×

திருப்பதி தேவஸ்தானம் பங்களிப்பில் இலங்கையில் ஏழுமலையான் கோயில்

*அறங்காவலர் குழு தலைவர் பேட்டி

திருமலை : இலங்கையில் ஏழுமலையான் கோயில் அமைக்க பக்தர் ஒருவர் முன்வந்திருக்கும் நிலையில் அங்கு கோயில் அமைக்க திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பங்களிப்பு வழங்கப்படும் என அறங்காவர் குழுத்தலைவர் கருணாகர் கூறினார்.திருமலை அன்னமய்யா பவனில் தேவஸ்தான அறங்காவலர் குழுக்கூட்டம் செயல் அதிகாரி தர்மா தலைமையில் நேற்றுமுன்தினம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு பிறகு அறங்காவலர் குழுத்தலைவர் கருணாகர் நிருபர்களிடம் கூறியதாவது:

திருப்பதியில் பக்தர்கள் நடந்து வரும் மலைப்பாதை வன விலங்குகள் பாதிப்பு இல்லாமல் இருக்க மலைப்பாதையில் காளிகோபுரம், ஆஞ்சநேய சுவாமி சிலை, மொக்கால மெட்டு பகுதிகளில் தொடர்ந்து பக்தி பஜனை இசை நிகழ்ச்சி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தாலபாக்க அன்னமய்யா கலாமந்திரம் கட்டுவதுடன், தினந்தோறும் இசை நிகழ்ச்சி நடத்தப்படும். ஏழுமலையான் கோயிலில் துவார பாலகர்களான ஜெய-விஜயபேரி நுழைவு கதவுகளில் ரூ.1.69 கோடி மதிப்பில் தங்க தகடுகள் பதிக்கப்படும். ரூ.4 கோடியில் 4, 5, 10 கிராம்களில் பக்தர்களுக்கு விற்பனை செய்யும் விதமாக தாலி தயாரிக்கப்பட உள்ளது. இதற்காக 4 நிறுவனங்களுக்கு டெண்டர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மடாதிபதி, பீடாதிகள் தலைமையில் திருமலையில் சமீபத்தில் நடந்த தர்ம மாநாட்டில் எடுக்கப்பட்ட அனைத்து முடிவுகளுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இனி ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 24ம் தேதி திருப்பதி நகரம் பிறந்தநாள் தினத்தை தேவஸ்தானத்தின் மூலம் நடத்தப்படும். வன ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று சம்பள உயர்வு செய்யப்படும். வடமலைப்பேட்டையில் உள்ள ஊழியர்களின் வீடுகளில் வளர்ச்சிப்பணிகளுக்காக திருப்பதி புறநகர் மேம்பாட்டு ஆணையத்திற்கு ரூ.8.16 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ரூ.3.89 கோடியில் திருச்சானூரில் மின்விளக்குகள் அமைக்கப்பட உள்ளது.

திருப்பதி அலிபிரியில் கோ பிரதட்சன மந்திரம் அருகே சீனிவாச அனுகிராக யாகம் நடத்த ரூ.4.12 கோடி செலவில் நிரந்தர யாகசாலை கட்டப்பட உள்ளது. இதற்காக தமிழ்நாடு, புதுச்சேரி மாநில தேவஸ்தான நிர்வாக ஆலோசனை குழு தலைவர் சேகர் ரூ.1.8 கோடி நன்கொடையாக வழங்க விருப்பம் தெரிவித்துள்ளார். ரூ.3.19 கோடி செலவில் சப்தகிரி விருந்தினர் மாளிகை புனரமைக்கப்பட்டு நவீனமயமாக்கப்படும். திருமலையில் உள்ள அணைகளில் ரூ.3.15 கோடி செலவில் 682 மோட்டார் பம்புகள் புதியதாக மாற்றப்பட உள்ளது.

திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சுவாமி கோயிலில் தேவி மற்றும் பூதேவி உற்சவ மூர்த்தி சிலைகளுக்கான ரூ.15 லட்சத்தில் தங்க கவசம் தயரிக்கப்பட உள்ளது. திருப்பதியில் ஹரே ராம ஹரே கிருஷ்ணா சாலையில் ரூ.7.5 கோடியில் விளையாட்டு வளாகம் கட்டப்படும். 3.72 கோடியே 98 லட்சம் பகவத்கீதை புத்தகங்கள் அச்சிடப்படும். சுவிம்ஸ் மருத்துவமனையில் பணமில்லா சேவைகள் பரிவர்த்தனை கொண்டு வரப்பட்டு டிஜிட்டல் பணம் கட்டும் வசதி கொண்டு வரப்படும். ஒப்பந்த ஊழியர்களுக்கு சலுகை விலையில் உணவு வசதி செய்து தரப்படும். இதற்காக ₹8.15 கோடியில் கேன்டீன் கட்டப்படும்.

அன்னதானத்தில் ₹3 கோடியில் பொருட்கள் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இலங்கையில் ஏழுமலையான் கோயில் கட்டுவதற்கு பக்தர் ஒருவர் முன்வந்துள்ளார். அங்கு தேவஸ்தானத்தின் சார்பில் தேவையான பங்களிப்பு வழங்கப்படும்.தேவஸ்தானத்தில் பணி புரியும் கீழ்மட்ட ஊழியர்களுக்கு கவுரவ ஊதியம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக பல்வேறு துறைகளில் பணிபுரியும் 9,000 பணியாளர்களுக்கு உயர்த்தப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார். இதில் செயல் அதிகாரி தர்மா, இணை செயல் அதிகாரி வீரபிரம்மம், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் பால சுப்ரமணியம், சங்கர், தமிழ்நாடு, புதுச்சேரி மாநில நிர்வாக குழு தலைவர் சேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

The post திருப்பதி தேவஸ்தானம் பங்களிப்பில் இலங்கையில் ஏழுமலையான் கோயில் appeared first on Dinakaran.

Tags : Seven Hills Temple ,Sri Lanka ,Board of Trustees ,Tirumala ,Karunakar ,Tirumala Tirupati Devasthanam ,Tirumalai Annamayya Bhavan ,
× RELATED இலங்கை கடற்படை தொடர் அட்டூழியம் மீனவர்கள் மீது கொடூர தாக்குதல்