×

சிர்கான் (Zircon) எனப்படும் வீனஸ் ரத்தினம்

வைரத்துக்கு மாற்றாக பயன் படக்கூடிய இந்த ரத்தினத்தைத் துலா ராசி மற்றும் ரிஷப ராசிக்காரர்கள் அணியலாம். இந்த ராசிகளின் அதிபதி சுக்கிரனாக இருப்பதனால், சுக்கிரனுக்கு உகந்த வைரத்தை அணிய வசதி இல்லாதவர்கள், சிர்கான் வாங்கி அணியலாம். சிர்கான் என்பது, கடகராசியின் ராசிக் கல் ஆகும். மிதுனம், கன்னி, மகரம், கும்பம் என புதன் மற்றும் சனிராசிக் காரர்களும் அணியலாம். இந்த உபரத்தினம் பெரும்பாலும், வைரம் போல வெண்மை நிறத்தில் கிடைத்தாலும், நீல நிறத்தில் கிடைக்கக்கூடியதற்கு மதிப்பு அதிகம். அதேபோல், இதன் விலையும் அதிகம்.

நீலநிற சிர்கான்

நீலநிற சிர்கான், பெரிய அளவில் பணம் மற்றும் அசையா சொத்து, அசையும் சொத்து போன்றவற்றை அணிபவருக்குத் தரும். இதனால், நீலநிற சிர்கான் வாங்கி பலரும் அணிகின்றனர். பணம் தவிர, மனம் செம்மைப்படவும், இன்ப துன்பங்களால் அலைக்கழிக்கப்படாது, மனம் அமைதியான நிலையில் இருக்கவும், ஆன்மிகத்தில் ஈடுபாடு கொள்ளவும், உலகரீதியான துன்பங்களில் சிக்கிக் கொண்டு, மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை போன்ற ஆசைகளில் தங்கள் வாழ்வின் இன்பங்களை இழந்துவிடாமல் இருக்கவும், சிர்கான் அணியலாம்.

யார் அணியக்கூடாது?

சிர்கானை, சிம்ம ராசிக்காரர்கள் ஒரு போதும் அணியக்கூடாது. சுக்கிரனுக்குரிய சிற்கான் உபரத்தினத்தை அதற்கு பகை கிரகமான சூரிய ராசியில் பிறந்தவர்கள் அணிவதால், எதிர்விளைவுகள் ஏற்படும்.

சிர்கானின் பக்கவிளைவுகள் ஏதேனும் உண்டா?

யுரேனியம் போன்ற தாதுக்கள் சிறிதளவு இருப்பதனால், வெயிலில் இதன் நிறம் மாறக்கூடும். மேலும், இவை மின்காந்தசக்தி உடையதாகவும் இருக்கக் கூடும். எனவே, இத்தகைய ரத்தினங்களை குறிப்பிட்ட வெப்பநிலையில் வைத்திருக்க வேண்டும். சிர்கான் சேராதவர்களுக்கு, உடம்பில் ஒவ்வாமை தோன்றும். தோலில் அரிப்பு, தடிப்பு, எரிச்சல் போன்றவை ஏற்படும். அவர்கள் சரியான மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக் கொண்டு, பிறகு சிர்கான் அணியாமல் இருக்க வேண்டும்.

எந்த விரலில் அணிய வேண்டும்?

சிர்கானை, வளர்பிறை நாட்களில் வெள்ளிக் கிழமை அன்று, குலசாமி முன்பு வைத்து பூஜை செய்து, வலது கை நடுவிரலில் அணிந்து கொள்ளவேண்டும். தங்கத்தில் பதித்து அணிவதைவிட, வெள்ளியில் பதித்து அணிவதே சாலச் சிறந்ததாகும்.

சிர்கான் ரத்தினத்தால் ஆபத்து உண்டா?

சிர்கானின் துகள்கள் ஆபத்தானவை. இதன் மூல தாதுவான சிர்கானியம் டெட்ராக்ளோரைடு ஒவ்வாமையை ஏற்படுத்தும். வைரத்தை போலவே இதன் துகள்கள் வயிற்றுக்குள் சென்றுவிட்டால், வயிறு புண்ணாகிவிடும். குடலை அரித்து விடும். மூச்சுக்குழாய்க்குள் துகள்கள் சென்றால், மூச்சுத் திணறல், ஆஸ்துமாப் போன்றவை தோன்றும். எனவே, சிர்கான் வாங்கும்போது நல்ல நவரத்தின சாஸ்திரியிடம் ஆலோசனை பெற்று தரமான ரத்தினத்தைப் பார்த்துக் கேட்டு வாங்க வேண்டும்.

என்னென்ன நோய்கள் குணமாகும்?

மயக்கம், தலைசுற்றல், தசைப்பிடிப்பு, கைகால் வலி, முதுகுவலி போன்றவை சிர்கான் அணிவதால் குணமாகும். சமூக அந்தஸ்து உயரவும், நிதி நிலைமை உயரவும், சிர்கான் உதவும். சுக்கிரன், அழகு மற்றும் சொகுசுக்கு உரிய கிரகம் ஆகும். சிர்கான் அணிந்தவர்களுக்கு, சுக்கிரனின் யோக பலன் கிடைக்கும். இதனால் அதிர்ஷ்டம், புகழ், சமூக அந்தஸ்து ஆகியவை கிடைக்கும்.

சிர்கான் கற்கள் எங்கு கிடைக்கும்?

சுமார் 2000 வருடங்களாக சிர்கான் ரத்தினத்தை, நகையில் பதித்து மக்கள் அணிந்து வருகின்றனர். லங்கா, கம்போடியா, மியான்மர், வியட்நாம் போன்ற நாடுகளின் ஆற்றங்கரைப் பகுதியில் சிர்கான் நிறைய கிடைக்கின்றது. கிரானைட் பாறைகளிலும், சிர்கான் கிடைக்கின்றது. மிகக் கவனமாக அதனை பிரித்தெடுக்க வேண்டியிருப்பதினால், செலவு அதிகம்.

ஆரஞ்சு வண்ண சிர்கான்

நீலநிற சிர்கான் போன்றே ஆரஞ்சு நிற சிர்கான் ரத்தினங்களும் பழங்காலம் தொட்டு பழக்கத்தில் உள்ளன. ஆரஞ்சு நிறக்கற்கள் காயம், நோய், திருட்டு, மின்னல், இடி, மழை தாக்குதல் போன்றவற்றிலிருந்து மனிதர்களை காக்கும் என்ற நம்பிக்கை பல நூற்றாண்டுகளாக நிலவிவருகின்றது. ஆரஞ்சுநிற சிர்கான் அணிந்தவர்கள், தங்களிடம் ஆன்மிக சக்தி இருப்பதாக உணர்வார்கள். தங்களைப் பிரபஞ்ச சக்தியுடன் இணைத்துக் கொள்வார்கள். முடிவில்லாத ஒரு ஆத்ம பயணத்தில் ஈடுபட்டு இருப்பதாக, நம்பி இறைவனிடம் தஞ்சம் புகுவர். உலக இன்பங்களை எதிர்த்து நிற்பார்கள்.

பெண்களுக்கு நன்மை செய்யும் சிர்கான்

பெண்கள் இந்த ரத்தினத்தை அணியும்போது கர்ப்பப்பை தொடர்பான பிரச்னைகள் அவர்களை விட்டு நீங்கும். மனச்சோர்வு அகலும். தூக்கமின்மை விலகி நல்ல தூக்கம் வரும். வெர்டிகோ என்ற மயக்கம், தலைசுற்றல் போன்ற பயணநோய் தாக்காது. மூட்டுவலி, தலைவலி போன்றவை நீங்கி நல்ல ஆரோக்கியமான உடல்நலமும், மனநலமும் நிறைந்தவராக வாழமுடியும்.

சுத்தம் செய்வது எப்படி?

சிர்கானை தூய்மையான தண்ணீரில் கங்காஜலத்தில் அல்லது வேறு ஏதேனும் புண்ணிய நதி தீர்த்தம் இருந்தால், அந்தத் தண்ணீரில் சுத்தம் செய்து, அணியலாம். அப்போது, கறந்த புது பசும்பாலில் சிர்கான் பதித்த மோதிரத்தை 10 நிமிடம் போட்டு வைத்து, பிறகு தண்ணீரில் அலசிவிட்டு அணியலாம். தேன் அல்லது நெய்யில் 10, 15 நிமிடங்கள் வைத்திருந்து பிறகு தண்ணீரில் அலசிவிட்டு அணியலாம். அணியும் முன்பு, மகாலட்சுமியை வணங்கி அணிய வேண்டும். ஏனென்றால், சுக்கிரனுக்குரிய தேவதை பெண் தெய்வம் என்பதால், சிலர் துர்க்கையை வணங்குவர். பொதுவாக, மகாலட்சுமியை வணங்கி அணிவது நல்ல பண வரவை கொடுக்கும்.

The post சிர்கான் (Zircon) எனப்படும் வீனஸ் ரத்தினம் appeared first on Dinakaran.

Tags : Venus ,
× RELATED ஜோதிட ரகசியங்கள்