×

திருக்குறளில் கோல்!

தமிழில் கோல் என்ற சொல் கம்பு அல்லது குச்சியைக் குறிக்கும். சிறியதாக இருக்கலாம். பெரியதாக இருக்கலாம். எல்லாவற்றையுமே கோல் என்ற பொதுச் சொல்லால் குறிப்பிடுகிறோம். வள்ளுவர் தம் திருக்குறளில், பலவகைக் கோல்கள் பற்றிப் பேசுகிறார். ஒரு பொருளை நிறுக்க உதவும் துலாக்கோல், அளக்க உதவுகிற அளவைக் கோல், மன்னவனின் செங்கோல், பெண்கள் விழிகளில் அஞ்சனம் தீட்ட உதவும் கோல் என வள்ளுவர் குறிப்பிடும் கோல்கள் பலவகை.

சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க் கணி.
(குறள் எண் 118)

முன்னேதான் சமமாக இருந்து பின்னர் பொருளைச் சீர்தூக்கும் துலாக்கோல் போல் அமைந்து ஒரு பக்கமாகச் சாயாமல் நடுநிலைமை காப்பது சான்றோர்க்கு அழகு.

கேட்டினும் உண்டோர் உறுதி கிளைஞரை
நீட்டி அளப்பதோர் கோல்.
(குறள் எண் 796)

வாழ்வில் கேடு வந்தபோதும், அதில் ஒருவகை நன்மை உண்டு. அது நம் நண்பர்கள் எப்படிப் பட்டவர்கள் என்பதை அளந்து அறிந்துகொள்ள உதவும் கோல்போல் பயன்படுகிறது.

வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்வன்
கோல்நோக்கி வாழும் குடி.
(குறள் எண் 542)

மழையை எதிர்பார்த்து உலக உயிர்கள் எல்லாம் வாழும். அதுபோல் மன்னவனின் செங்கோல் ஆட்சியை எதிர்பார்த்துக் குடிமக்கள் வாழ்வர்.

அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல்.
(குறள் எண் 543)

அந்தணரது நூல்களுக்கும் அறத்திற்கும் ஆதாரமாய் இருப்பது மன்னவனின் செங்கோல்தான்.

குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்
அடிதழீஇ நிற்கும் உலகு.
(குறள் எண் 544)

குடிமக்களை அணைத்துக் கொண்டு செங்கோல் செலுத்தும் மன்னவனின் அடிகளைத் தழுவி இவ்வுலகம் நிலைக்கும்.

இயல்புளிக் கோலோச்சும் மாநில மன்னன்
பெயலும் விளையுளும் தொக்கு.
(குறள் எண் 545)

அரசனுக்குரிய இயல்போடு செங்கோல் செலுத்தும் மன்னன் வாழும் நாட்டில் பருவ மழையும் விளைபொருட்களும் மலிந்திருக்கும்.

வேலன்று வென்றி தருவது மன்னவன்
கோலதூஉங் கோடா தெனின்.
(குறள் எண் 546)

போர்க்களத்தில் வெல்வது அரசனுடைய வேல் அல்ல. அவனுடைய முறைதவறாத செங்கோல் ஆட்சிதான் அவனுக்கு வெற்றி தேடித் தருகிறது.

வேலொடு நின்றான் இடு என்றது போலும்
கோலொடு நின்றான் இரவு.
(குறள் எண் 552)

மன்னன் அளவுக்கதிகமாக வரிவசூல் செய்யக் கூடாது. வேலோடு வழியில் நின்று பொருட்களை அடித்துப் பிடுங்கும் வழிப்பறிக் கொள்ளைக்காரரைப் போல் மன்னன் கொடுங்கோல் கொண்டு இயங்கலாகாது.

எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன்
பழிகாணேன் கண்ட விடத்து.
(குறள் எண் 1285)

மை தீட்டுகின்ற நேரத்தில், தீட்டுகின்ற கோலைக் காணாத கண்களைப் போலக் காதலனை நேரில் காணும்போது அவன் குற்றத்தை நினைக்காமல் மறந்துவிடுகிறேன் என்கிறாள் தலைவி.
மன்னன் கையில் வைத்திருக்கும் செங்கோலைப் போல, ஒரு கோல் பழங்காலத்தில் சிறந்த கலைஞர்களுக்கு மன்னனால் வழங்கப்பட்டது. அதைத் தலைக்கோல் என அழைத்தனர். ஆடல் பாடல் கலைகளில் சிறந்து விளங்கிய மாதவிக்குச் சோழ மன்னன் இந்தத் தலைக்கோலை வழங்கியதாகச் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது.

தலைக்கோல் எப்படித் தோன்றியது என்பதற்கு ஒரு கதை சொல்லப்படுகிறது. இந்திரன் மகன் சயந்தன் அகத்தியரின் சாபத்தால் ஒரு மூங்கிலாக மாறினான். சோழ மன்னன் அந்த மூங்கிலை வெட்டித் தலைக்கோல் செய்து கொண்டான். அதன்பின், தன் சாபத்திலிருந்து சயந்தன் விடுதலை பெற்றான் என்கிறது தலைக்கோல் பற்றிய புராணக் கதை. இந்தக் கதை சிலப்பதிகாரத்தின் அரங்கேற்று காதையில் சொல்லப்படுகிறது:

`காவல் வெண்குடை மன்னவன் கோயில்
இந்திர சிறுவன் சயந்தன் ஆகென
வந்தனை செய்து வழிபடு தலைக்கோல்’

செங்கோல் என்பது மணிமகுடம், அரியாசனம், வெண்கொற்றக் குடை போல ஓர் அரசு சின்னம். மன்னனின் ஆட்சி நேர்மையானதாக அமைய வேண்டும் என்பதை அறிவுறுத்தவே அவன் கரத்தில் வளையாத செங்கோல் கொடுக்கப்பட்டுள்ளது. செம்மையான ஆட்சியைச் செங்கோல் ஆட்சி என்றும் அல்லாத கொடுமையான ஆட்சியைக் கொடுங்கோல் ஆட்சி என்றும் குறிப்பிடும் மரபு உள்ளது. சிலப்பதிகாரத்தில் செய்யாத குற்றத்திற்காக கோவலன் அநியாயமாய் தண்டிக்கப்பட்டான். இதனால் பாண்டியனின் நேராக இருந்த செங்கோல் வளைந்தது என்றும் பாண்டிய மன்னன் மயங்கி வீழ்ந்து உயிர் நீத்தான் என்றும் சிலம்பு பேசுகிறது.

“தாழ்ந்த குடையன் தளர்ந்த செங்கோலன்
பொன்செய் கொல்லன் தன்சொல் கேட்ட
யானோ அரசன் யானே கள்வன்
மன்பதை காக்கும் தென்புலம் காவல்
என்முதல் பிழைத்தது கெடுக என் ஆயுள்
என மன்னவன் மயங்கி வீழ்ந்தனனே!’’
(சிலப்பதிகாரம், மதுரைக் காண்டம், வழக்குரை காதை)

வயதானவர்கள் தடுமாறாமல் இருக்க, தங்கள் கையில் ஓர் ஊன்றுகோல் வைத்துக் கொள்வது அந்தக் காலம் தொட்டு இன்றுவரை உள்ள மரபு. அவ்வையைச் சித்திரித்துக் காட்டும் படங்களில் அவர் மூதாட்டி என்பதை உணர்த்தும் வகையில் அவர்து கையில் ஒரு கோல் இருக்கக் காணலாம்.

“பாலனாய்க் கழிந்த நாளும்
பனிமலர்க் கோதைமார்தம்
மேலனாய்க் கழிந்த நாளும்
மெலிவொடு மூப்பு வந்து
கோலனாய்க் கழிந்த நாளும்
குறிக்கோள் இலாது கெட்டேன்
சேலுலாம் பழன வேலித்
திருக்கண்டீச் சரத்துளானே’’
– என்பது அப்பர் தேவாரம்.

மூப்பு வரும்போது கையில் கோல் வைத்துக் கொள்ள வேண்டிய நிலை வரும் என்பதையே `கோலனாய்க் கழிந்த நாளும்’ என இப்பாடலில் வரும் வரி உணர்த்துகிறது. ராமாயணத்தில், ராமன் வனத்திற்குப் போகும் முன் தன்னிடமுள்ள செல்வங்களையெல்லாம் தானம் செய்யும் காட்சி சித்திரிக்கப் படுகிறது. அப்போது, தானம் பெற விரும்பி வருகிறார் மிகுந்த ஏழையான திரிஜடர் என்ற முனிவர்.

அவரிடம் தன் முன்னே நிறுத்தப்பட்டுள்ள பசுமாட்டுக் கூட்டங்களைக்காட்டுகிறான் ராமபிரான். அவர் தம் கையில் உள்ள கழியை எவ்வளவு தொலைவுக்கு விட்டெறிகிறாரோ அந்தத் தொலைவு வரை உள்ள பசுமாடுகள் அனைத்தும் அவருக்கே சொந்தமாகும் எனச் சிரித்துக் கொண்டே சொல்கிறான் ராமன்.அந்த முனிவரும், வேட்டியை வரிந்து கட்டிக் கொண்டு கழியை மூச்சைப் பிடித்தவாறு நெடுந்தொலைவு வீசி எறிகிறார். கழி விழுந்த இடம் வரை நிறுத்தப்பட்டுள்ள பசுமாடுகளை அவர் வீட்டிற்கு ஓட்டிச் சென்று அவரிடம் ஒப்படைக்குமாறு இடையர்களைப் பணிக்கிறான் ராமன்.

விளையாட்டாகவே தான் கோலை வீசி எறியச் சொல்லி, இப்படிப் பரிசோதனை செய்ததாகவும், அதைத் தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்றும் ராமன் அவரிடம் சொன்ன செய்தியும் ராமாயணத்தில் இடம் பெற்றுள்ளது. ஏழைகளுக்கு உடனே தானம் வழங்காமல் இப்படி ஒரு போட்டி வைப்பது சரிதானா என்ற கேள்வி எழுகிறது. ஓர் அபூர்வ ராமாயணக் கதை இதற்கு வேறுவகையில் ஒரு விளக்கம் சொல்கிறது.

பின்னாளில், சுக்கிரீவன் ராமன் வலிமைமேல் சந்தேகப்பட்டு, ஏழு மராமரங்களை ஒரே அம்பால் துளைத்துக் காண்பிக்குமாறு சோதனை வைத்தான் அல்லவா? ராமன் முன்னர் திரிஜடருக்கு வைத்த சோதனையின் விளைவாகவே ராமனுக்கு தான் சோதனைக்கு உட்பட வேண்டிய நிலை வந்தது என்கிறது அந்த ராமாயணம். கம்புகளை நட்டுவைத்து அதன் இடையே கட்டப்பட்டுள்ள கயிற்றில் உயரத்தில் நடக்கும் கலை ஒன்று உண்டு. கயிற்றில் நடப்பதோடு கரணம் போடுவது உள்படப் பற்பல வித்தைகளை அந்தக் கூத்துக் கலைஞர்கள் அந்தரத்தில் நிகழ்த்திக் காட்டுவார்கள்.
அந்தக் கலையே கழைக் கூத்து எனப்படுகிறது. கழை என்ற சொல் கம்பைக் குறிக்கிறது. இக்கலையில் ஈடுபட்டுள்ளோர் உடல் ரப்பர்போல் வளையும்.

அவ்விதம் உடலை வளைக்க, சிறு குழந்தையாக இருக்கும் போதிலிருந்தே பயிற்சி கொடுத்தாக வேண்டும். உயரமான இரு மூங்கில் கம்புகளும் அவற்றினிடையே மேலே இழுத்துக் கட்டப்பட்ட வலிமையான கயிறும்தான் இக்கலையின் ஆதாரங்கள்.உயிராபத்தைத் தோற்றுவிக்கக் கூடிய கலை இது. உயரத்திலிருந்து கயிற்றின் மேல் நடக்கும்போது கரணம் தப்பினால் மரணம் என்ற நிலைதான். மூங்கில் குச்சியை ஆதாரமாகக் கொண்ட கழைக்கூத்துக் கலை தற்போது அதிகம் காணப்படவில்லை. அழிந்துவரும் கலைகளில் இதுவும் ஒன்று.

கோலாட்டம் என்பது பற்பல வண்ணங்கள் தீட்டப்பட்ட கழிகளைக் கொண்டு பலர் இணைந்து தட்டிக்கொண்டே ஆடும் கலை.கண்ணன் பிறந்த நாளன்று கோலாட்டம் ஆடி அதைக் கோலாகலமாகக் கொண்டாடும் மரபு உண்டு. கண்ணன் கோல் கொண்டு ஆனிரைகளை மேய்த்ததால் கோலாட்டத்தில் கண்ணன் பற்றிய பாடல்கள் அதிகம் பாடப்படுகின்றன போலும்.
தமிழில் கோலாட்டத்தின் போது பாடுவதற்கென்றே ஆன்மிகச் சிந்தனைகளை உள்ளடக்கிய பாடல்கள் பல உள்ளன. கோலாட்டத்தில், பின்னல் கோலாட்டம் என்ற வகை அழகானதும் அரிதானதும் ஆகும். வட இந்தியாவில் தாண்டியா என்ற பெயரில் இந்தக் கலை செழித்து வளர்ந்துள்ளது.

துறவியர் கையிலும் கோல் உண்டு. அது முக்கோல் எனத் தமிழில் சொல்லப்படுகிறது. அதையே திரிதண்டம் என்கிறது வடமொழி. இறைவன், ஆன்மா, உடல் என்ற இம்மூன்று தத்துவங்களும் ஒன்றை விட்டு ஒன்று பிரியாமல் எக்காலத்தும் தத்தம் இயல்பை விட்டுவிடாமல் ஒன்று சேர்ந்துள்ளன என்பதை விளக்கவே துறவிகள் மூன்று கோல்களை ஒன்றாகப் பிணைத்து முக்கோலாக்கித் திரிதண்டமாகத் தங்கள் கையில் வைத்திருப்பர்.

இந்த தண்டம் என்கிற கோலைத் துறவியர் ஏன் வைத்திருக்கிறார்கள் என்பது குறித்து காஞ்சிப் பரமாச்சாரியார் தமது `தெய்வத்தின் குரல்’ என்ற நூலில் அழகாக விளக்கம் தருகிறார்:
`எங்களுக்கு தண்டம் எதற்கென்றால் அதுவும் மனசை அடக்கி வைத்திருப்பதற்குத்தான். அடித்து அடக்குவதற்கு ஆயுதமாக தண்டத்தை அதாவது கழியை உபயோகிக்கிறோம் அல்லவா? தண்டாயுதம், தண்டாயுதபாணி என்கிறோமே… தண்டனை என்ற வார்த்தையே தண்டத்திலிருந்து வந்ததுதான்.

ஜனங்கள் தப்பு வழிகளில் போகாமலும், சத்ருக்கள் தலைதூக்காமலும் அடக்கி ஆளுவது ராஜாங்கத்தின் முக்கிய காரியமாகையால் அரசியல் சாஸ்திரத்திற்கே தண்ட நீதி என்றுதான் பெயர். அந்த ரீதியிலே எங்கள் மனசை அடக்கி வைத்துக் கொள்வதற்கு சிம்பலாக ரூபகமாக எங்களுக்கு தண்ட தாரணம் விதித்திருக்கிறது. சிம்பல் மட்டுமில்லை. மந்திரத்தால் சக்தி ஊட்டி ஒரு குரு அனுக்ரகிக்கிற போது மனோ நிக்ரகத்திற்கு சகாயம் செய்கிற சக்தி தண்டத்திற்கு நிஜமாகவே உண்டாகிறது.’

என சன்யாசிகளின் கையில் உள்ள தண்டத்தின் பின்னணியை விளக்குகிறார் பரமாச்சாரியார். வள்ளுவம் நீதிக் கருத்துகளைச் சொல்லும் நூல். வள்ளுவர் கோல் என்ற வார்த்தையைப் பல இடங்களில் பயன்படுத்தியிருந்தாலும், தாம் சொல்ல வந்த நீதிக் கருத்துகளைக் கையில் கோலை வைத்துக் கொண்டு அதட்டிச் சொல்லவில்லை. எந்தக் கடுமையும் இல்லாமல் அன்பாகவே சொல்கிறார். அதனால்தான் இன்றளவும் அவர் இலக்கிய உலகில் கோலோச்சுகிறார்!

(குறள் உரைக்கும்)

திருப்பூர் கிருஷ்ணன்

The post திருக்குறளில் கோல்! appeared first on Dinakaran.

Tags :
× RELATED சித்ரா பெளர்ணமி சிறப்புகள்!