×

தலைமறைவாக உள்ள ஷாஜகான் ஷேக்கை சிபிஐ, ஈடி கைது செய்யலாம் : கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவு

கொல்கத்தா: சந்தேஷ்காளி விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்ட ஷாஜகான் ஷேக்கை சிபிஐ,அமலாக்கத்துறை கைது செய்யலாம் என கொல்கத்தா உயர்நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது. மேற்கு வங்கம், சந்தேஷ்காளியை சேர்ந்த திரிணாமுல் காங்கிரஸ் பிரமுகரான ஷாஜகான் ஷேக்கிற்கு ரேஷன் விநியோக ஊழலில் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. கடந்த ஜனவரி மாதம் அவரது வீட்டில் சோதனை நடத்த சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது 1000 பேர் கொண்ட கும்பல் தாக்கியது.

இதில்,3 அதிகாரிகள் படுகாயமடைந்த நிலையில் ஷாஜகான் தலைமறைவானார்.இதுவரை அவர் சிக்கவில்லை. பெண்களுக்கு பாலியல் தொல்லை மற்றும் நிலம் அபகரிப்பு வழக்குகளும் ஷாஜகானுக்கு எதிராக தொடரப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்து கொண்டுள்ள கொல்கத்தா உயர்நீதிமன்றம் அவரை இன்னும் கைது செய்யாமல் இருப்பது ஏன் என்று சமீபத்தில் கேள்வி எழுப்பியது.

இந்த வழக்கில் கொல்கத்தா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.சிவஞானம் தலைமையிலான பெஞ்ச் முன் நேற்று ஆஜரான மாநில அட்வகேட் ஜெனரல் கிஷோர் தத்தா, ‘‘கடந்த 4 ஆண்டுகளில் ஷாஜகானுக்கு எதிராக 43 எப்ஐஆர்கள் போடப்பட்டுள்ளது’’ என தெரிவித்தார். இதையடுத்து தலைமை நீதிபதி,‘‘ஷாஜகான் பல நாட்களாக தலைமறைவாக உள்ளார். சிபிஐ மற்றும் மாநில போலீசார் அடங்கிய கூட்டு விசாரணைக்குதான் கடந்த 7ம் தேதி நீதிமன்றம் தடை விதித்தது.ஷாஜகானை மாநில போலீசார் மற்றும் சிபிஐ, ஈடி அதிகாரிகள் கைது செய்யலாம்’’ என்று விளக்கம் அளித்தார்.

The post தலைமறைவாக உள்ள ஷாஜகான் ஷேக்கை சிபிஐ, ஈடி கைது செய்யலாம் : கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : CBI ,Shahjahan Sheikh ,Calcutta High Court ,Kolkata ,Enforcement Directorate ,Shaja Khan Sheikh ,Sandeshkali ,Trinamool Congress ,West Bengal ,ED ,Dinakaran ,
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான...