×

ஆயிரம் சூரியன்

கங்கை நதி, ராமன் அயோத்தியிலிருந்து தன் கரையில் கானகத்தில் வசித்துவருவதை அறிந்து மெதுவாகத்தான் ஓடிக் கொண்டிருந்தது. ராமன் என்னை பார்க்க வரவேண்டும் என பிரார்த்தித்தபடியும், கடந்துகொண்டிருந்தது. கங்கையின் தென்கரையில் உள்ள வேடுவர் கூட்டத்திற்கு சிங்கி பேரியர் என்று பெயர். பரதன் படையுடன் வருவதாக வந்த செய்தி கேட்டதிலிருந்து, குகன் பதற்றத்தில் இருந்தான். ஒரு மேடை போன்ற கல்லின் மீது ஏறி நின்று உரக்கப் பேசினான்.

“வேடுவர்களே.. வேடுவர்களே..! ராமன் என்னை உடன்பிறப்பாக ஏற்றுகொண்டபின், நாம் தானே ராமனுக்கு பொறுப்பு? உங்கள் பலம் பற்றித் தெரியாமல் படை கொண்டு வருகிறான் பரதன். எத்தனை யானைப்படை, குதிரைப்படை வந்தால் என்ன? நம்மால் வெல்ல முடியாதா?” அவன் பேசிக்கொண்டே போனான். வேடுவர் கூட்டம் எந்தச் சலனமும் இன்றி நின்றிருந்தது. ஆயிரத்துக்கும் மேலான வேடுவர்களின் கூட்டம் அது. தனது தலைவன் தவறாக யோசிப்பதாக நினைத்தது.

சிங்கிபேரிய ஆசான் ஒரு ஓரத்தில் அமர்ந்து கவலையுடன் பார்த்துக்கொண்டிருந்தார். அவர் குகனின் பாட்டன். அது மட்டுமல்ல, அந்த கூட்டத்தின் மிகுந்த மரியாதைக்குரிய ஆலோசகர்.
அந்தக் கூட்டத்தினரை வழி நடத்து வதில் மிகுந்த பங்கு வகிப்பவர். அந்த கங்கை நதியோரத்தில் உள்ள ஆசிரமங்களில் தவம் புரியும் முனிவர்களுக்குத் தோழமையுடன் உற்ற துணையாக இருப்பவர். அயோத்தி அரண்மனையுடன் மிகுந்த தொடர்பு கொண்டவர். வேடுவர் கூட்டத்தின் முக்கிய முடிவுகள் இவரின் ஒப்புதலுடன்தான் நடக்கும்.

குகன், வேடுவர்கள் தயங்கியபடிநிற்பதையும் பாட்டனார் ஏதோ சொல்வதற்கு அழைப்பதாகவும் அறிந்து, தான் ஏதோ தவறுபுரிந்துவிட்டதாக உணர்ந்தான். பாட்டனார் அருகில் வர, குகனை ஆதரவாக அணைத்து கங்கையின் கரையோரமாகச் சென்றார். கூட்டம் கலைந்து செல்ல குகன் உத்தரவிட்டான். பாட்டனார் குகனின் கண்களை பார்த்து பேசத்தொடங்கினார்.
“ராமனின் மீது நீ கொண்டிருக்கும் அன்பு, அக்கறை, மரியாதை எல்லாமும் எனக்குப் புரிகிறது. நீ பரதன் பற்றி கொண்டிருக்கும் அனுமானம் முற்றிலும் தவறு.”

“இல்லை பாட்டனாரே! ராமனுக்குப் பரதனால் ஏதாவது துன்பம் நேர்ந்துவிடுமோ என்கிற எண்ணம் மேலோங்கி நிற்கிறது. ராமனைக் காப்பது நம் எல்லோரின் கடமை.”
“புரிகிறது. என்னுடன் கங்கைக் கரைக்கு வா. உனக்கு நன்றாகத் தெரியுமே, நான் தசரதர் அரண்மனைக்கு மிகவும் நெருக்கமானவன் என்பது. நீ மட்டுமல்ல, பரதனின் நெருங்கிய சுற்றம்கூட அவனைத் தவறாகத்தான் புரிந்து கொண்டிருக்கின்றனர். உண்மையையும் சத்தியத்தையும் மட்டும் உன்னுடன் பகிர்ந்துகொள்கிறேன் வா.”

“பாட்டனாரே! உங்களின் பாசமும் நம் குலத்தின் மீதான அக்கறையும் நான் அறிவேன். என்றென்றும் நீங்கள் எங்களுடன் இருப்பது மிகுந்த பலமும் நம்பிக்கையையும் தரும். கங்கைக்கு நிகரான உங்களையும் என் தாய் கங்கையையும் ஒருங்கே வணங்கு கிறேன்.” உணர்வு மேலிட நெடுஞ்சாண் கிடையாக நமஸ்கரித்தான். குகனைத் தொட்டுத் தூக்கி, அவன் தலையில் கைவைத்து வாழ்த்தினார்.

“குகனே! நீ மிகவும் பவித்ரமானவன். உன்னை ராமன் தன்னுடைய சகோதர னாக ஏற்றுக்கொண்டது ஒன்றே போதும், உன் புகழ் சொல்ல. நீ இந்தக் குலம் தழைக்க வந்த மாமணி. இங்கு வசித்துவரும் அத்தனை முனிவர்களும் உன்னை வாழ்த்துகிறார்கள். என் ஆசி என்றும் உண்டு” “பரதன் தென்கரைக்கு வந்து சேருவதற்கு இன்னும் நேரமிருக்கிறது. அதற்குள் அவனை மற்றவர்கள் எப்படியெல்லாம் தவறாகப் புரிந்து கொண்டுள்ளார்கள் என்பதை உனக்குக் கூறுகிறேன்.” அவரது காலடியில் குகன் அமர்ந்து வணங்கிக் கேட்கலானான்.

“பரதனின் தாய் கைகேயி அவனைப் புரிந்து கொள்ளவேயில்லை. எப்போதுமே ராமனைத்தான் மகன் என்றே கொண்டாடுவாள். அதில் தவறில்லை.பொதுவாகவே பல தாய்மார்கள் பிள்ளைகளின் வயிறு பார்த்து உணவு அளிப்பார்கள். ஆனால், மனதைப் பார்ப்பதேயில்லை. இரண்டு வரம் கேட்டதில் யாருக்கு என்ன உபயோகம்? பரதனுக்கு ஆட்சியில் அமர வேண்டும் என்ற எண்ணம் என்றுமே இருந்ததில்லை. அவனுக்கு ராமன்தான் எல்லாமும். பெற்ற தாயே புரிந்துகொள்ளாதபோது, வரும் துயரம் பெரிதல்லவா.இரண்டாவதாக, தசரதரும் பரதனைப் புரிந்துகொள்ளவில்லை.

கைகேயி இரண்டு வரம் கேட்டபோது, தசரதர் கெஞ்சிக் கதறினார். அவள் மனம் மாறவில்லை. மனம் நொந்தார். கைகேயிடம் தசரதர் இறுதியாகக் கேட்டதுகூட ராமன் காட்டுக்குப் போகாமல் இருப்பதற்குத்தான். அப்பொழுதுகூட பரதனைப் பற்றிச் சிறிதும் யோசிக்கவில்லை. குலகுரு வசிஷ்டர் அழைத்துவரப்பட்டார். நிலவரம் அறிந்தார். தசரதர் அருகில் சென்று கொஞ்சம் பொறுமை காக்கும்படியும் கைகேயியைச் சமாதானம் செய்வதாகவும் கூறினார்.

தசரதர் வெகுண்டு, “தேவையில்லை… தேவையில்லை… என் விதி எனக்குத் தெரி கிறது. ராமன் என்னை விட்டுப் பிரிந்து கானகம் செல்லும்போது என் உயிரும் என்னை விட்டுப் பிரிந்துவிடும். நான் சொல்வதைக் குறித்துக் கொள்ளுங்கள். முதலாவது, இதோ இருக்கிறாளே கைகேயி இவள் என் மனைவி இல்லை. பட்டத்து மகிஷியும் இல்லை. இரண்டாவது, பரதன் என் மகனும் அல்ல. தசரதர் தரையில் சாய்ந்தார். வசிஷ்டர் மௌனமாய் வெளியேறினார். குகனே! கைகேயியை மனைவியில்லை என்றது சரி. இரண்டாவதாக கேட்கக் கூடாத வரங்களைக் கேட்டாள். அவள் அந்தக் கதியைத்தான் அடைய வேண்டும். ஒப்புக்கொள்ளலாம். ஆனால், பரதன் மனதால்கூட எந்தத் தீங்கையும் யாருக்குமே இழைக்கவில்லயே.

ராமனோ இலக்குவனுடன் காட்டுக்குச் செல்லவேண்டிய சூழல். தசரதர் மரித்த பின் அவருக்குச் செய்ய வேண்டிய அந்திமக் கிரியைகளைச் செய்ய வேண்டிய பாத்தியதை உள்ள பரதனுக்குக் கிடைக்கவிடாமல் செய்தது மிகப்பெரிய கொடுமை இல்லையா? தவறே இழைக்காத பரதனுக்கு இந்த தண்டனை அடுக்குமா? எந்த தந்தையாவது இப்படி ஒரு விஷயத்தைச் செய்வானா? ஆக தசரதர்கூட பரதனை புரிந்துக் கொள்ளவில்லை. பாட்டனார் இதைக் கூறியதும் குகனுக்கு கண்ணீர் பொங்கியது.

மூன்றாவதாக இலக்குவனும் பரதனைப் புரிந்து கொள்ளவில்லை. ராமன் காடு செல்ல வேண்டும், பரதனுக்கு பட்டாபிஷேகம் என்ற செய்தி அறிந்ததுதான் தாமதம். எப்போதுமே சீறிக்கொண்டிருக்கும் அவன் கோபம் இன்னமும் உச்சத்தைத் தொட்டது. “ராமன் கானகம் செல்லவேண்டுமா? யார் இப்படி முடிவெடுத்தார்.” சுற்றியுள்ள பொருட்களை விசிறி எறிந்தான். தரையை உதைத்தான். இந்தச் செயல் ஒப்புக் கொள்ளவேண்டியதுதான். ராமன் காட்டுக்குப் போவதில் யாருக்கு மகிழ்ச்சி? அவன் கோபம் நியாயமானதுதான். அதற்கு மேல் அவன் குறிப்பிட்டதுதான் மிகுந்த வருத்தம் அளிப்பது. ராமனின் அருகில் சென்றான். உரக்கக் கூவினான்.

ராமனுக்கான மகுடம் பரதனுக்கா? ஒரு சிங்கத்துக்காக வைக்கப்பட்டிருக்கும் மாமிச உணவை, இரவெல்லாம் அலைந்து திரிந்ததால் உண்டான பூஞ்சைக் கண்களோடு இருக்கும் ஒரு தெரு நாய்க்கா கொடுப்பது? ராமன் ஒரு சகோதரன் எனில் பரதனும் சகோதரன்தானே. நாய் என்று இழித்துரைக்கும் அளவுக்கு பரதன் என்ன செய்துவிட்டான்? ராமன் மீது அவனுக்குள்ள பக்தி புரிந்து கொள்ளக்கூடியது. ஆனால், அதற்காக பரதனைத் தாழ்த்தி சொல்லவேண்டுமா என்ன? ராமன் அவனை அடக்கும்வரை அவன் ஓயவில்லை.

தாய், தந்தை, சகோதரன் யாருமே பரதனைப் புரிந்துகொள்ளவில்லை. அயோத்தியில் இவை எல்லாம் நடந்தபொழுது, கேகய நாட்டில் அவர்களின் மாமனது அரண்மனையில் பரதனும் சத்ருக்னனும் இருந்தார்கள். வசிஷ்டர் அவர்களை உடனே அயோத்தி திரும்புமாறு செய்தி அனுப்பினார். பரதன் அயோத்தியை அடைந்ததும் எல்லாச் செய்திகளையும் கேட்டறிந்து, மிகுந்த கவலையுற்றான்.

கைகேயி இரண்டு வரம் கேட்டதும், தசரதர் இறந்ததும், ராமன் இலக்குவன் சீதை என மூவரும் காட்டுக்குச் சென்றதும், இலக்குவன் கூறிய சுடு சொற்களும் அவனை வதைத்தது. கோசலை ஒருத்திதான் தனக்கு இருக்கும் ஒரே ஆறுதல் என நினைத்தான். அவளிடம் சென்றான். நின்றான். தேம்பித் தேம்பி அழுதான். கோசலை அவனைத் தேற்றுவாள் என எதிர்பார்த்த பரதனுக்கு, அதிர்ச்சிதான் மிஞ்சியது. பரதன் பற்றியிருந்த கைகளை விலக்கிய கோசலை “உன் அன்னை கைகேயி நடத்திய சூழ்ச்சி நாடகம் நீ அறியாததா?” இதை கேட்ட பரதனுக்கு தரை நழுவியது போல உணர்ந்தான். எதையும் பேச முடியாமல் திரும்பினான்.

“குகனே! கோசலை ராமனைப் பெற்றவள்தான். ராமன், கானகம் செல்லும்போது கோசலையிடம் வணங்கி விடைபெற்றான். அப்பொழுது “பரதன் நாடாளப் போகிறானா! ஆஹா! அற்புதம்!. உன்னைவிட பரதன் நல்லவன்” என்று சொன்னவள்தான் கோசலை. கைகேயி, தசரதன், இலக்குவன் போல கோசலையும் பரதனைப் புரிந்து கொள்ளவேயில்லை. சத்ருக்னன், தந்தைக்கு செய்ய வேண்டிய அந்திமக் கிரியைகளைச் செய்தான். பரதன் மனம் வெதும்பினான். இது நடந்த மூன்றாம் நாள் மிகுந்த சோகத்தில் ஒரு மூலையில் மரவுரி தரித்தபடி பரதன் அமர்ந்திருந்தான். வசிஷ்டர் வந்தார். பரதனின் தோளைத்தொட்டு ஆறுதல் கூறினார்.

“பரதனே! உன்னுடைய துயரம் எனக்குப் புரிகிறது. அயோத்தி ராஜ்ஜியம் இப்போது அரசரின்றி இருக்கிறது. தசரதரின் இறுதி மொழியின் படி உனக்குப் பட்டாபிஷேகம் செய்ய வேண்டும். உனக்கு உகந்த ஒரு நாளை நான் தேர்வு செய்யட்டுமா?” என்று இதைக் கேட்டவுடன் பரதனுக்கு அதிர்ச்சியும் அழுகையும்தான் வந்தது. “என்னை என் தாய் புரிந்துகொள்ளவில்லை. காரணம் அவள் என் மேல் கொண்ட பாசமாக இருக்கலாம். தசரதர் என்னைப் புரிந்து கொள்ளவில்லை. காரணம் ராமன் காட்டுக்குச் சென்ற அதிர்ச்சி.

இலக்குவன் புரிந்து கொள்ளவில்லை. ஏனெனில் ராமன் மேல் கொண்ட அதீத பக்தி. கோசலைகூட என்னைப் புரிந்து கொள்ளவில்லை. அதன் காரணமும் எனக்குத் தெரியவில்லை. அதை எண்ணி நானே என்னை நொந்து கொண்டிருக்கும் வேளையில் நீங்கள் இப்படிச் சொல்வது சரியா? நான் என் தந்தைக்குச் செய்ய வேண்டிய அந்திமக் கிரியைகளையும் செய்ய முடியாமல் என் தந்தையின் ஆணை தடுத்துவிட்டது. நீங்கள் இந்த அயோத்தியில் மெத்த ஞானம் படைத்தவர். எல்லா சாஸ்திரமும், தர்மமும் அறிந்தவர். உங்கள் மனதிலும் இந்த நாட்டை நான் ஆளுவேன் என்று நம்புகிறீர்களா?” பரதன் அந்த இடத்தில் இருக்கப் பிடிக்காமல் வெளியேறினான். அரண்மனையின் வெளியில் நின்றான்.

பரதன், அயோத்தி மக்களிடம் உரக்கச் சொன்னான். “இந்த அயோத்தியை ஆள வேண்டிய ராமனை நான் கானகத்திலிருந்து அழைத்து வரச் செல்கிறேன்.” இதைக் கேட்டு, அவனுடன் மொத்த அயோத்தி மக்களும் திரண்டு வந்து கொண்டிருக்கிறார்கள்.இதுதான் உண்மை. ஆனால், நீ.. ராமன் மேல் பரதன் படையெடுத்து வருவதாக எண்ணி வேடுவக் கூட்டத்தின் முன் உரையற்றிக்
கொண்டிருந்தாய்.நீயும் பரதனைப் புரிந்துகொள்ளாதவர்களின் வரிசையில் இருப்பது கண்டு பதைபதைத்துப்போய்தான் உன்னைக் கூப்பிட்டேன். எனக்குத் தெரிந்த எல்லா விஷயங்களையும் உன்னிடம் சொல்லிவிட்டேன்.” என்று பாட்டனார் முடித்தார்.

குகனுக்கு இப்போது எல்லாம் விளங்கிற்று. பாட்டனாரைப் பார்த்து கைகூப்பி வணங்கினான். கங்கைக் கரை நோக்கி நடந்தான். பாட்டனார் கூறிய எல்லா விஷயங்களும் ஒன்றன் பின் ஒன்றாக வந்து போனது. கங்கையில் குளித்து தன் குலதெய்வத்தை வணங்கினான். படகை வடகரையை நோக்கிச் செலுத்தினான். அவன் வருவதைப் பார்த்து சுமந்திரன், பரதனுக்குச் சுட்டிக்காட்டி குகனின் பெருமைகளைக் கூறினான். தென் கரையிலிருந்து பரதனை நினைத்தபடி குகன் படகைச் செலுத்தினான். அதே நேரம் குகனை மனதில் வியந்தபடி பரதன் குகனை எதிர்
நோக்கியிருந்தான்.

‘பரதனுக்குப் பின்னால் அயோத்தியே திரண்டு வருகிறதென்றால் எவ்வளவு தூரம் மக்கள் அவன் நேர்மையை உணர்ந்திருக்கிறார்கள்.’‘ஒரு சாதாரண வேடுவக் கூட்டத்தின் தலைவன். எனினும் இந்த கங்கை கரையில் தர்மம் தழைக்க அத்தனை முனிவர்களையும் காக்கும் அரணாக இருக்கிறானே!’‘பரதன் தன்னை சுற்றியுள்ள பெரும்பாலோனோர் தன்னைப் புரிந்துகொள்ளவில்லை. எனினும், கலங்கவில்லையே. அயோத்தி ராஜ்ஜியம் என்றுமே ராமனால் மட்டுமே ஆளப்பட வேண்டும் என உறுதி பூண்டிருக்கிறானே!’ ‘குகன் எந்தக் கல்வியும் கற்றத்தில்லை. ஆனாலும் அவனுக்குப் பிறவியிலேயே எல்லோரையும் மதிக்கும் தன்மையும், அரவணைத்து செல்லும் குணமும் இருக்கிறது. அதுதான் நம் ராமன் அவனை அடையாளம் கண்டு கொள்ளக் காரணமாய்
இருந்திருக்க வேண்டும்.’

‘ராமன், தனக்கு கிடைத்த அரசபதவி இல்லை என்று ஆனபின்பு, கானகம் வந்தது பெரிய பண்புதான். ஆனால், தனக்கு கிடைத்த அரசபதவியை மறுத்து, ராமனுக்குத்தான் அதை அளிப்பேன் என வந்துள்ளானே அது எத்தகைய மாண்பு!’‘குகனின் பூர்வ ஜென்ம புண்ணியம் அவனை ராமன் தன்னுடன் இணைத்துக் கொண்டது. ராமன் உடன் பிறந்தவனாக ஏற்றுக் கொண்ட உன்னைச் சந்திக்க இருப்பது எனக்கு மிகுந்த பாக்கியம்.’

‘பரதன் தன்னைச் சுற்றியுள்ள அத்தனை மனிதர்கள் புரிந்து கொள்ளாதது ஒரு புறம் . பரதனுக்கு அணுக்கமாக இருந்து அறிவுரை கூற ஒருவர் கூட இல்லாதது மற்றொருபுறம். எனினும் ராமன் அரியணையை ஏற்கவேண்டும் என்று துடிக்கிறானே ! ராமன் மேல் என்ன பக்தி!’‘குகன் எந்த குலத்தில் பிறந்த போதும், வேதம் ஓதும் முனிவர்கள் கூட்டத்தினரிடையே இருந்ததால்தான் நல்ல அதிர்வுகள் அமைந்திருக்கும். அதுவே அவனிடத்தில் உத்தம எண்ணங்களை விதைத்திருக்கும்.

நல்லவர்கள்கூட
இருப்பது ஒரு கொடுப்பினை. குகன்
கொடுத்துவைத்தவன்!’.
‘ராமனைச் சந்தித்தது எவ்வளவு
பாக்கியமோ அவ்வளவு பாக்கியம்
பரதனே.. உன்னை நான் சந்திக்க
இருப்பதும்.’
‘குகனே! உன்னை ராமன் தழுவிக்
கொண்டானாமே. அந்தத் தோள்களை நான் தழுவ வேண்டும். என் நினைவு தெரிந்து நான் ராமனைத் தழுவியதே இல்லையே!’ குகன் படகைக் கரையில் நிறுத்தினான்.
பரதனின் கால்களில் விழப் போனான்.

பரதன், குகனைத் தாங்கிப் பிடித்துத் தூக்கினான். இருவர் கண்களிலும் அடக்க முடியாத கண்ணீர். மாறிமாறி ஒருவர் தோளில் ஒருவர் புதைந்து உச்சி முகர்ந்தனர். சுமந்திரனும் சத்ருக்னனும் இருவரையும் பார்த்துக் கும்பிட்டபடி நின்றார்கள்.“என் நாட்டின் மன்னனை அழைத்துச் செல்ல வந்துள்ளேன்” என பரதன் கூறினான். அண்ணன் என்று குறிப்பிடாமல் மன்னன் என்று குறிப்பிட்டதை குகன் கவனித்து வியந்தான்.

மேலும் நெகிழ்ந்தான். பரதனின் காதுகளில் “ஆயிரம் ராமன் உனக்கிணை” என்றான். பரதன் அதை மறுத்துச் சொல்ல வாயெடுக்கையில், “நம் ராமனுக்கு எல்லாமும் தெரியும், இது உள்பட. இனி எல்லாமும் ராமனின் ஆசியின் படி இனிதே நடக்கும்.” கங்கை, தென்கரையில் உள்ள ராமன் இலக்குவன் ஆகியோரை எண்ணியும், வடகரையில் உள்ள பரதன், சத்ருக்னன், குகன் ஆகியோரையும் எண்ணிஎண்ணி இருகரைகளையும் நமஸ்கரித்தபடி சென்றது.

கோதண்டராமன்

The post ஆயிரம் சூரியன் appeared first on Dinakaran.

Tags : Ganges ,Ayodhya ,Rama ,Kanaka ,Veduvar ,Singi Barrier ,Bharatan ,
× RELATED ராம நவமி நாளில் அயோத்தி ராமரின்...