×

தமிழகத்தில் பாசன கட்டமைப்பு சீரமைப்பு நதிநீர் பிரச்னை, இணைப்பு திட்டங்களுக்கு நிதி உதவி: ஒன்றிய அமைச்சரிடம் துரைமுருகன் கோரிக்கை மனு

சென்னை: தமிழ்நாட்டின் பன்மாநில நதிநீர் பிரச்னைகள், நதிநீர் இணைப்பு திட்டங்களை செயல்படுத்துதல், பாசன கட்டமைப்புகளை சீரமைக்கும் திட்டங்களுக்கு நிதியுதவி கோருதல் ஆகிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், ஒன்றிய அரசின் ஜல்சக்தி துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டீலை சந்தித்து வழங்கினார். கர்நாடகா காவிரி நீரை தமிழ்நாட்டிற்கு மாதாந்திர அட்டவணைப்படி அளிப்பது குறித்து உச்ச நீதிமன்றம் 16.2.2018 அன்று அளித்த தீர்ப்பின்படி மாதவாரியாக பிலிகுண்டுலுவில் நீரை அளிக்க அறிவுறுத்துமாறு கோரப்பட்டது. கர்நாடகா உத்தேசித்துள்ள மேகதாது திட்டம் தமிழ்நாட்டிற்கு பாதிப்பை விளைவிக்கும் என்பதால் அதற்கு ஒருபோதும் அனுமதி அளிக்கக்கூடாது எனவும் வலியுறுத்தப்பட்டது.

கோதாவரி – கிருஷ்ணா – பெண்ணார் – காவிரி இணைப்பு திட்டத்தை உடனே செயல்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் காலம் தாழ்த்தாமல் எடுக்க வேண்டும். காவிரி – குண்டாறு இணைப்பு திட்டத்தின் முதற்கட்ட பணிகளுக்காக ரூ.6941 கோடி செலவு செய்ய தமிழ்நாடு அனுமதி அளித்து, இதுவரையில் ரூ.245.21 கோடி செலவு செய்துள்ளது. விரைவில் செயல்படுத்த ஏதுவாக தேவைப்படும் ஒன்றிய அரசின் கொள்கை அளவு ஒப்புதலையும், நிதியையும் அளிக்க கேட்டுக் கொள்ளப்பட்டது.

முல்லைப் பெரியாறு அணையிலுள்ள சிற்றணை மற்றும் மண் அணைகளை 27.2.2006 மற்றும் 7.5.2014 தேதியிட்ட உச்ச நீதிமன்ற ஆணைகளின்படி வலுப்படுத்தவும், பிரதான அணையில் கிரவுட்டிங் செய்யவும், தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் கேரள அரசு இதுவரை ஒத்துழைக்கவில்லை. அதற்கு, தேவையான அனுமதிகளை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. தமிழ்நாட்டிலுள்ள 14,306 குளங்கள் பல கட்டங்களில் 2015 முதல், சீரமைக்கப்பட்டு வருகிறது. இத்திட்டங்களுக்கு ஒன்றிய அரசின் பங்கில் நிலுவையில் உள்ள ரூ.212 கோடியை உடனடியாக அளிக்க வலியுறுத்தப்பட்டது. இந்த சந்திப்பின் போது ஒன்றிய அரசின் நீர்வளத்துறை அமைச்சர் சி.ஆர். பாட்டீல், இணை அமைச்சர்கள் சோமண்ணா, ராஜ் பூஷன் சவுத்ரி, நீர்வளத்துறை செயலாளர் தேவ முகர்ஜி உடன் இருந்தனர்.

The post தமிழகத்தில் பாசன கட்டமைப்பு சீரமைப்பு நதிநீர் பிரச்னை, இணைப்பு திட்டங்களுக்கு நிதி உதவி: ஒன்றிய அமைச்சரிடம் துரைமுருகன் கோரிக்கை மனு appeared first on Dinakaran.

Tags : Duraimurugan ,Union Minister ,Tamil Nadu ,Chennai ,Minister ,Water Resources ,Durai Murugan ,Union Minister of State for Water Resources ,CR Patil ,Dinakaran ,
× RELATED தமிழ்நாடு முழுவதும் 3 நாட்களுக்கு...