×

தெலங்கானா மாநில பாஜக தலைவர் ஓட்டலில் போதை மருந்து விருந்து பிரபல சினிமா இயக்குனர் உட்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு

*7 பேருக்கு போலீஸ் வலை

திருமலை : தெலங்கானா மாநில பாஜ தலைவர் ஓட்டலில் போதை மருந்து விருந்து நடந்ததாக பிரபல சினிமா இயக்குனர் உட்பட 10 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தெலங்கானா மாநிலம் கச்சிபௌலியில் செரிலிங்கம்பள்ளியில் பாஜக வேட்பாளராக 2018ம் ஆண்டு போட்டியிட்டதுடன் மட்டுமல்லாமல், வரும் மக்களவைத் தேர்தலிலும் போட்டியிட தீவிர முயற்சி செய்து வருபவர் கஜ்ஜால யோகானந்த்திற்கு சொந்தமான ஓட்டல் உள்ளது. இந்த ஓட்டலில் கடந்த 3 நாட்களாக யோகானந்தின் மகன் விவேகானந்த், அவரது நண்பர்களுக்கு பார்டி வைத்துள்ளார். இந்த பார்ட்டியில் போதை மருந்து பயன்படுத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து ஓட்டலில் சோதனை மேற்கொள்ள போலீசார் சென்றபோது, பார்ட்டி முடித்துக் கொண்டு அனைவரும் சென்று விட்டனர்.

ஆனால் அந்த இடத்தில் போதை மருந்து பயன்படுத்திய ஆதாரங்கள் இருந்ததால், அங்கிருந்த சி.சி.டி.வி. காட்சிகளை வைத்து யார் யார்? பங்கேற்றார்கள் என்பதை ஆய்வு செய்தனர். அப்போது ஓட்டலின் உரிமையாளர் யோகானந்த மகன் விவேகானந்தா உள்பட பலர் இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து முதலில் விவேகானந்தா அவரது நண்பர்கள் இருவரையும் காவல் நிலையம் அழைத்து வந்து மருத்துவ பரிசோதனை செய்ததில் அவர்கள் போதை மருந்து பயன்படுத்தியது தெரிய வந்தது. இதனையடுத்து அவர்கள் போலீஸ் காவலில் விடுவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் இந்த பார்ட்டியில் போதை மருந்து சப்ளை செய்தவர் குறித்து விசாரித்ததில் அப்பாஸ் என்பவரை பிடித்தனர். அவரிடம் நடத்திய விசாரனையில் விவேகானந்தா பார்ட்டியில் பிரபல சினிமா இயக்குனர் கிரிஷ், பிரபல யூடியூபர்கள் லிஷிகணேஷ் மற்றும் சுசிதா ஆகியோர் இருந்ததாக விசாரணையிலும் சி.சி.டிவி. காட்சிகள் மூலமும் தெரிய வந்தது. இதனால் இவர்கள் போதை மருந்து உட்கொண்டார்களா? இல்லையா? என்பதை உறுதி செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

இந்த பார்ட்டியில் 10 பேர் போதை மருந்து பயன்படுத்திய நிலையில் எப்ஐஆரில் 10 பேர் பெயர்களை போலீசார் சேர்த்துள்ளனர். விவேகானந்தா தனது நண்பர்களுக்கு போதை விருந்து வழங்கியதை ஒப்புக்கொண்டார். இதனையடுத்து அவர் கொடுத்த வாக்குமூலம் அடிப்படையில் விவேகானந்தா, நிர்பய், ரகுசரண், கேதார், சந்தீப், ஸ்வேதா, லிஷி, நீல் மற்றும் கிரிஷ் ஆகியோருடன் போதை விருந்தில் பங்கேற்றுள்ளனர்.

இதற்காக சையது அப்பாஸ் ஜாப்ரியிடம் போதைப்பொருள் வாங்கியதாக போலீஸ் விசாரணையில் விவேகானந்தா தெரிவித்துள்ளார். இதனையடுத்து போதைப்பொருள் வழக்கில் தலைமறைவாக உள்ள 7 பேரை போலீசார் தேடி வருகின்றனர். மாதப்பூர் காவல் துணை ஆணையர் வினீத் கூறுகையில், விவேகானந்தா ஓட்டலில் போதைப்பொருள் பயன்படுத்தப்பட்டதா என்று போலீசார் சோதனை செய்தபோது, விவேகானந்தாவுடன் அவரது நண்பர்கள் நிர்பாய் மற்றும் கேதார் ஓட்டலின் பாதாள அறை பார்க்கிங்கில் இருந்து காரில் தப்பி சென்றனர்.

அவர்கள் தப்பிக்க ஓட்டல் ஊழியர்கள் உதவினார்களா என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றம் சாட்டப்பட்டவர்களின் செல்போன்கள் கைப்பற்றப்பட்டு தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு போதை பொருட்கள் விற்பனை செய்த சையத்தை கண்டுபிடித்தால் இந்த கோகோயின் எங்கிருந்து வருகிறது? இதன் பின்னணியில் உள்ள உண்மையானவர்கள் யார்? ஐதராபாத் நெட்வொர்க்கில் முக்கிய புள்ளிகள் யார்? மக்களை போதை கடலில் ஆழ்த்தும் போதை ஆசாமி யார் போன்றவை தெரிய வரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

The post தெலங்கானா மாநில பாஜக தலைவர் ஓட்டலில் போதை மருந்து விருந்து பிரபல சினிமா இயக்குனர் உட்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு appeared first on Dinakaran.

Tags : Telangana state ,BJP ,BAJA PRESIDENT ,Cherillingamalli ,Kachibowli, Telangana ,Telangana state BJP ,Dinakaran ,
× RELATED காதலனை திருமணம் செய்து கொண்டதால்...