×

புளியந்தோப்பு ஆடு தொட்டியில் 300 கிலோ இரும்பு திருடி விற்க முயன்றவர் கைது

பெரம்பூர்: ஓட்டேரி காவல் நிலைய குற்றப்பிரிவு தலைமை காவலர் மகேந்திரன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் மாலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, ஓட்டேரி மேம்பாலம் குக்ஸ் ரோடு பகுதியில் உள்ள பழைய இரும்பு கடை ஒன்றில், ஒரு மினி வேனில் இருந்து இரும்பு பொருட்கள் இறக்குவதை கண்டனர். சந்தேகமடைந்த அவர்கள் விசாரணை செய்தபோது, இரும்பு பொருட்கள் புளியந்தோப்பு ஆடு தொட்டியில் இருந்து திருடி எடுத்து வரப்பட்டது தெரியவந்தது.

புளியந்தோப்பு ஆடுதொட்டியில் நவீன இறைச்சிக்கூடம் திறப்பதற்காக சில ஆண்டுகளுக்கு முன்பு இரும்பு பொருட்களை வாங்கி வைத்திருந்தனர். பிறகு அந்த இறைச்சி கூடத்தை திறக்க கூடாது என வழக்கு போட்டதால் குறிப்பிட்ட இரும்பு பொருட்கள் அனைத்தும் துருபிடித்த நிலையில் அங்கேயே போடப்பட்டுள்ளன. இவற்றை அவ்வப்போது சிலர் கொஞ்சம் கொஞ்சமாக திருடி வெளியே கொண்டு போய் விற்று வருகின்றனர். அந்த வகையில் நேற்று முன்தினம் ஆன்லைன் ஆப் மூலம் மினி வேன் ஒன்றை புக் செய்து அதை ஆடு தொட்டிக்கு வரவழைத்து இரும்பு பொருட்களை ஏற்றி ஓட்டேரி பகுதிக்கு கொண்டு வந்து விற்க முயற்சி செய்தது தெரிய வந்தது.

இதை தொடர்ந்து, மினி வேனில் இருந்த 300 கிலோ இரும்பு பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இரும்பு பொருட்களை திருடிக் கொண்டு வந்த புளியந்தோப்பு ஜெ.ஜெ. நகர் 7வது தெருவை சேர்ந்த மணிமாறன் (எ) தொட்டி மணி (25) என்பவரை கைது செய்தனர். இவர் மீது ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன.

The post புளியந்தோப்பு ஆடு தொட்டியில் 300 கிலோ இரும்பு திருடி விற்க முயன்றவர் கைது appeared first on Dinakaran.

Tags : Perambur ,Chief Constable ,Mahendran ,Otteri Police Station Crime Branch ,Otteri Mempalam Cooks Road ,
× RELATED சம்பளம் கேட்ட ஊழியருக்கு அடி: உரிமையாளர் உள்பட 2 பேர் கைது