×

பொக்லைன் உரிமையாளருக்கு ₹18 ஆயிரம் இழப்பீடு

நாமக்கல், பிப்.28: நாமக்கல் ஏஎஸ் பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ரவிக்குமார்(42). இவர், சொந்தமாக பொக்லைன் வாகனம் வைத்துள்ளார். கடந்த ஆண்டு மே மாதம், பொக்லைன் வாகனத்தில் ஆயில் கசிவு ஏற்பட்டதால், அதனை சரி செய்ய ஓமலூரில் உள்ள ஒரு நிறுவனத்தில் பழுது பார்க்க நிறுத்தியிருந்தார். இந்த செலவுகளுக்காக ₹78,650ஐ பொக்லைன் உரிமையாளர் கொடுத்துள்ளார். வாகனத்தில் ஏற்பட்ட பிரச்னையை சரி செய்து விட்டதாக பழுது பார்த்த நிறுவனம் தெரிவித்ததால், வாகனத்தை சொந்த ஊருக்கு எடுத்து வந்து பயன்படுத்திய போது மீண்டும் அதே ஆயில் கசிவு பிரச்னை இருந்துள்ளது.

இதையடுத்து ரவிக்குமார், பழுது பார்த்த நிறுவனத்திற்கு தெரிவித்தார். இரண்டு முறை மெக்கானிக்கை அனுப்பியும் பிரச்னை சரியாகவில்லை. இதுதொடர்பாக கடந்த மார்ச் மாதம் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் ரவிக்குமார் வழக்கு தாக்கல் செய்தார். இப்பிரச்னையை சமரச பேச்சுவார்த்தை மூலம் தீர்த்து கொள்ள மத்தியஸ்தர் பாலசுப்ரமணியத்தை, நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிபதி ராமராஜ் மற்றும் உறுப்பினர் ரமோலா ஆகியோர் நியமனம் செய்தனர். இதையடுத்து பேச்சுவார்த்தையின் மூலமாக பிரச்னை தீர்க்கப்பட்டு பொக்லைன் உரிமையாளருக்கு, வாகனத்தை பழுது பார்த்த நிறுவன உரிமையாளர் ₹18 ஆயிரம் இழப்பீடாக நேற்று வழங்கினார். இதன்மூலம் இந்த வழக்கு சமரச பேச்சு வார்த்தையில் முடித்து வைக்கப்பட்டது.

The post பொக்லைன் உரிமையாளருக்கு ₹18 ஆயிரம் இழப்பீடு appeared first on Dinakaran.

Tags : Namakkal ,Ravikumar ,Pettai ,Bokline ,Omalur ,Dinakaran ,
× RELATED நாமக்கல்லில் தொழிலதிபர் வீட்டில் வருமானவரி சோதனை