×

கேரள பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற வழக்கு; 2 போலீசாரை வெட்டிவிட்டு தப்பிய குற்றவாளியை சுட்டு பிடித்த எஸ்ஐ

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை பிடிக்க சென்றபோது 2 போலீசாரை கத்தியால் வெட்டிவிட்டு தப்பி ஓடிய வாலிபரை எஸ்ஐ துப்பாக்கியால் சுட்டு பிடித்தார்.

சென்னையைச் சேர்ந்தவர் ரமேஷ் (23) இங்குள்ள தனியார் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வருகிறார். இவரது காதலி கேரளாவை சேர்ந்த பவித்ரா (21). சென்னையில் உள்ள பிரபல தனியார் ஸ்டோரில் வேலை செய்து வந்தார். இவர்கள் இருவரும் திருவண்ணாமலைக்கு கிரிவலம் சென்று விட்டு கடந்த 24ம் தேதி அதிகாலை சென்னைக்கு பைக்கில் வந்துகொண்டிருந்தனர். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே கோனேரிகுப்பம் அருகே வந்தபோது 2 வாலிபர்கள் வழிமறித்து செல்போன், நகைகள் மற்றும் பணத்தை பறித்துக்கொண்டு பவித்ராவை பலாத்காரம் செய்ய முயன்றனர். அப்போது அங்கிருந்து தப்பி ஓடியபோது எதிர்பாராதவிதமாக வாகனம் மோதி பவித்ரா உயிரிழந்தார். இதனை பார்த்த வழிப்பறி வாலிபர்கள் தலைமறைவாகினர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த ஒலக்கூர் போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினர். இந்தநிலையில் குற்றவாளிகள் விக்கிரவாண்டி அடுத்த கப்பியாம்புலியூர் காப்பு காட்டு பகுதியில் பதுங்கியிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து ஒலக்கூர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் மகாலிங்கம் தலைமையில் 5 போலீசார் நேற்று அப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது இருவர் போலீசார் வருவதை கண்டு தப்பியோட முயற்சித்தனர். இதனைப் பார்த்த போலீசார் 2 குற்றவாளிகளையும் பிடிக்க சென்றபோது பிரம்மதேச காவல் நிலைய உதவி சிறப்பு உதவி ஆய்வாளர் ஐயப்பன், வெள்ளிமேடுபேட்டை காவல் நிலைய தலைமை காவலர் தீபன் குமார் ஆகிய இருவரையும் இடது கையில் கத்தியால் வெட்டிவிட்டு குற்றவாளிகள் தப்பி ஓடினர்.

இதனைப் பார்த்த உதவி ஆய்வாளர் மகாலிங்கம், ஒரு குற்றவாளியை நோக்கி துப்பாக்கியால் சுட்டார்.இதில் வலது கால் முட்டில் காயடைந்த குற்றவாளி மற்றும் ஒருவரை போலீசார் பிடித்தனர். இதையடுத்து காயடமடைந்த குற்றவாளி மற்றும் 2 போலீசார் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
மேலும் மற்றொரு குற்றவாளியை விக்கிரவாண்டி காவல்நிலையத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதில் காவல் நிலையத்தில் உள்ள குற்றவாளி 17 வயதுடையவர் என்பதும், போலீசாரை கத்தியால் வெட்டியவர் உதயபிரகாஷ்(24) என்பதும், இருவரும் திருநெல்வேலியில் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. இவர்கள் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதும் விசாரனையில் தெரியவந்துள்ளது.

The post கேரள பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற வழக்கு; 2 போலீசாரை வெட்டிவிட்டு தப்பிய குற்றவாளியை சுட்டு பிடித்த எஸ்ஐ appeared first on Dinakaran.

Tags : Kerala ,SI ,Vikravandi ,Ramesh ,Chennai ,
× RELATED ஆடையில் ரகசிய அறை அமைத்து ரூ.14.20 லட்சம்...