையில் அதிகம் சம்பாதிக்கலாம் என

வேலூர், பிப்.29: பகுதி நேர வேலையில் அதிகமாக சம்பாதிக்காலம் என டெலிகிராமில் லிங்க் அனுப்பி ₹56 லட்சம் மோசடி செய்யப்பட்டதாக தனியார் நிறுவன ஊழியர் கொடுத்த புகாரின்பேரில், வேலூர் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வேலூரை சேர்ந்தவர் புருஷோத்தமன்(32). இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். டெலிகிராமில் கடந்த ஜனவரி மாதம் பகுதி நேர வேலை தொடர்பாக ஒரு விளம்பரம் வந்துள்ளது. இவர் அந்த விளம்பரத்தில் குறிப்பிட்ட லிங்க்கை கிளிக் செய்து உள்ளே சென்றுள்ளார். அதில் சில உணவு நிறுவனங்களின் பெயரில் உள்ள உணவு ரகங்களுக்கு ரேட்டிங் கொடுக்க வேண்டும். அவ்வாறு கொடுத்தால் பணம் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் ஒவ்வொரு பணி மேற்கொள்ளும்போது அதற்கு முதலீடாக பணம் செலுத்த வேண்டும் என்றும், பணிகளை வெற்றிகரமாக செய்து முடித்தால் செலுத்திய பணத்தில் இருந்து கூடுதலாக லாபத்துடன் பணம் சம்பாதிக்கலாம் என்றும் மர்மநபர்கள் தெரிவித்திருந்தனர்.

இதை நம்பிய அவர் அந்த லிங்க்கில் சென்று ஒரு கணக்கை தொடங்கினார். பின்னர் அந்த கணக்கில் தெரிவிக்கப்பட்ட ரேட்டிங் தொடர்பான பணியை செய்து முடித்தார். அவரும் ஒவ்வொரு பணிகளை முடித்து அதில் கமிஷனாக பணம் சம்பாதித்துள்ளார். ஒருகட்டத்தில் அவர் அதிகளவு பணத்தை முதலீடு செய்ய தொடங்கினார். ஆனால் அதற்கான லாபத்துடன் பணத்தை அவரால் பெற முடியவில்லை. மேலும் அதிக பணம் முதலீடு செய்து பணிகளை முடித்து கொடுத்தால் தான் முதலீடு செய்த பணம் கிடைக்கும் என்று மர்மநபர்கள் தெரிவித்துள்ளனர். அவரும் கடந்த ஜனவரி மாதம் 4ம் தேதி முதல் பிப்ரவரி 6ம் தேதி வரை பல தவணைகளில் ₹55 லட்சத்து 94 ஆயிரத்து 809 வரை செலுத்தினார். ஆனால் அவரால் அவர் செலுத்திய பணத்தை பெற முடியவில்லை.

தொடர்ந்து மர்மநபர்கள் பணம் செலுத்த வற்புறுத்தி வந்தனர். பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் இதுகுறித்து வேலூர் எஸ்பி மணிவண்ணனிடம் புகார் அளித்தார். இந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்குமாறு எஸ்பி உத்தரவிட்டார். தொடர்ந்து சைபர் கிரைம் ஏடிஎஸ்பி கோட்டீஸ்வரன், வேலூர் மாவட்ட சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் புனிதா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுபோன்று வாட்ஸ்ஆப், டெலிகிராம் மற்றும் இதர சமூக ஊடங்களில் முதலீடு, டாஸ்க், ஆன்லைன் பார்ட் டைம் ஜாப் தொடர்பாக வரும் விளம்பரங்களை நம்பி பொதுமக்கள் பணத்தை முதலீடு செய்து ஏமாற வேண்டாம் என்று சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

The post டெலிகிராமில் லிங்க் அனுப்பி தனியார் நிறுவன ஊழியரிடம் ₹56 லட்சம் மோசடி வேலூர் சைபர் கிரைம் போலீசார் விசாரணை பகுதி நேர வேலையில் அதிகம் சம்பாதிக்கலாம் என appeared first on Dinakaran.

Tags : Vellore ,crime ,Purushothaman ,Vellore.… ,Telegram ,Dinakaran ,
× RELATED குடிபோதையில் ரகளை செய்ததால்...