×

வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு பிரசார வாகனங்கள்: தலைமை தேர்தல் அதிகாரி தொடங்கி வைத்தார்

சென்னை: இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, வரும் நாடாளுமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு, சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 3 நாடாளுமன்ற தொகுதிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் வாக்காளர்களை சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனை இயந்திரங்களின் செயல்பாடுகள் குறித்தும், வாக்களிப்பதன் அவசியம் குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மூன்று விழிப்புணர்வு பிரச்சார வாகனங்களை தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, மாவட்ட தேர்தல் அலுவலர் ராதாகிருஷ்ணன், ரிப்பன் மாளிகை வளாகத்தில் நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

பின்னர், தமிழ்நாடு தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு நிருபர்களிடம் கூறியதாவது:
பொதுமக்கள் வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும், குறிப்பாக வி.வி பேட் இயந்திரத்தின் செயல்பாடு குறித்தும் தெரிந்து கொள்வதற்காக இந்த விழிப்புணர்வு வாகனங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. பணியிட மாற்றங்கள் எங்கெல்லாம் செய்யப்படவில்லையோ அதை மாற்றுவதற்கு ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாற்றப்படாத இடங்களிலும் விரைவாக மாற்ற தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலோடு விளவங்கோடு சட்டமன்றத் தொகுதிக்கும் தேர்தல் நடத்துவது குறித்து தேர்தல் ஆணையம் என்ன முடிவு எடுக்கிறதோ அதன் அடிப்படையில் செயல்படுத்தப்படும். விளவங்கோடு தொகுதி காலியாக உள்ளது குறித்து சட்டமன்றம் மற்றும் சபாநாயகரிடம் இருந்து வரக்கூடிய அறிவிப்பை பரிசீலித்து தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பப்படும்’’, என்றார்.

பின்னர் மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் பேசியதாவது:
சென்னையில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளிலும் ஏற்றத்தாழ்வுகள் இருக்கும். குறிப்பிட்ட தொகுதிகள் மற்றும் பகுதிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்த விழிப்புணர்வுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கல்லூரிகள், குடியிருப்பு சங்கங்களில் ‘‘வாக்களிப்பது வாக்காளருடைய உரிமை மட்டும் அல்ல கடமை’’ என்பதை உணர்த்தும் நோக்கத்தில் விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பொதுமக்கள் அனைவரும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் வாக்களிப்பது எப்படி என்பதை அறிந்து, எதிர்வரும் 2024 நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் தவறாது வாக்களித்து தங்களின் ஜனநாயக கடமையாற்ற கேட்டுக் கொள்ளப்படுகிறது, என்றார்.

The post வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு பிரசார வாகனங்கள்: தலைமை தேர்தல் அதிகாரி தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Chief Electoral Officer ,Chennai ,Election Commission of India ,Parliamentary General Election ,Chennai District ,Dinakaran ,
× RELATED விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது..!