×

தமிழ்நாட்டின் 2 துறைமுகங்களில் சரக்கு கையாளும் திறன் இரட்டிப்பாகி உள்ளது: ஒன்றிய அமைச்சர் சர்பானந்த சோனாவால் தகவல்

சென்னை: பிரதமர் மோடி தூத்துக்குடி துறைமுகத்தில் பல்வேறு திட்ட பணிகளை இன்று தொடங்கி வைக்கிறார். இது தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி, ஒன்றிய துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சர் சர்பானந்த சோனாவால் தலைமையில் நேற்று சென்னையில் நடந்தது.

இதில், அமைச்சர் கூறியதாவது:
கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் உள்ள 2 துறைமுகங்களின் சரக்கு கையாளும் திறன் ஆண்டுக்கு 167 மில்லியன் டன்னில் இருந்து 338 மில்லியன் டன்னாக இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது. கப்பலின் பயண நேரம் 50% வரை குறைக்கப்பட்டுள்ளது. சாகர்மாலா திட்டத்தின் கீழ், கடல்சார் துறையின் புதுமைகளுக்காக சென்னை ஐஐடியில் புத்தாக்க மையம் அமைக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி ₹17,000 கோடி மதிப்பிலான 36 முக்கிய திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார். இவற்றில் ₹7,587 கோடி மதிப்பிலான 6 திட்டங்கள் தமிழ்நாட்டில் உள்ள 2 துறைமுகங்களில் மட்டுமே செயல்படுத்தப்படுகிறது.

தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் சரக்கு பெட்டக முனைய திட்டம் உருவாக்கப்படும். இந்தியாவுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே கப்பல் போக்குவரத்து குறுகிய தூர போக்குவரத்தாக உருவாக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில், ஒன்றிய இணை அமைச்சர் சாந்தனு தாகூர், சென்னை காமராஜர் துறைமுக மேலாண் இயக்குனர் ஐரின் சிந்தியா மற்றும் உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

The post தமிழ்நாட்டின் 2 துறைமுகங்களில் சரக்கு கையாளும் திறன் இரட்டிப்பாகி உள்ளது: ஒன்றிய அமைச்சர் சர்பானந்த சோனாவால் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Union Minister ,Sarbananda Sona ,Chennai ,Modi ,Port of ,Tuticorin ,Union Ports ,Shipping Minister ,Minister ,Dinakaran ,
× RELATED காரைக்குடியில் ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவின் ரோடு ஷோ ரத்து!