×

புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கு வலைத்தளம்: அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தார்

சென்னை: நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை சார்பில் புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கு வலைத்தளம் மற்றும் கைபேசி செயலியை அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தார். தமிழ்நாடு பொது நிதி மேலாண்மை அமைப்பை நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று கருவூலம் மற்றும் கணக்கு துறை சார்பில் சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள க.அன்பழகன் மாளிகை 6வது தளத்தில் தொடங்கி வைத்தார்.

மேலும், புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கு வலைத்தளம் மற்றும் கைபேசி செயலி, அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள் புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சிகிச்சை பெற அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகள், சிகிச்சைகளின் விவர பட்டியல்கள், மருத்துவ காப்பீட்டு அடையாள அட்டைகள் பதிவிறக்கம் செய்யும் வசதிகள் மற்றும் பல விவரங்களை அறிந்துகொள்ளும் வகையில் வலைத்தளம் மற்றும் கைபேசி செயலியையும் துவக்கி வைத்தார்.

கருவூலம் மற்றும் கணக்கு துறையின் பணியாளர்களுக்கு ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை தொடர்பான பயிற்சிகள் வழங்கிடவும், நிதித்துறையின் கீழ் இயங்கும் துறை தலைமைகளின் பயன்பாட்டிற்கும் மற்றும் பொதுவான செயல்பாடுகளுக்காகவும் ₹16.11 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நவீன வசதிகளுடன் கூடிய பயிற்சி கூடம் மற்றும் ₹9.85 லட்சம் மதிப்பீட்டில் நூலகமும் திறக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நிதித்துறை முதன்மை செயலாளர் உதயச்சந்திரன், அரசு சிறப்பு செயலாளர் பிரசாந்த் வடநெரே, கருவூலம் மற்றும் கணக்கு துறை ஆணையர் விஜயேந்திர பாண்டியன் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கு வலைத்தளம்: அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Minister ,Thangam Thanarasu ,CHENNAI ,Thangam Tennarasu ,Department of Finance ,Human Resource Management ,Tamil Nadu Public Fund Management System ,Minister Thangam ,Southern Government ,Dinakaran ,
× RELATED அமைதிப்பூங்காவான தமிழகம் என மீண்டும்...